13ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ், எமது மக்களுக்கு நிரந்தரத் தீர்வைப் பெற்றுக் கொடுக்கலாம் என்ற மனநிலையில் நாம் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடவில்லை என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதுதோடர்பாக கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அவர், நாங்கள் 13ஆவது திருத்தச் சட்டம் தந்த உரித்தின் கீழ் மக்களுக்கு அரசியல் ரீதியான நிரந்தரத் தீர்வைப் பெற்றுக் கொடுக்கலாம் என்ற மனோநிலையுடன் தேர்தலில் இறங்கவில்லை. மாறாகப் 13ஆவது திருத்தச் சட்டத்தில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன எனப் பகிரங்கமாகவே மக்களுக்கு நாம் தெரியப்படுத்தியிருந்தோம்.
13ஆவது திருத்தச் சட்டம் இனப்பிரச்சினைத் தீர்விற்கான முதற்படியாக மட்டுமே அமைகிறது. அதனை நீக்குவோமாயின் எமக்கு எந்தவொரு பிடியும் இல்லாது போய்விடும்.
ஏனென்றால் நாம் வாழ்வது ஒற்றையாட்சியின் கீழாகும். ஒற்றையாட்சியின் கீழ் பெரும்பான்மைப் பலம் உடையவர்களால் அரசை ஆட்டிப்படைக்க முடியும். பிராந்திய மக்களின் உரித்துக்களைப் புறக்கணிக்க முடியும். எனவே குறைபாடுகளைப் புரிந்துகொண்டே இத்தேர்தலில் நின்றோம். அது பற்றித் தேர்தல் காலத்திலும் தேர்தல் விஞ்ஞாபனங்களிலும் குறிப்பிட்டிருந்தோம்.
ஆகவே 13ஆவது திருத்தச் சட்டம் எமக்கிருக்கின்ற ஒரு படியே ஒளிய பதில் அல்ல. அதனைத் தற்பொழுது முழுமையாக நடைமுறைப்படுத்தினால் போரினால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்குப் பல்வேறு நன்மைகள் கிட்டும். வடக்குக் கிழக்கில் ஒரு நிரந்தரத் தீர்வு எட்டுவதற்கு முன்னர் இராணுவத்தின் உதவியுடன் குடிப்பரம்பலில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்த மத்திய அரசாங்கம் முனைகின்றது. ஒரு வகையில் தற்போதைய அரசாங்கம் நாட்டாமை போல் செயற்படுகின்றது. எனவே அவர்களிலும் பார்க்க பலம் கூடியவர்கள் கூறினால் மட்டுமே செவிசாய்ப்பர்.
இதனைக் கூறாவிட்டாலும் நடப்பவை மூலம் எங்களால் அவற்றை அனுமானிக்க முடியும். அதாவது வெளிநாட்டு உள்நாட்டு உந்துதல்கள் இன்றி தமிழருக்கு நீதி கிட்டப்போவதில்லை. இதேபோல் தற்பொழுது பேச்சுக்கான முனைப்புக்கள் வெளியாரின் அழுத்தத்தாலேயே சாத்தியமாகின்றது.
தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வை எட்டிய பல்வேறு சந்தர்ப்பங்-களில் நாம் ஏமாற்றத்தை கண்டதே வரலாறாகும். இதன்மூலம் அவர்கள் பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் பேராதரவைப் பெற்றுக்கொண்டனர். ஒவ்வெரு தடவையும் தேசிய இனப்பிரச்சினை வாயிலாக அரசியல் இலாபம் தேடவே முனைகின்றனர். அரசிடம் தேவையான பெரும்பான்மையும் திறனும் இருக்கின்ற போதிலும் தேசியப் பிரச்சினையைத் தீர்க்க இதயசுத்தியுடன் அவர்கள் முனையவில்லை.
எனவே மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தத்துடனேயே பேசவேண்டும். அம் மூன்றாம் தரப்பு யார் என்பதை கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனே கூறவேண்டும். ஆனால் இது தொடர்பாக என்னால் கூறமுடியாது என்றார்.

0 comments :
Post a Comment