சிங்களம் மூலம் தமிழையும், தமிழ் மூலம் சிங்களத்தையும் கற்பதற்கான ஒரு நூல்

நூலறிமுகம்

நூல் : சிங்கள, தமிழ் மொழி பேச்சுச் சூழல்

நூலாசிரியர் : கலைமாமதி, கலாபூஷணம்

அல்ஹாஜ் அலியார் முஸம்மில்

வெளியீடு : போட்டோ றியோ, கல்முனை.

விலை : ரூ.300.00

நூலறிமுகம் : அட்டாளைச்சேனை எஸ்.எல். மன்சூர்

சிங்களம் மூலம் தமிழையும், தமிழ் மூலம் சிங்களத்தையும் கற்பதற்கான ஒரு நூலை அண்மையில் வெளியிட்டிருந்தார் பிரபல சிங்கள தமிழ் மொழியிலாளரும், முன்னாள் சிங்களப்பாடத்திற்கான ஆசிரியர் ஆலோசகராகவும் பணியாற்றி தற்போது ஓய்வுற்றும் சோர்ந்திராது அரச கரும மொழிகள் திணைக்களத்தின் போதனாசிரியராகவும், பிரபல ஊடகவியலாளராகவும், இந்நாட்டின் மொழிரீதியான பிளவுகளை இணைக்கும் இருமொழிகளுக்கும் பாலமாகவும் அமைந்துள்ள கலாபூஷணம் மற்றும் கலைமாமதி போன்ற விருதுகளுக்கும் சொந்தக்காரரான அல் ஹாஜ் ஏ. முஸம்மில் அவர்களால் எழுதப்பட்டுள்ள நூல் 'சிங்கள, தமிழ் மொழி பேச்சுச் சூழல்' என்பதாகும்.

இலங்கையைப் பொறுத்தளவில் இருமொழிகளான சிங்களமும், தமிழும் பிரதான மொழிகளாக காணப்படுகின்றன. இருமொழி பேசும் சமூகங்களிடையே கடந்தகால கசப்பான விடயங்கள் தொடராதிருக்க இரு மொழிகளையும் இரு சமூகத்தவரும் பேசுகின்றபோது தங்களிடையே புரிந்துணர்வு ஏற்பட்டு பிரச்சினைகளிலிருந்து விலகிக் கொள்ளலாம் அந்த நோக்கை முழுமையாகப் புரிந்துகொண்ட அலியார் முஸம்மில் இந்த நூலை பிரசவித்திருப்பது பராட்டத்தக்கதாகும்.

'சமாதான சமூகம் ஒன்றிற்காக..' எனும் தலைப்பில் இந்நூலைப்பற்றி பேராசிரியர் ஜே.பி. திசாநாயக்க கூறுகையில் 'இருசமூகங்களுக்குமிடையிலான ஒற்றுமையை ஏற்படுத்துவதற்குரிய தீர்வாகவும், புரிந்துணர்வுடன் தமக்குள் ஏற்படுத்திக் கொள்ளக் கூடிய நிரந்தரத் சமாதானத்திற்குமான ஒரு நூலாகவே இதனைப் பார்க்கின்றேன். மொழி ஒன்றைக் கற்பது என்பது இலகுவான கருமமல்ல. ஆயினும் அதற்கான ஆர்வத்துடன் முறையான பாடத் தொகுப்பைக் கையாளும் ஒருவர் இச்சவாலை மிக விரைவாக வெற்றி கொள்வார். அந்தச் சவாலை இலகுபடுத்தி நூலாக்கம் செய்துள்ள ஏ. முஸம்மில்' என்று கூறுகின்றார் பேராசிரியர்.

அம்பாரை ஆசிரிய கல்வி நிலைய முகாமையாளர் டி.டி. குமாரரத்தின 'சிறந்த கைநூல்' எனும் தலைப்பில் 'காலத்தின் தேவையறிந்து நிறைவேற்றியுள்ள இந்நூல் சிங்கள தமிழ்மொழியைக் கற்க விழையும் சகலருக்கும் பொருந்தும் வகையில் வாசகர்களுடைய கைகளில் தவழவிட்டுள்ளார் அலியார் முஸம்மில்' என்று கூறுகின்றார்.

'தென்கிழக்குப் பிராந்தியத்தின் சொத்து' எனும் தலைப்பில் தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் மொழித்துறை பேராசிரியர் றமிஸ் அப்துல்லா தன்னுடைய பாராட்டுரையில் 'மொழியில் ஒலி முக்கிய பங்கு வகிக்கின்றது. உச்சரிப்பு பிரதானமாக அமைகின்றது. இவ்விடயம் சம்பந்தப்பட்ட பேச்சுச் சூழலில் தமிழும், சிங்களும் கையாளப்பட வேண்டிய முறை குறித்து அறிவூட்டும் ஒரு கையேடாகவே அலியார் முஸம்மிலின் நூலைப் பார்க்க முடியும்' என்கிறார் கலாநிதி றமீஸ் அப்துல்லா. மேலும் ஓய்வுபெற்ற ஆசிரியர் கலாபூஷணம் யூ.எல். ஆதம்பாவா அவர்கள் இந்நூல் பற்றியும், நூலாசிரியரின் சேவை பற்றியும் விலாவாரியாக கூறுகின்றார்.

பனிரெண்டு தலைப்புக்களில் உள்ளடக்கப்பட்டுள்ள இந்நூலினைப் படிக்குமுன் இந்த உச்சரிப்புக்களை நன்கு நிலைவிற் கொள்ள வேண்டிய விடயங்களை அனைவரும் விளங்கிக் கொள்ளும் வகையில் அட்டவணைப் படுத்தியுள்ளமை சிறப்பானதாகும். மேலும், இலகுவாக சிங்களம், தமிழ் பேசும் வண்ணம் வீட்டுச் சூழல், அலுவலகச் சூழல், பாடசாலைச் சூழல், சந்தைச் சூழல், பண்ணைச் சூழல் போன்றவற்றில் எதிர்கொள்ளும் மொழிச்சவாலை வெற்றிகரமான முறையில் கொண்டு செல்ல வேண்டிய அதிகமான வாக்கியங்கள், வசனங்களை மிகவும் ஆர்வத்துடன் கற்பதற்காகவேண்டிய அனைத்து எத்தனங்களையும் உட்படுத்தி மேற்படித் தலைப்புக்களில் இலகுநடையில் விளக்கமாகக் கூறியுள்ளார் நூலாசிரியர் அல் ஹாஜ். ஏ. அலியார் அவர்கள்.

பெயர்ச்சொற்கள், வினைச் சொற்கள், அறிவுறுத்தல்கள் போன்ற தலைப்புக்களிலும் பல்வேறு விடயங்களை இரத்தினச்சுருக்கமாக தந்துள்ள இந்நூல் சிங்களத்தை பேச விளையும் அனைத்து தமிழ்பேசும் மக்களுக்கும் நன்மை விளைவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளமை மிகமிக சிறந்ததாகும். குறிப்பாக இன்றைய சூழலில் அரச ஊழியர்கள் இரண்டாம் மொழிக்கான ஊக்குவிப்புக்களை பெறவேண்டியுள்ளதால் இந்நூலில் அதிக பலனை அடைவதற்கான நிறைந்தவழிகளைக் காணக்கூடியதாகவும் இந்நூல் காண்படுகின்றது.

ஏற்கனவே ஐந்து நூல்களுக்குச் சொந்தக்காரரான இந்நூலாசிரியர் இன்னும் பல நூல்களை வெளிக் கொணரவுள்ளதாகவும் இந்நூலில் குறிப்பிடுகின்றார். இலங்கையின் தேசிய பத்திரிகைகளில் இரண்டாம் தேசிய மொழியின் அவசியம் பற்றியும் பல்வேறு கட்டுரைகளை வரைந்துள்ள நூலாசிரியர், இந்நூலை இலங்கை சோசலிசக் குடியரசின் துணிச்சல் மிக்க வீரபுருஷர் மக்கள் தலைவர் அதி சிரேஷ்ட சிந்தனைனயாளர், விஸ்வ கீர்த்தி ஸ்ரீ திறிசிங்களாதேஸவர, அதிமேதகு சானாதிபதி உத்தமர் திருவாளர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு சமர்;;ப்பணம் செய்கின்றமை விசேடமாகும்.

மொத்தத்தில் இந்நாட்டில் வாழும் இருமொழிகளையும் பேச விருப்பம் கொண்டுள்ள அனைத்துத் நபர்களுக்கும் இந்நூல் சிறந்த பலனைத் தரும். அத்துடன் சிங்களச் சொற்களை இலகுவாக உச்சரிக்கும் வகையில் தமிழிலும், சிங்களத்திலும் வழங்கப்பட்டுள்ளமை இந்நூலின் சிறப்பினை மேலும் உயர்த்துகின்றது. கல்முனை அலியார் முஸம்மிலின் இத்தகைய முயற்சிக்கு நாமும் பாராட்டுவோம். பலனடைவோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :