த.நவோஜ்-
ஊடக சுதந்திரத்தைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் அதிகாரிகளின் நடவடிக்கைகள் அமைந்து விடக் கூடாது என்று மட்டக்களப்பு மாவட்ட முழுநேர சுதந்திர ஊடகவியலாளர்கள் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பிராந்திய முழுநேர சுதந்திர ஊடகவியலாளரான வடிவேல் சக்திவேல் என்பவர் விசாரணைக்குட்படுத்தப்பட்டது தொடர்பாகக் கவலையையும், கண்டனத்தையும் வெளியிட்டுள்ள அந்த அமைப்பு மேற்சொன்ன கருத்தைத் தெரிவித்துள்ளது.
மக்களின் ஜனநாயகக் குரலாக இருக்கின்ற ஒரேயொரு ஆறுதல் ஊடகங்கள் தான். அந்த ஊடகங்கள் மூலமாகவே மக்களின் குறைநிறைகளும், தேவைகளும் அபிவிருத்திகளும், கண்டுபிடிப்புக்களும் வெளியுலகத்திற்குக் காண்பிக்கப்படுகின்றன.
அதேவேளை அந்த ஊடகங்கள் மூலமாகவே ஊழல் மோசடிகளும், அதிகார துஷ்பிரயோகங்களும் வெளிக் கொண்டு வரப்பட்டு அவை சீர் செய்யப்படுகின்றன. எனவே அதிகார உயர் மட்டத்திலிருப்பவர்கள் இவற்றையெல்லாம் ஆக்கபூர்வமாக அணுகி சிறந்த நிர்வாகத்தைப் பேணுவதற்குரிய அரிய வாய்ப்பாக ஊடகங்களில் வெளிவருகின்ற விடயங்களை அணுகவும் அவற்றைப் பயன்படுத்தி;க் கொள்ளவும் வேண்டும்.
மாறாக, ஊடகவியலாளர்களுக்கு நேரடியாவோ, மறைமுகமாவோ அழுத்தங்களையும், அச்சுறுத்தல்களையும் கொடுத்து ஊடக சுதந்திரத்தையும் கருத்துச் சுதந்திரத்தையும் முடக்க நினைப்பது ஜனநாயக விரோத செயற்பாடாகவே கருத இடமுண்டு.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுதந்திர முழு நேர ஊடகவியலாளர்களாகப் பணியாற்றும் பிராந்திய செய்தியாளர்கள் மீது விடுக்கப்படுகின்ற அதிகார அச்சுறுத்தல்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு அவர்கள் நாட்டின் இறைமையைப் பேணிக்கொண்டு ஊடக சுதந்திரத்தின் அடிப்படையிலும் கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படையிலும் இயங்குவதற்கு அரச உயர்மட்ட அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்க உத்தியோகத்தர்களாக இல்லாமல் முழுநேரமாக ஊடகத்துறையில் பணியாற்றும் சுதந்திர ஊடகவியலாளர்களுக்கு அவர்கள் தமது பணிகளைச் சுதந்திரமாகச் செய்வதில் பல்வேறு நெருக்கடிகளும் கெடுபிடிகளும் கொடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலைமை மாறி எதிர்காலத்தில் நம்பகமான பக்கச்சார்பற்ற செய்திகளை வழங்குவதற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்க உத்தியோத்தர்களல்லாத சுதந்திர ஊடகவியலாளர்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment