த.நவோஜ்-
இத்தனை காலமும் தீர்வு விடயத்தில் கர்வத்துடன் பேசிய அரசாங்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இந்திய விஜயத்தின் பின்னர் இணைந்து செயற்படத் தயார் என்ற பசப்பு வாத்தைகளைக் கூறி எங்களை வைத்து எமது தமிழ் மக்களுக்கு பூச்சாண்டி காட்ட நினைக்கின்றது. என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணித்தலைவர் கிருஸ்ணபிள்ளை சேயோன் தெரிவித்தார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கல்குடாத் தொகுதிக் கிளை புனரமைப்பு கூட்டம் வாழைச்சேனை லயன்ஸ் கழக மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை மாலை இடம்பெற்ற போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான மா.நடராசா, கி.துரைராஜசிங்கம், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஆர்வளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்!
எமது தமிழர் வரலாறு எம் அனைவரும் அறிந்ததே ஆனால் தமிழரசுக் கட்சியைப் பொருத்தமட்டில் எமது செயற்பாடுகள் அறியப்படாமல் இருக்கலாம். உண்மையில் எமது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கென்றொரு வரலாறு, தார்ப்பரியம், தனித்துவமான ஒரு கொள்கை இருக்கின்றது. அந்தக் கொள்கையின் பால் நாங்கள் அணி திரள வேண்டும் என்கின்ற உண்மையான தத்துவம் இருக்கின்றது.
எமது வரலாறு பற்றி நான் கூறத்தேவையில்லை அவை பற்றி எமது மக்கள் நன்கு அறிவார்கள். இவ்வாறு நாம் எமது இனவிடுதலைப் போராட்டத்தில் எமது தமிழ் அரசுக் கட்சி தனது பாதையை வகுத்துக் கொண்ட போதுதான் எங்களுடைய இலங்கை இந்திய ஒப்பந்தம் இடம்பெற்று அதன் பிற்பாடும் நாம் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்டு சகோதரப் படுகொலைகளும் இடம்பெற்று எமது இன விடுதலைக்காக ஆயுதமேந்திப் போராடிய பல குழுக்களுக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டு முடிந்த தருவாயில் எமது தேசியத் தலைவரினுடைய உன்னதமான சிந்தனைக்கு அப்பால் கிழக்கிலங்கை ஊடகவியலாளர்களின் பாரிய பங்களிப்புடன் இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாகியது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு அன்று உருவாகிய படி நிலையில் இருந்து இன்று எமது இன விடுதலைப் போராட்டம் என்பது இன விடுதலைப் பிரச்சனை என்பது எங்களுடைய கையில் இருந்து விலகி சர்வதேச சிந்தனைக்குள் உள்வாங்கப்பட்டவர்களாக இருக்கின்றோம். இதனூடாகப் பயனித்து எமது இலக்கினை எமது இனவிடுதலை தீர்வினை எமது இதர விடயங்களை நாம் எவ்வாறு அடையப் போகின்றோம் என்பதை தான் எமது தலைவர்கள் இராஜதந்திர ரீதியில் முன் நகர்த்திக் கொண்டிருக்கின்றார்கள்.
உண்மையில் எமது போராட்டம் எவ்வாறு நகர்த்தப்பட்டிருக்கின்றது என்றால் மிக மோசமான உலக வரலாற்றில் இடம்பெறாத உலகம் கண்டிராத ஒரு இனத்தின் விடுதலைக்கு எதை இழக்க வேண்டுமோ அதற்கு மேலாக நாம் முள்ளிவாய்க்கால் எல்லைவரையும் இழந்திருந்தோம். அதன் பிற்பாடு தென்னிலங்கையும் இந்த இலங்கை அரசாங்கமும் இந்த அரசாங்கத்திற்கு உதவி புரிந்த அந்த நாடுகளும் நினைத்திருந்தது தமிழர்கள் விடயம் இத்துடன் முடிவுற்றது இனி மகிந்த சிந்தனை என்ற விடயத்திற்கு எமது மக்களை ஏமாற்றிவிடலாம் என்று.
ஆனால் எமது மதிநுட்பமான தலைவர்கள் இராஜதந்திர ரீதியில் போராட்டங்களை முன்னெடுப்பதற்காக மக்களினுடைய ஆதரவைக் கேட்டார்கள். இந்த இலங்கை அரசாங்கம் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை ஒரு பிரித்தாழும் தந்திரத்தில் தான் கையாண்டு வந்தது. அவ்வாறு அந்த தந்திரத்தை மீண்டும் பயன்படுத்தியதற்கு சில முகவர்களையும் தேர்ந்தெடுத்தார்கள்.
அவர்கள் வேறு யாருமல்ல எமது இனத்திற்குள் இருக்கின்ற எங்களைக் காட்டிக் கொடுப்பவர்களையே தெரிவு செய்தது. இவ்வாறு பிரிக்கப்பட்டவர்களை வைத்து 2010ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை மிகவும் அபாயமான காலகட்டத்தில் முகம் கொண்டு அதில் எமது மக்களால் இந்த மாவட்டத்தில் இருந்து மூன்று தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள்.
இதில் வடகிழக்கு பூராகவும் 14 உறுப்பினர்களை தெரிவு செய்திருந்தாலும் துரதிஷ்டவசமாக ஒரு துரோகியும் அதில் இணைக்கப்பட்டு அவர் அரசாங்கத்தின் பக்கம் தாவிவிட்டார். இவ்வாறு இருக்கின்ற நேரத்தில் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினை எவ்வாறு அப்புறப்படுத்த முடியும். எவ்வாறு இதன் செயற்பாட்டை இடைநிறுத்த முடியும் அவ்வாறு இடைநிறுத்தினால் எவ்வாறு நெருக்குதலுக்குள்ளான இந்த தமிழர் பிரச்சனையை எவ்வாறு முடக்கலாம் என இந்த அரசாங்கம் திண்டாடிக்கொண்டிருக்கின்றது.
இவ்வளவு நாளும் திமிராக பேசிக்கொண்டு திரிந்த பொருளாதார அமைச்சர் அவர்கள் அண்மையில் நாம் வடமாகாண சபையுடன் இணைந்து செயற்பட தயாராக இருக்கின்றோம் என்று தெரிவித்துள்ளார். அண்மையில் எமது தலைவர்கள் குழு இந்தியாவிற்குச் சென்று பாரத பிரதமர் மோடி அவர்களை சந்தித்ததன் விளைவாக அவர்கள் இவ்வாறான பசப்பு வார்த்தைகளை கூறி வருகின்றார்கள்.
இந்த அரசாங்கமானது எங்களை வைத்து எமது மக்களுக்கு பூச்சாண்டி காட்ட நினைக்கின்றது. ஆகவே நாம் இவற்றுள் எவ்வாறு எமது விடயங்களைக் கையாளப் போகின்றோம் என்பதுடன் எமது தலைமைத்துவமும் இதற்காக அணுதினமும் செயற்பட்டவாறே இருக்கின்றது. எமது தலைமைத்துவங்களும் மதிநுட்ப ரீதியில் செயற்படுகின்ற வேளையில் எமது கட்டமைப்புகளை நாம் சரியாக மேற்கொள்ளும் போது எமது இலக்கினை அடைந்து கொள்ள முடியும்.
அடுத்து இந்த 13வது திருத்தச் சட்டத்தினை எடுத்தக் கொண்டால் இதில் எமது மாகாண சபைகளுக்காக உள்ளடக்கப்பட்ட விடயங்களைக் கருத்திற் கொண்டு பல கோணங்களில் பார்த்த பின்புதான் நாம் கடந்த கிழக்கு மாகாண சபையில் போட்டியிட வேண்டி நேரிட்டது. எங்களுக்குரிய தீர்வுக்கான விடயங்கள் அதில் இல்லாவிட்டாலும் எமது தாயகக் கோட்பாடு வடக்கு கிழக்கு இணைந்த தாயகம் என்பதால் பிரிந்த இந்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிட முடியாது என்ற தார்ப்பரியத்துடன் இருந்தோம் பின்னர் நாம் எமது பிரதேசத்தில் எமது தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு மக்கள் மத்தியில் இருக்கும் ஆதரவை வெளிப்படுத்த சந்தர்ப்பம் தேவைப்பட்டது.
எமது அரசியல் கட்டமைப்பிற்குரிய அம்சங்களை நாம் இழப்பதற்கு வாய்ப்புகள் தோன்றின. ஏனெனில் 2008ம் ஆண்டு நடாத்தப்பட்ட மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கமே ஆட்களை வைத்து இந்த அரசாங்கமே தனக்குரிய முதலமைச்சரைத் தெரிவு செய்தது. எனவே இந்த இடைவெளியை இவ்வாறே நாம் விட்டோம் என்றால் தமிழ் மக்களுடைய விசுவாசமான பிரதிநிதிகள் இந்த இடத்தில் இருக்க முடியாது என்ற அந்த ஒரு நோக்கத்தில் மாத்திரம் தான் சென்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டது என எனது அறிவுக்கு எட்டியவரை புலப்படுகின்ற உண்மை.
அவ்வாறுதான் நாம் போட்டியிட்டோம். ஆனால் எமது கொள்கை பிரிந்த கொள்கை அல்ல வடகிழக்கு இணைந்த தாயகம், சுயநிர்ணயம், தேசியம் என்ற கொள்கையின் அடிப்படையிலேயே இருக்கின்றது. உண்மையில் எமது தமிழரசுக் கட்சிக்கென்று ஒரு கட்டமைப்பு இருக்கின்றது. இதில் பல்வேறு புத்திஜீவிகள், அறிவாளிகள், பல மாநாடுகளைப் பார்த்தவர்கள், பல போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் இருக்கின்றார்கள். எனவே எமது கட்சியின் செயற்பாடுகள் இனிவரும் காலங்களிலும் சிறப்பாக இயங்க வேண்டும். இதற்கு இளைஞர் அணி சார்பில் எங்களாலான உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் நாம் வழங்கிக் கொண்டிருப்போம்.
எமது இளைஞர் அணி உருவாக்கப்பட்டு பல சொல்லத்தக்க செயற்பாடுகளை செய்து கொண்டிருக்கின்றது. இளைஞர் அணியின் செயற்பாடுகள் சரியான முறையில் கட்சியின் கொள்கைகளை தாங்கிக் கொண்டிருக்கின்றது. எமது செயற்பாடுகளை பார்த்து தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இதர கட்சிகளுக்குள் கேள்விகள் எழலாம். ஆனால் இது எமது கடமை, எமது இனத்திற்காக நாம் மேற்கொள்ளும் சேவை, இதனை நாம் எமது தலைவரின் வழி நடத்தலின் கீழ் சரியாக தொடர்ந்தும் மேற்கொள்வோம்; என்றார்.
_Copy1.jpg)
_Copy1.jpg)
_Copy1.jpg)
0 comments :
Post a Comment