முஸ்லிம்களுக்கு இடம்பெறும் கொடுரங்களையடுத்து ஸூறா சபையினால் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்(இணைப்பு)

​தேசிய ஷூறா சபை தலைவர் தாரிக் மஹ்மூத் அவர்களின் தலைமையில் 
​​2014 ஆகஸ்ட் 17 அன்று நடைபெற்ற அதன் பொதுச் சபைக் கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம்

தேசிய மட்டத்திலாக முஸ்லிம் அமைப்புக்கள், துறை சார் நிபுணர்கள், கல்விமான்கள் மற்றும் சமூக ஆர்வளர்களை உள்ளடக்கிய ஒரு ஆலோசனை சபையாகிய தேசிய ஷூறா சபையின் 2014 ஆகஸ்ட் 17ஆம் திகதி நடைபெற்ற பொதுச் சபைக் கூட்டத்தில், பலஸ்தீன் மீதான இஸ்ரேலின் கொடூரத் தாக்குதல் காரணமாகப் பாதிக்கப்பட்ட பலஸ்தீன மக்களுக்கு ஒரு மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்கியமைக்காக அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் நன்றி தெரிவித்து அதனை வரவேற்கும் வகையிலான ஒரு தீர்மானம் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டது.

அதேவேளை, பலஸ்தீனில் 402 சிறுவர்கள், 249 பெண்கள் மற்றும் 74 முதியவர்களை உள்ளிட்ட பொதுமக்களைப் படுகொலை செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து உடனடியாக இஸ்ரேலுடனான இலங்கையின் இராஜதந்திர உறவுகளை இரத்துச்செய்துகொள்ளுமாறும், சர்வதேச சமூகத்தில் ஒரு முழுமையான உறுப்புரிமை நாடாக பலஸ்தீன் அரசு செயலாற்றும் வரை எவ்வகையான தொடர்புகளையும் வலுப்படுத்த வேண்டாம் என்றும் தேசிய ஷூறா சபை அரசாங்கத்தை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றது.

வரலாற்றுக் காலம் தொடக்கம், முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும், யூதர்களும் அமைதியாகவும், ஒற்றுமையுடனும் வாழ்ந்துவந்த பல மதங்களைக் கொண்ட அன்றைய பலஸ்தீன், அம்மக்களின் எவ்வித ஆணையும், விருப்பும் இன்றி ஐக்கிய நாடுகள் சபையினால் ஒரே இரவில் பிரத்தியேகமாக யூதர்களை மட்டும் கொண்ட ஒரு நாடாக இஸ்ரேல் உருவாக்கப்பட்டதிலிருந்து இன்றுவரை சுமார் 67 வருடங்களுக்கும் மேலாக பலஸ்தீன அரசை மீண்டும் முழுமையான ஒரு தனிநாடாக இயங்கவைப்பதில் ஐக்கிய நாடுகள் சபை தவறியதையிட்டு தேசிய ஷூறா சபை ஐக்கிய நாடுகள் சபையை வன்மையாகக்கண்டிக்கின்றது.

மேலும், அண்மைக்கால இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைக் கண்டித்து ஆகஸ்ட் 13 ஆம் திகதி இலங்கை தௌஹீத் ஜமாஅத்தினர் (SLTJ) ஒழுங்குசெய்த அமைதியான எதிர்ப்பு ஊர்வலத்தைச் சீர்குலைத்து, ஊர்வலத்துக்கு குந்தகம் விளைவித்து வன்முறையை ஏற்படுத்த பொது பல சேனா (BBS) மேற்கொண்ட பயனளிக்காத அச்சுறுத்தல் முயற்சியை தேசிய ஷூறா சபை கண்டனத்துடன் வெறுக்கின்றது. 

‘நியூ யோர்க் டைம்ஸ்’ அதிகூடிய விற்பனை சாதனை படைத்த ‘By Way of Deception’ என்னும் முன்னாள் இஸ்ரேலிய மொசாட் உலவாளி விக்டர் ஒஸ்ட்றௌவ்ஸ்கி (Victor Ostrovsky) என்பவரின் நூலில் இஸ்ரேல் LTTE இயக்கத்துக்கு ஆயுதங்களையும், வெடிமருந்துகளையும் வழங்கியதாகக் கூறியதைப் புறக்கணித்து, இலங்கையின் போர் முயற்சிகளில் இஸ்ரேல் ஆதரவளித்த்தாக ஆகஸ்ட் 12ஆம் திகதி நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் பொது பல சேனா கூறிய விடயத்தை தேசிய ஷூறா சபை உண்ணிப்பாக அவதானித்தது.

LTTE யினருக்கு இஸ்ரேல் வழங்கிய பயிற்சியும், ஆயுதங்களும் தான் 1987ஆம் ஆண்டு ஜூன் 02ஆம் திகதி அரந்தலாவஎனும் இடத்தில் 31 பௌத்த பிக்குகளின் படுகொலைக்கு வழிவகுத்ததையும், இஸ்ரேல் மற்றும் நோர்வேயில் உள்ள LTTEஇயக்கத்துக்கு ஆதரவான குழுக்களுடன் கொண்டிருக்கும் சர்ச்சைக்குரிய தொடர்புகளையும் மறந்து அதிர்ச்சியூட்டும் வகையில் இஸ்ரேலின் புகழ்பாடும் பொது பல சேனாவை தேசிய ஷூறா சபை கண்டிக்கின்றது.

2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி LTTE இயக்கத்துக்கெதிரான போரின் இறுதித் தினத்தன்று, ஐநா சபையின் உலக சுகாதார தாபனத்தின் கூட்டத்தில் அதன் நிறைவேற்றுக் குழுவின் தலைவராக அப்போதைய சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா அவர்கள் தெரிவானதை எதிர்த்து வெற்றியளிக்காத ஒரு முயற்சியை மேற்கொண்டு இலங்கை மீதும் அதன் இராணுவப் படைகள் மீதும் சர்வதேச குற்றவியல் விசாரணை மேற்கொள்ளப்படல் வேண்டும் என இலங்கைக்கு எதிராக முதலாது அபாய அச்சுறுத்தல் விடுத்து இலங்கையைப் பற்றி விசாரிப்பதற்கு ஐ.நா. மற்றும் உலக சுகாதார தாபனத்தின் இணைந்த குழுவொன்று உருவாக்கப்பட வேண்டும் என கோரிய முதலாவது நாடு இஸ்ரேல் என்பதனையும் தேசிய ஷூறா சபை இந்த சந்தர்ப்பத்தில் நினைவு கூருகின்றது.

போர் முடிவடைந்து ஒரு வாரத்தினுள், 2009 மே 26 மற்றும் 27ஆம் திகதிகளில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் இலங்கை பற்றிய விஷேட கூட்டத்தொடரில், அப்போதைய மனித உரிமை ஆணைக்குழுவின் ஒரு உறுப்பினராக இஸ்ரேல் இல்லாவிடினும், விஷேட நேரத்தைக் கேட்டு ஒதுக்கி போரின் இறுதிக் கட்டத்தில் எமது இராணுவப் படைகளால் இழைத்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் பற்றி விசாரிப்பதற்கு சர்வதேச விசாரணையை வலியுறுத்தி,இலங்கைக்கு எதிரான ஐரோப்பிய யூனியனின் அனுசரணையிலான தீர்மானத்துக்கு ஆதரவளித்து மீண்டும் ஒரு முறை இலங்கைக்கு எதிராகச் செயற்பட்டதை தேசிய ஷூறா சபை மேலும் நினைவு கூர்வதுடன், எவ்வித தயக்கமும் இன்றி இஸ்ரேலுக்கு ஆதரவளித்து நாட்டின் இராணுவப் படைகளைக் காட்டிக்கொடுக்கும் பொது பல சேனாவின் வெட்கம்கெட்ட செயலையும் கண்டிக்கின்றது.

ஆகஸ்ட் 08ஆம் திகதி கொழும்பில் இஸ்ரேலுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி ஆர்ப்பாட்டம் செய்தபோது பொது பல சேனா மௌனமாக இருந்ததை தேசிய ஷூறா சபை நினைவுகூர்வதுடன் நாட்டில் சிங்கள – முஸ்லிம் ஒற்றுமையை அழித்து அதன் மூலம் வெளிநாட்டு சக்திகளின் பிரதிநிதியாக இலங்கையைச் சீர்குலைத்து, மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளிடமிருந்து 50% இற்கும் அதிகமான தனது அந்நியச்செலாவணியை ஈட்டும் இலங்கையின் பொருளாதார மற்றும் ஏனைய வாய்ப்புக்களைப் புறக்கணித்து, ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கைக்கான முஸ்லிம் நாடுகளின் ஆதரவைச் சிதைப்பதற்கு முயற்சிப்பதை குறிக்கோளாகக் கொண்ட தேசதுரோக சக்தியே பொது பல சேனா என்பதை தேசிய ஷூறா சபை மீண்டுமொறுமுறை வலியுறுத்துகின்றது.

பொது பல சேனாவையும் அதனை ஒத்த ஏனைய குழுக்களையும், தேசதுரோக மற்றும் சமயங்களுக்கெதிரான செயற்பாடுகளிலிருந்து ஒதுங்கி, அதிகரித்து வரும் எண்ணிக்கையிலான கொலைகள், கற்பழிப்புகள், கொள்ளைச் சம்பவங்கள், வன்முறை, போதைப்பொருள் பாவனை போன்ற குற்றங்களுக்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொள்வதற்கு அனைத்து சமய தலைவர்களுடனும் கைகோர்த்து செயற்படுவதற்கு அறிவூட்டுமாறு மல்வத்த பீடம், அஸ்கிரிய பீடம் மற்றும் சியம் நிகாயவின் மதிப்பிற்குரிய மஹா நாயக்க தேரர்களை தேசிய ஷூறா சபை விநயமாகக் கேட்டுக்கொள்கின்றது.

இந்தத் தீர்மானத்தை இலங்கையின் அதி மேதகு ஜனாதிபதி அவர்களுக்கும், ஐ.நா. செயலாளர் நாயகத்துக்கும், மதிப்பிற்குரிய மஹா நாயக்க தேரர்களுக்கும் மதிப்பிற்குரிய பௌத்த தேரர்களுக்கும், விகாரைகளுக்கும், இந்து, கிறிஸ்தவ மற்றும் கத்தோலிக்க சமூகத் தலைவர்களுக்கும் அனுப்பிவைப்பதற்கு தேசிய ஷூறா சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :