எமது இருப்பை உறுதிப்படுத்துவதில் பெரும்பங்காற்றுபவனவாக விளையாட்டு மற்றும் கல்வி என்பன இருக்கின்றன

த.நவோஜ்-

விளையாட்டு என்பது தற்போதைய கால கட்டத்தில் எமது இளைஞர்களுக்கும், சிறுவர்களுக்கும் இன்றியமையாத ஒன்றாகத் திகழ்கின்றது. 


நாம் எமது இருப்பை உறுதிப்படுத்துவதில் பெரும்பங்காற்றுபவனவாக விளையாட்டு மற்றும் கல்வி என்பன இருக்கின்றன என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.

அமிர்தகழி சனசமூக நிலையத்தினால் நடாத்தப்பட்ட விளையாட்டுப் போட்டி நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்!

எமது இனம் முன்னனொரு காலத்தில் விளையாட்டுகளிலும் சரி கல்வியிலும் சரி பெரும் சாதனைகளைப் படைத்த இனம். ஆனால் தற்போது நாம் அனைத்திலும் இருந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றோம். தற்போiயை காலத்தில் எமது இந்த கிழக்கு மாகாணத்தைப் பொருத்த மட்டில் தமிழர்களாகிய நாம் கல்வியிலும் சரி தொழில் வாய்ப்புகளிலும் சரி புறக்கணிப்புக்குள்ளாக்கப்படுவதுடன், எமது இனத்தாரை தள்ளி வைத்து விட்டே அனைத்தும் வழங்கப்படுகின்றது.

இந்த நிலைமையினை மாற்றுவதற்காகவே எமது தமிழ் தேசிக் கூட்டமைப்பு எப்போதும் போராடிக் கொண்டிருக்கின்றது. இந்த கிழக்கு மாகாண சபையின் இத்தகைய செயற்பாடுகளுக்காக நாம் நீதிமன்றம் வரை சென்றுள்ளோம். இது தொடர்பாக அனைத்து மக்களும் அறிந்ததே. இதனைப் பற்றி எமது மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய அவசியமில்லை.

இப்படி பலவற்றில் நாம் புறக்கணிக்கப்பட்டு வருகின்றோம். இவ்வாறான பிரச்சனைகள் இடம்பெறும் போது இந்த அரசாங்கத்துடன் ஒட்டிக்கொண்டிருப்பவர்கள் இதைப் பற்றி கண்டும் காணாதவர்களாக இருக்கின்றனர். ஆனால் எம்மால் அவ்வாறு இருக்க முடியாது ஏனெனில் நாம் மக்களால் தெரிவு செய்யப்பட்டு மக்களுக்காக சேவை செய்ய வந்தவர்கள்.

ஆனால் இன்று எம்மைப் பற்றியே ஒரு சில இணையத் தளங்கள் மக்களை குழப்புவதற்காக திட்டமிட்டு சில வதந்திகளை பரப்புகின்றன. தமிழில் ஒரு பழமொழி இருக்கின்றது 'காய்த்த மரத்திற்கு தான் கல்லெறி விழும்' என்று அது போலவே எமது கடந்தகாலம் பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு என்னைப் பற்றித் தெரியும். கடந்த கால யுத்தத்தின் போது எமது தமிழ் மக்களுக்காக தமிழ் தேசியத்திற்காக ஆயுதம் ஏந்தி போராட முன்வந்தவன் நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மக்களையும், மண்ணையும் விட்டு ஓடி ஒழிக்கவில்லை பல இன்னல்களுக்கு மத்தியில் எனது சொத்துக்களை இழந்தும் நான் மக்களுடன் களத்தில் நின்றவன்.

யுத்தகாலத்தில் எமது மக்கள் அல்லலுறும் போது வெளிநாடுகளில் இருந்து சுகபோகங்களை அனுபவித்து அதனை ஏன் என்று கேள்வி கேட்காதவர்கள் எமது மக்களின் நிலைகளை சற்றும் சிந்தித்துப் பார்க்காதவர்கள் தற்போது அரசியல் நோக்கத்திற்காக இங்கு வந்து நீலிக்கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கின்றார்கள். எனது போராட்ட ஆரம்ப காலம் அனைவரும் அறிந்ததே நான் எப்படிப்பட்டவன் என்பது எமது மக்களுக்கு தெரியும் பதவிக்காக அரசியலுக்கு வந்தவன் நான் அல்ல. நான் புலிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபடாவிட்டாலும் அன்றிருந்தவர்கள் என்னை புலிகளின் ஆதரவாளன் என்றே கருதினர். அவ்வாறுதான் நான் எனது போராட்ட வாழ்க்கையை முன்னெடுத்துச் சென்றேன்.

அன்றும் தமிழ் தேசியத்திற்காகவே போராட முன்வந்தோம் இன்றும் தமிழ் தேசியத்தை நேசித்தே போராடிக் கொண்டிருக்கின்றோம். இதை அறியாதவர்களே என்னையும் இணைத்து சில இணைத்தளங்களில் புறழிகளை ஏற்படுத்தி வருகின்றனர். என்னைப் பற்றி மக்களுக்கு தெரியும் யார் யார் தேசியத்திற்கு எதிராகச் செயற்பட்டவர்கள் என்றும் மக்கள் நன்கு அறிவார்கள். தமிழ் தேசியத்திற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்க முயற்சித்தாவர்களில் நானும் ஒருவன் இதை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருக்கும் ஒவ்வொருவரும் நன்கு அறிவர்.

இது அனைத்தையும் நான் தெரியப்படுத்த வேண்டும் என்று அவசியமில்லை ஆனால் தற்கால நிலைமை அவ்வாறு ஆகிவிட்டது. கடவுள் வரம் கொடுக்க நேரில் வந்தாலும் அவரையே முதலில் தூற்றும் உலகம் தான் தற்போது இருக்கின்றது ஆனால் நானோ சாதாரண மனிதன் என்னைப்பற்றி தெளிவுபடுத்தியே ஆக வேண்டும். ஆனால் ஒன்று மட்டும் உறுதியாக தெரிவித்துக் கொள்கின்றேன்.

எத்தனை பேர் எம்மைத் தூற்றினாலும் எமது இலக்கை எட்டும் வரை எமது போராட்டமும் எமது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகளும் எவ்வித தடங்கலும் இன்றி முன்னோக்கிச் செல்லுமே தவிர ஒரு போதும் நாம் ஓயமாட்டோம். அந்த வகையில் எமது இளைஞர்களையும், சிறுவர்களையும் இணைத்து இன்று இந்த விளையாட்டு நிகழ்வினை நடாத்திக் கொண்டிருக்கும் அமிர்தகழி சனசமுக நிலையத்தினருக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன், எமது சிறார்களை விளையாட்டில் மட்டுமல்லாது கல்வியிலும் மேம்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :