UNPயில் களம் இறங்கத் தயாராகும் அம்பாரை மாவட்ட SLMC யின் முக்கியதர்கள் இருவர் யார் அவர்கள்.

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-

தென்கிழக்கு கலை இலக்கியவாதிகளின் ஒன்று கூடலொன்று எதிர்வரும் வெள்ளிக்கிழமை (18) சாய்ந்தமருதுவில் இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வில் முன்னாள் பிரதியமைச்சரும் கவிஞருமான வேதாந்தி சேகு இஸ்ஸதீன் கலந்து கொள்கிறார்.

 நீணடகால மலையடிவார தியானத்தின் பின்னர் அவர் பலர் முன்னிலையில் தோன்றப் போகிறார். இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் கட்சியின் பிரதித் தவிசாளருமான பொத்துவில் எஸ்.எஸ்.பி அப்துல் மஜீத் அந்தக் கட்சியை விட்டும் பதவியிலிருந்தும் இராஜினாமாவும் செய்துள்ளார். இந்த இரு விடயங்களும் இன்று இடம்பெற்றுள்ளதன் பின்னணியில் பெரும்பாலும் அரசியல் காய்நகர்த்தல்களே உள்ளன என்றே நான் நம்புகிறேன்.

சேகு இஸ்ஸதீன் அவர்களின் தற்போதைய மக்கள் தரிசனம் மற்றும் பொத்துவில் எஸ்.எஸ்.பி அப்துல் மஜீத் அவர்களின் ராஜினா இவற்றின் பின்னணியில் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் கரங்கள் உள்ளதாகவும் கொள்ளலாம். நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் போது இவர்கள் இருவரையும் தங்களின் முக்கிய முஸ்லிம் அரசியல் சக்திகளாக கிழக்கில் விசேடமாக, அம்பாறை மாவட்டத்தில் களங்மிறக்கும் முயற்சிகள் இப்போது ஐக்கிய தேசியக் கட்சியினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலேயே இவர்கள் இருவரும் தங்களைத் தயார் நிலைக்கு கொண்டு வந்துள்ளனர் போல் தெரிகிறது.

இதற்கானதொரு சந்தர்ப்பமாகவே சேகு இஸ்ஸதீன் அவர்கள் தென்கிழக்கு கலை இலக்கியவாதிகளின் அழைப்பையேற்று அதில் பங்கேற்கவுள்ளார். அதேபோன்று பொத்துவில் எஸ்.எஸ்.பி அப்துல் மஜீத் அவர்களும் முஸ்லிம் காங்கிரஸின் இன்றைய நிலைமைகள் அக்கட்சியில் தான் புறந்தள்ளப்பட்டமை போன்ற காரணங்களை முன்வைத்து அந்தக் கட்சியிலிருந்து வெளியேறியுள்ளார். ஆக மொத்தத்தில் இவர்கள் இருவரும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர்களாக அல்லது பிரசாரகர்களாக நிமிக்கப்படவுள்ளனர் என்றே நோக்கலாம்.

இதன் மூலம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மக்கள் செல்வாக்கில் வீழ்ச்சியை ஏற்படுத்தி அந்தக் கட்சியின் நாடாளுமன்ற பிரதிநிதிகள் எண்ணிக்கையைக் குறைப்பதே ஐக்கிய தேசியக் கட்சியின் இலக்காகும். ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வராவிட்டால் இவர்களில் ஒருவரை எம்.பியாக்குவதிலும் ஆட்சிக்கு வந்தால் ஒருவருக்குப் பிரதியமைச்சர் பதவி கொடுப்பதிலும் சிறிகொத்தா வட்டாரங்கள் தற்போது தயாராக உள்ளது என்பதும் தெரிந்த விடயம். இவ்வாறு, இவர்கள் இருவரையும் தங்கள் காய்நகர்த்தலுக்கு உட்படுத்தி அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களின் வாக்குகளைச் சிதறடிக்கச் செய்து ஐக்கிய தேசியக் கட்சி அரசியல் லாபம் தேட முயற்சித்தால் அது அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களுக்குச் செய்யும் துரோகமாகவே அமையும்.

தேசிய அரசியலில் முஸ்லிம் காங்கிரஸை ஐக்கிய தேசிய கட்சிக்குப் பிடிக்காது என்பதற்காக ஒரு மாவட்டத்தின் ஒரு கட்சிக்கான முஸ்லிம் எம்.பிக்கள் பிரதிநிதித்துவத்தைக் குறைக்க முயற்சிப்பதற்காக இவ்வாறு முன்னெடுக்கும் செயற்பாடுகள் ஏற்கக் கூடியன அல்ல.. இது அந்தப் பிரதேச முஸ்லிம்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சி செய்யும் பச்சைத் துரோகம். இவ்வாறான சதிவலைக்குள் இவர்கள் சிக்கவும் கூடாது. நாட்டின் நிலைமைகள், முஸ்லிம் காங்கிரஸின் பலவீனம் இவற்றை நாடி பிடித்து பார்த்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி வீடு எரியும் போது சுருட்டுவதெல்லாம் இலாபம் என்ற அடிப்படையில்தான் இவ்வாறு நடக்குமானால் அது அநியாயமாகும்.

 இதற்கு எவராவது துணை போனால் அது அநீதியாகும். இவர்கள் இருவரையும் தங்கள் கட்சியில் இணைத்து முஸ்லிம் காங்கிரஸின் வாக்குகளைக் கொள்ளையிட்டு தாங்கள் அம்பாறை மாவட்டத்தில் அதிக ஆசனங்களைப் பெற்று வெற்றி பெறலாம் என்று ஐக்கிய தேசியக் கட்சி நினைக்குமானால் அது அவர்களின் பகல் கனவாக மட்டுமே இருந்து போகும். இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர் ஒருவர் கூட அண்மையில் ஷேகு இஸ்ஸதீனை சந்தித்து முஸ்லிம் காங்கிரஸில் இணையுமாறும் தாங்கள் இருவரும் உள்ளிருந்தே முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்கு எதிராகப் போராட்டம் நடத்தி அந்தக் கட்சியை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவோம் என்றும் மந்திராலோசனை நடத்தினார் என கூறப்படுகிறது.

அதாவது, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணிலுக்கு எதிராக அவரது கட்சிக்குள்ளேயே ஒரு குழு செயற்படுவது போன்று நாமும் செயற்படுவோம் என்றும் அந்த முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர் சேகு இஸ்ஸதீனிடம் தெரிவித்தார் என்றும் கூறப்படுகிறது. உண்மையில் இவ்வாறு நடந்திருந்தால் இதனை ஓர் அரசியல் விபசாரத்தனமாகவே கொள்ள வேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :