''இசைஞானியின் இசையில் பாட்டெழுத வேண்டும்''- கவிஞர் அஸ்மினின் நேர்காணல்

  • நேர்காணல் அ. அருண்பிரசாத்-

தென்றலே கவிபாடும் தென்கிழக்கு மண்ணில், பொத்துவில் பிரதேசத்தில் பிறந்து இன்று தென்னிந்திய சினிமாவையே தனது கவிதைகளாலும், பாடல் வரிகளாலும் கட்டிப்போட்டுவைத்திருப்பவர் ஈழத்து கவிஞன் பொத்துவில் அஸ்மின். 

இவர் சர்வதேச புகழ்பெற்ற அறிவிப்பாளரான பீ.எச். அப்துல் ஹமீதுக்கு பிறகு தென்னிந்திய சினிமாவில்தனக்கென ஒரு தனிமுத்திரைப் பதித்துள்ளார். 

1. கவிஞனாக உங்களை எப்போது சமூகத்திற்கு அடையாளம் காட்டினீர்கள்?

பாடசாலைக் காலத்திலிருந்தே கவிதை எழுதுவதில் எனக்கு ஆர்வம் அதிகம்.குறிப்பாகச் சொல்லப் போனால் 1997 ஆம் ஆண்டிலிருந்தே தொடர்ச்சியாக கவிதை புனைந்து வருகிறேன்.எனதுபடைப்புக்கள் இலங்கை தேசிய பத்திரிகைகள் சஞ்சிகைகளிலும் சர்வதேச தமிழ் இதழ்களிலும் இணையத்தளங்களிலும் வெளிவந்துள்ளன.

2. கவிதை எழுதும் ஆர்வம் எவ்வாறு வந்தது?

கவிஞனை கற்பித்து வளர்க்க முடியாது ஒருவன் கவிஞனாக உருவாவதற்கு கருவிலே திருவாக வேண்டும்.எனக்குள் பந்தலிடும் பாட்டுப்பூக்களுக்குள் இருந்து எனது பாட்டனும்முப்பாட்டனும் முறுவலிக்கின்றார்கள்.

நாட்டார் பாடல்களின் விளைநிலங்களில் ஒன்றாக விளங்கும் பொத்துவில் மண்ணில் நான் பிறந்ததும்; ஒரு காரணம் என்று சொல்லலாம்.

இலங்கையில் பொதுவாக கிழக்கு மாகாணமே கவிஞர்களை அதிகம் பெற்ற இடம். அங்குச் சென்று ஒரு கல்லை எடுத்து வானத்தை நோக்கி எறிந்தால் அந்த கல்விழும் இடம் ஒரு கவிஞனின்தலையாக இருக்கும் அல்லது ஒரு கலைஞனின் வீடாக இருக்கும். அப்படிப்பட்ட இடத்தில் பிறந்த நான் கவிதை எழுதுவது ஒன்றும் வியப்பான விடயமல்ல.

3. இவ்வாற்றலை எவ்வாறு வளர்த்துக் கொண்டீர்கள்?

எந்தவொரு மனிதனும் பூரணத்துவம் அடைய வாசிப்பு என்பது அத்தியாவசியமான ஒன்றாகும். நான் அடிக்கடி சொல்வதுண்டு 'வாசி வாசிக்கப்படுவாய்..! நேசி நேசிக்கப்படுவாய்..! எழுதுஎழுதப்படுவாய் ..!' என்று அந்தவகையில் எனக்குள் சிறுவயதில் இருந்து வந்த இடையறதா வாசிப்பு பழக்கமும் கூழாங்கல்போல் கிடந்த என்னை வைரக்கல்லாய் பட்டை தீட்டிசர்வதேசமெங்கும் காட்சிப்படுத்தியது என்று சொல்லலாம்.

4. உங்களை சமூகத்திற்கு எவ்வாறு அடையாளம் காட்டினீர்கள்? அதாவது, எவ்வகையான கவிஞனாக வெளிக்காட்டினீர்கள்?

பொதுவாக எனக்கு எல்லா வகையான கவிதைகளும் எழுத முடியும். ஆனால், மரபுக் கவிதையிலேயே எனக்கு ஆர்வம் அதிகமாகும். அதனால்,நான் ஒரு மரபுக்கவிஞனாக என்னைஅடையாளம் காட்டிக்கொள்ளவும் விரும்புகிறேன்.காரணம் மரபுக் கவிதைகள்தான் தமிழ் மொழிக்கான கவிதை. ஏனைய அனைத்தும் மேலைத்தேய இறக்குமதிகள்.அவைகளோடுகைகுலுக்கிக்கொள்வேனே தவிர ஒருபோதும் கட்டியணைத்து காதல் செய்ய மாட்டேன்.

5. உங்களின் ஆரம்பக் காலக் கவிதைகள் வரவேற்கப்பட்டனவா?
உண்மையைச் சொல்லப்போனால் நான் கவிதை எழுதிய ஆரம்பக் காலங்களில் என்னை யாரும் கண்டுகொள்ளவே இல்லை.

ஒரு கவிதையை எழுதி நண்பர்களிடம் காட்டினால் கூட அதை பார்த்து கேலி செய்வார்களே ஒழிய பாராட்ட மாட்டார்கள். சிலவேளை அக்கவிதைகள் அவர்களை கவர்ந்துவிட்டால் அதைநான் எழுதியதாக நம்ப மாட்டார்கள்.ஆனால், இதுகுறித்தெல்லாம் நான் கவலையடையாது எனது இலக்கை நோக்கி தொடர்ந்தும் நகர்ந்துகொண்டே இருந்தேன்.எனக்குள் நானே சொல்வதுண்டு

'அவமானம் நாளும் வந்து அடி நெஞ்சைக் கொல்ல கொல்ல இது என்ன வாழ்க்கை என்று புலம்பாதே....! ஒரு நாள்பார் உலகே வந்து உயர்வாக உன்னைப் பேசும் காயங்கள் ஆறும் நெஞ்சேகலங்காதே....!!

6. உங்களது ரோல்மொடல் யார்?

வாலிபக் கவிஞன் வாலி மற்றும் கவிப்பேரரசு வைரமுத்து.



7. சரி, இதுவரைக்கும் எத்தனை விருதுகளுக்குச் சொந்தக் காரராகியுள்ளீர்கள்?

விருதுகளால் படைப்பாளியாக எம்மை நிலை நிறுத்த முடியாது.அதில் எனக்கு உடன்பாடும் இல்லை.விருதுகளின் பின்னே பல அரசியல் இருக்கின்றன. 'விருகள் பெறும் எருதுகள்' என்ற எனதுகவிதை மூலம் அதனை நான் விமர்சித்திருந்தேன்.

இருந்தாலும் நீங்கள் கேட்டதற்காக சொல்லுகின்றேன். இதுவரை நான் 15 இற்கும் மேற்பட்ட தேசிய மட்டத்திலான போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளேன். 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற தேசியமட்ட கவிதைப்போட்டியில் முதலிடம் பெற்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் கரங்களால் விருதுபெற்றேன்.இதுவே நான் முதல் முதல் பெற்ற விருது.அதன் பின்னர் பேராதனைப்பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட பவளவிழா கவிதைப்போட்டியில் முதலிடம் பெற்று 'தங்கப்பதக்கம்' பெற்றேன். மேலும், 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் தேசிய மட்டத்தில்நடைபெற்ற 'வியர்வையின் ஓவியம்;' பாடல் இயற்றல் போட்டியில் தொடர்ந்து இருமுறை சிறந்த பாடலாசிரியருக்கான விருதினை பெற்றேன்.

2011 ஆம் ஆண்டு கவிக்கோ அப்துல் ரஹ்மான் தலைமையில் மலேசியாவில் மலாயா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சர்வதேச கவியரங்கில கலந்து கொண்டு சிறப்பாக கவிதைபாடிமலேசிய அமைச்சர் டத்தோ சரவணன் அவர்களால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டேன். இதுவே எனக்கு சர்வதேச ரீதியில் கிடைத்த முதல் அங்கீகாரமாகும்.

தென்னந்தியாவிலும் இலங்கையில் பல இலக்கிய நிகழ்வுகளிலும் எனது கலை இலக்கிய பணிக்காக பல தடவை கௌரவிக்கப்பட்டுள்ளேன். இவ்வாறு நிறைய சொல்லலாம்.

8. நீங்கள் வெளியிட்டுள்ளப் புத்தகங்கள்....

இதுவரைக்கும் மூன்று புத்தகங்களை வெளியிட்டுள்ளேன். எனது முதலாவது நூல் 'விடை தேடும் வினாக்கள்' என்ற 2001 ஆம் ஆண்டு நான் உயர்தரம் படித்துக்கொண்டிருக்கும் போதுவெளிவந்தது. அடுத்த நூல் 'விடியலின் ராகங்கள்' 2002 ஆம் ஆண்டு வெளியானது. பிறகு 2013ம் ஆண்டு 'பாம்புகள் குளிக்கும் நதி' கவிதை நூலை வெளியிட்டேன் துபாய் பிளின்ட்பதிப்பகத்தினால் வெளியிடப்பட்ட இந்த நூலுக்கு கவிப்பேரரசு வைரமுத்து வித்தக கவிஞர் பா.விஜய் ஆகியோர் உரை வழங்கியுள்ளார்கள். 2013 ஆம் ஆண்டு இலங்கையிலும் இந்தியாவிலும்இந்த நூல் வெளியீடு கண்டது.இந்த நூலின் இரண்டாவது பதிப்பு இவ்வருடம் வெளிவரவுள்ளது.

9. ஒரு பாடலாசிரியராக உங்களுக்கு இலங்கையில் கிடைத்த முதல் அங்கீகாரம் எது?

2008 ஆம் ஆண்டு 'சக்தி தொலைக்காட்சி நடத்திய 'இசை இளவரசர்கள்' போட்டி நிகழ்ச்சியே எனக்கான அங்கீகாரத்தை முதன்முதலில் வழங்கியது எனலாம். அந்த போட்டி நிகழ்ச்சிமட்டும் இல்லையென்றால் எனக்குள் இருக்கும் பாடலாசிரியன் வெளியே வந்திருக்க மாட்டான் என்பதை உறுதியாக சொல்லலாம்.இந்த போட்டி மூலம்தான் எனது முதல் வெளிநாட்டு பயணமும்அமைந்தது.

அப்போட்டிக்காக இந்தியாவுக்குச் சென்று இயக்குநர் ஏ.வெங்கடேஷ் கதை சொல்ல நான் 'எங்கோ பிறந்தவளே' எனும் பாடலை எழுதினேன். அப்பாடலைப் பார்த்து விட்டு வித்தகக் கவிஞர்பா.விஜய் '' இது தென்னிந்திய சினிமா பாடலுக்கு நிகரான வரிகள்' என என்னை பாராட்டினார். எனது பாடலுக்கு கிடைத்த முதல் பாராட்டை மறக்கவே முடியாது.

அந்த பாடல் இசை இளவரசர்கள் நிகழ்ச்சியில் சில காரணங்களால் இடம்பெறாமல் போனது பின்னர் 2011ம் ஆண்டு கந்தப்பு ஜெயந்தனின் இசையில் வெளிவந்து புலம்பெயர் நாடுகளிலும்அப்பாடல் வரவேற்பு பெற்றது.

10. இலங்கை கலைத்துறையில் நீங்கள் பணியாற்றிய இசையமைப்பாளர்கள் குறித்து....

செல்வராஜா மாஸ்டர், கந்தப்பு ஜெயந்தன், டிரோன் பெர்னாண்டோ, விதுஷான், நலிந்த, ராஜ்;, வேரணண், விமல் ராஜ்;, கௌதம் மோகனராஜன் ஜெ ஆகிய இசையமைப்பாளர்களோடுபணியாற்றியுள்ளேன்.

அத்தோடு, 'விமல்ராஜ்' இசையமைத்த 'பனைமரக்காடு', கந்தப்பு ஜெயந்தன் இசையமைத்த 'கடன்காரன்' என்ற முழுநீள படத்திலும் பாடல் எழுதியுள்ளேன்.செல்வராஜா மாஸ்டரின் இசையில்நான் எழுதி வி.முத்தழகு பாடியுள்ள 'என் பாடல் உன் காதில் கேட்கின்றதா' என்ற பாடல் பிரபலமான சிங்கள நாடகமொன்றில் வெளிவரவுள்ளது. அந்த பாடல் காட்சியில் நம் நாட்டு நடிகைநிரஞ்சனி சண்முகராஜா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

11. இலங்கை கலை வரலாற்றுக்கு அப்பால் சென்று இந்திய சினிமாவிலும் தடம்பதிக்க உதவிய 'நான்' பட வாய்ப்பு எப்படி கிடைத்தது?

2011ம் ஆண்டு அப்படத்தின் இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி 'நான்' படத்திற்கு புதிய பாடலாசிரியர் ஒருவரை அறிமுகப்படுத்த வேண்டும் என சர்வதேச மட்டத்திலானபோட்டியொன்றை நடத்தினார்.அதுபற்றிய செய்திகள் இந்திய தொலைக்காட்சிகள் மற்றும் இணையத்தளங்களில் பலவற்றிலும் வெளிவந்தது.பாடலின் டியுனையும் கதை சூழலையும் அவரதுஇணையத்தளத்தில் பதிவு செய்திருந்தார். அதற்கு பாடல் எழுதி அனுப்பினேன்.உலகமெங்கும் இருந்து பலர் அப்போட்டியில் கலந்துகொண்டனர். அப்போட்டியில் கலந்து கொண்ட 20 ஆயிரம்பாடலாசிரியர்களுள் எனது பாடல் முதலிடம் பெற்றதால் அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

நான் ஏற்கனவே எழுதிய பாடலில் சிறு சிறு திருத்தங்கள் செய்து ஒரு மணித்தியாலத்தில் எழுதிய பாடலே இந்த 'தப்பெல்லாம் தப்பே இல்லை' என்ற பாடல். இந்த பாடலானது உலகம் எங்கும்நல்ல வரவேற்பு பெற்றதுடன், தென்னிந்திய சினிமாவில் எனக்கான ஒரு அடையாளத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தது.

12. சரி, தற்போது நடிகர் ஆர்யாவின் தயாரிப்பில் ' அமரகாவியம்' படத்திலும் பாடல் எழுதியுள்ளீர்கள். இந்த வாய்ப்பு அமைந்தமை குறித்து....

'பாம்புகள் குளிக்கும் நதி' புத்தக வெளியீட்டு தமிழகத்தில் நடந்தபோது இயக்குநர் ஜீவாசங்கரையும், இசையமைப்பாளர் ஜிப்ரானையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அப்போது ஜீவாசங்கர், தான் இயக்கும் 'அமரகாவியம்' படம் குறித்து தெரிவித்தார். அத்தோடு, ஜிப்ரானும் சந்தர்ப்பம் வரும்போது நிச்சயமாக வாய்ப்புத் தருவதாக கூறினார். அப்படியே இந்தவாய்ப்பு கிடைத்தது. அமரகாவியத்திற்காக நான் எழுதிய 'தாகம் தீர கானல் நீரை காதல் இன்று காட்டுதே...' என்ற பாடல் சிறப்பாக அமைந்துள்ளதுடன் ரசிகர்கள் மத்தியிலும் நல்லவரவேற்பை பெற்றுள்ளது.இந்த பாடலை பத்மலதா யாஷின் நிஸார் ஆகியோர் பாடியுள்ளனர்.இத்தரைப்படத்தில் கார்க்கிஇ பார்வதிஇ வெற்றி செல்வன் ஆகியோரும் பாடல் எழுதியுள்ளனர். 'அமரகாவியம்' திரைப்பட பாடல்கள் ஐ டியுனிலும் முதலிடத்த பிடித்துள்ளன.தென்னிந்திய இசை விமர்சகர்கள் எனது வரிகளை சிலாகித்து எழுதியிருப்பது எனக்கு இன்னும்நம்பிக்கையைளித்துள்ளது.

இப்படத்தில் இதுவரை தமிழ் சினிமா பாடல்கள் மலரவைக்காத பூ ஒன்றினை நான் பதிவுசெய்துள்ளேன்.தமிழீழத்தின் தேசிய பூவாகவும் தமிழகத்தின் மாநில பூவாகவும் உள்ள பூ அது.சங்காலகாலப்பாடல்களில் குறிஞ்சிப் பாட்டில் அந்த பூ இடம்பெற்றுள்ளது. அந்த பூ என்னவென்பதை ரசிகர்கள் பாடலை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

13. அமரகாவியம் படத்தில் இசையமைப்பாளர் ஜிப்ரான் மற்றும் இயக்குநர் ஜீவாசங்கர் ஆகியரோடு பணியாற்றிய அனுபவம் எவ்வாறு இருந்தது?

மறக்கவே முடியாது.... இருவருமே மிகத்திறமையானவர்கள். ஜிப்ரான் தனது முதல் படமான 'வாகைசூடவா' படத்தின் மூலமே அனைவரினதும் கவனத்தை ஈர்த்தவர், தற்போது உலகநாயகன்'கமலஹாசனின் ஆஸ்தான இசையமைப்பாளராகவே மாறிவிட்டார்.

தமிழ் திரை உலகின் முக்கிய ஜாம்பாவன்கள் கலந்துகொண்ட 'அமரகாவியம்' இசை வெளியீட்டு விழாவில் அடுத்த ஏ.ஆர்.ரஹ்மான் என அனைவராலும் வாழ்த்தப்பட்டார்.

அதேபோல் இயக்குநர் ஜீவாசங்கரும் மிகவும் வித்தியாசமானவர்.சிறந்த படிப்பாளி. 'நான்' திரைப்படத்தின் மூலம் தன்னை நிரூபித்தார்.பாலுமகேந்திராவுக்கு பிறகு கமராவில் கவிதை வரையதெரிந்த அவரை 'அமரகாவியம'; திரைக்கு வந்த பிற்பாடு நிச்சயம் இந்த உலகமே கொண்டாடும் என்றால் மிகையில்லை.

'அமரகாவியம்' படத்தின் கிளைமெக்ஸ் காட்சிகள் இதுவரையிலும் தமிழ் சினிமாவிலேயே இடம்பெறாத வண்ணம் அமைந்துள்ளார். 15 நிமிடங்கள் வார்த்தைகளன்றி வெறும் இசையிலேயேபடம் பயணிக்கும்.படத்தை பார்த்துவிட்டு நடிகர் ஆர்யாவே விம்மி விம்மி அழுதாராம் அந்தளவுக்கு படம் அமைந்துள்ளது.

அவர் இயக்கிய 'நான்' படம் எவ்வளவு வரவேற்புப் பெற்றதோ, அதேபோல இந்த அமரகாவியமும்; 'மூன்றாம் பிறை, அலைகள் ஓய்தில்லை,காதல் மற்றும் மைனா போன்ற படங்கள்வரிசையில் வைத்து கொண்டாடப்படும். இந்த திரைப்படம் மாபெறும் வெற்றிபெற்று அதில் பணியாற்றிய அனைவருக்கும் ஒரு மைல்கல்லாக அமையும் என்பது உறுதி.

14. 'நான்' பட பாடல் எழுத ஒரு மணிநேரம்....அதேபோல் இந்தப் பாடல் எழுத எத்தனை மணிநேரம் பிடித்தது?

மணித்தியாலங்களல்ல....இருபது நாட்கள் பிடித்தன. இவ்வரிகளை நான் இசைக்கே எழுதினேன். அதில் நிறைய திருத்தங்களை செய்தே இறுதி வடிவத்தை கொடுத்தேன்.

அத்தோடு, இப்பாடலின் மூலம் 'அமரகாவியம்' படத்தின் கதையேயே மறைமுகமாக சொல்லியுள்ளேன்.இசைக்குள் கதை சொல்வதென்பது இலகுவான காரியமல்ல.

15. நீங்கள் எழுதிய வரிகள் பாடலாக ஒலிக்கும்போது அந்த உணர்வு எவ்வாறு இருக்கும்?

ஆச்சரியமாக இருக்கும். 'தப்பெல்லாம் தப்பேயில்லை' பாடலும் சரி, அமரகாவியத்திற்காக எழுதிய 'தாகம் தீர' பாடலும் சரி, பாடலாக ஒலிக்கும்போதே அது ஜீவனடைந்ததைப் போலஉணர்கிறேன்.

இப்பாடல்கள் இரண்டும் நான் எதிர்ப்பார்த்ததைவிட சிறப்பாகவே வந்துள்ளன.

16. இலங்கை சினிமாத்துறை இந்திய சினிமாத்துறையைப் போல வளர்ச்சியடையாதமைக்கு என்ன காரணம் என கருதுகின்றீர்கள்?

60 வருட கால பாரம்பரியம் கொண்ட எமது இலங்கை தமிழ் சினிமாவில் பல நல்ல படங்கள் வந்துள்ளன.இந்தியாவில் இருந்து இங்கே படங்களை இறக்குமதி செய்வது இலங்கை சினிமாவெற்றி பெறாமைக்கான முதல் காரணம் எனலாம்.அடுத்து தொழில் நுட்ப ரீதியாக எமது சினிமா குண்டுச் சட்டிக்குள் குதிரையோட்டிக்கொண்டிருக்கிறது.

சினிமாவை சரியாக கற்றவர்கள் இங்கே அரிதாக இருக்கின்றார்கள்.இருப்பவர்கள் படம் எடுப்பதாக 'படம் காட்டுகின்றார்கள்' இந்திய சினிமாவுக்கு நிகராக இலங்கையில் இப்போது ஒருபடம்கூட தர முடியவில்லை. இந்திய சினிமாவை விடுங்கள் இலங்கையில் வெளிவந்த ஆரம்பகால படங்களுக்கு பக்கத்தில் கூட இன்று சினமா எடுப்போருக்கு நிற்க முடியவில்லை.

இப்போதைய இளைஞர்களுக்கு படம் எடுக்க வேண்டும் ஒரே நாளில் பிரபலமாக வேண்டும் என்ற அவசரம் இருக்கின்றதே ஒழிய புதிதாக தொழிநுட்பங்களைப் கற்றுக்கொண்டு வித்தியாசமாகதமது படைப்புக்களை படைக்க வேண்டும் எமக்கான சினிமாவை உருவாக்க வேண்டும் எண்ணமில்லை. தொழிநுட்பப் பிரச்சினையே முதலாவது தடையாக அமைந்துள்ளது. அடுத்து சினிமாகுறித்து போதிய அறிவற்றவர்ளாக இருக்கின்றார்கள். இந்திய சினிமாவை பின்பற்றாவிடினும் அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பல விடயங்களை கற்றுக் கொள்ள வேண்டும்.இலங்கையில் முழு நீள சினிமா சாத்தியமற்றது.எமக்கான சினிமா குறுந்திரைப்படங்கள்தான் அதிலே இன்றைய தலைமுறையினர் கவனம் செலுத்தினால்தான் வெற்றிகாண்பர்.

17. இலங்கை தமிழ்ப்படங்களுக்கு பாடல் எழுதும் எண்ணம் இருக்கின்றதா?

நான் முதலில் கூறியதைப் போன்று தரமான படைப்புக்களுக்கு நான் எப்போதுமே கைகொடுக்க தயாராகவே உள்ளேன். அந்தவகையில், இங்கு ஒரு தரமான படம் உருவாக்கப்பட்டால்மாத்திரமே எனது பாடல் இடம்பெறக்கூடிய சாத்தியங்கள் இருக்கும்....






18. ஒரு கவிஞன் என்ற முறையில் தற்போது வருகின்ற அர்த்தமற்ற பாடல்கள் குறித்து உங்கள் விமர்சனம்....

தற்போதுள்ள பாடல்கள் வணிக நோக்கத்திற்காகவே படங்களில் திணிக்கப்படுகின்றன. அதாவது, பாடல் வரிகளின் சிறகை உடைத்து சிறையில் அடைத்துவிட்டு இசையே தற்போதுசிம்மாசனம் ஏறியுள்ளது.

ஆனால், அப்படியான பாடல்கள் என்றுமே நிலைத்திருக்காது. உதாரணமாக உலகமே கொண்டாடிய 'வை திஸ் கொல வெறி' பாடலை இப்போது ஒரு ரசிகனால் ரசிக்க முடியுமா? அதேநேரத்தில்50 வருடங்களுக்கு முன்பு வந்த பாடல்களை எல்லோராலும் இப்போதும் ரசிக்க முடியுகிறது. ஆகவே, அர்த்தமற்ற பாடல்கள் என்றுமே நிலைத்திருக்காது.துள்ளிசை மாயும் மெல்லிசைவாழும்.

19. தென்னிந்திய சினிமாவில் அடுத்து யாருடைய இசையில் பாடல் எழுத வேண்டும் என நினைக்கின்றீர்கள்?

கரும்பு தின்ன கைக்கூலி வேண்டுமா தென்னிந்திய சினிமாவில் என்றால் எந்த இசையமைப்பாளர் என்றாலும் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறேன்.

எல்லோரும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடல் எழுத வேண்டும் என்றே நினைப்பார்கள். ஆனால், நான், இசைஞானி இளையராஜாவின் இசையில் ஒரு பாடலாவதுஎழுதவேண்டும் என ஆசைப்படுகிறேன்.

20. உங்களின் அடுத்த பாடலை எப்போது கேட்கலாம்?

இப்போது ஐந்து தமிழ் படங்களுக்கு பாடல்கள் எழுத ஒப்பந்தமாகியுள்ளேன். இரண்டு படங்களில் எழுதிவிட்டேன்.அதிலும் ஒரு படத்தில் அனைத்து பாடல்களும் எழுதும் வாய்ப்புகிடைத்துள்ளது. கூடிய விரைவில் அப்படங்களின் பெயர்களை உத்தியோகப்பூர்வமாக அறிவிப்பேன்.

நேர்காணல் அ. அருண்பிரசாத்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :