தவிசாளருடன் இணைந்து:அமைச்சர் உதுமாலெப்பை முஸ்லிம் சமூகத்தினருக்கு துரோகம் இழைத்து விட்டார்-ஜெமீல்

அஸ்லம் எஸ்.மௌலானா-

ளுத்கம சம்பவம் தொடர்பில் கிழக்கு மாகாண சபையில் அரசாங்கத்தையும் பொதுபல சேனாவையும் கண்டித்து எம்மால் கொண்டு வரப்பட்ட அவசர பிரேரணையை தவிசாளருடன் இணைந்து தடுத்ததன் மூலம் மாகாண அமைச்சர் உதுமாலெப்பை முஸ்லிம் சமூகத்தினருக்கு பெரும் துரோகம் இழைத்து விட்டார்.

இவ்வாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் விசனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;

"அளுத்கம, தர்கா நகர், பன்னல உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் படுமோசமாக கட்டவிழ்த்து விடப்பட்ட முஸ்லிம்கள் மீதான இன வெறித் தாக்குதல்களைத் தொடர்ந்து அதன் சூத்திரதாரியான பொதுபல சேனாவையும் அரசாங்கத்தையும் கண்டித்து கடந்த 17ஆம் திகதி இடம்பெற்ற கிழக்கு மாகாண சபையின் மாதாந்த சபை அமர்வில் அவசர பிரேரணை ஒன்றை சமர்பித்து நிறைவேற்றுவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் நான் அனுமதி கோரி இருந்தேன்.

அது குறித்து அன்று மாகாண சபை அமர்வுக்கு முன்னதாக தவிசாளர் ஆரியவதி கலப்பதி தலைமையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் என்னால் இப்பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டு- அனுமதி கோரப்பட்டது. அதன் பிரகாரம் அதனை அன்றைய நிகழ்ச்சி நிரலில் முதல் நிகழ்வாக எடுத்துக் கொள்வது என இணக்கம் காணப்பட்டிருந்தது.

அதன் பிரகாரம் சபை கூடியபோது எமது கண்டனப் பிரேரணையை சமர்ப்பிதற்கு அனுமதி கோரினேன். ஆனால் தவிசாளர் வேறொரு நிகழ்வினை அறிவிப்பு செய்தார். அதற்கு நாம் அனுமதிக்கவில்லை. எம்மால் அமைக்கப்பட்ட கிழக்கு மாகாண சபையில் எம்மால் தெரிவு செய்யப்பட்ட தவிசாளர், முஸ்லிம்களின் சமகாலப் பிரச்சினைகள் தொடர்பில் பேசுவதற்கு இடமளிக்காமல் சபையை சிங்கள பேரினத்திற்கு சார்பாக கொண்டு செல்ல முற்பட்டார். அப்போது முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் தவிசாளரின் பக்க சார்பான செயற்பாட்டைக் கண்டித்து எதிர்த்தோம்.

எமது மு.கா. உறுப்பினர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து தவிசாளர் சபையை ஒத்திவைத்து விட்டு கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நடத்தினார்.

அதில் எமது கண்டனப் பிரேரணையை சமர்ப்பிக்க மீண்டும் அனுமதி கோரி அதற்கான நியாங்களை எடுத்துக் கூறியபோது அமைச்சர் உதுமாலெப்பை தவிசாளருடன் இணைந்து அந்த பிரேரணையை தள்ளுபடி செய்வதற்காக குரல் எழுப்பினார். 

அளுத்கம, தர்கா நகர் முஸ்லிம்களுக்கு இன்று ஏற்பட்டுள்ள நிலை எதிர்காலங்களில் தமிழ், சிங்கள மக்களுக்கும் ஏற்பட வாய்ப்பிருப்பதாகக் கூறிய அமைச்சர் உதுமாலெப்பை, இது போன்ற நிலைமைகளின் போது கிழக்கு மாகாண சபையில் விவாதம் நடத்துவதற்கு பொதுவான கொள்கை ஒன்றை வகுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து- முஸ்லிம் சமூகம் சம்மந்தப்பட்ட பிரேரணையை மழுங்கடிக்கும் வகையில் தவிசாளருக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து சபை கூடியபோது பேரினவாதிகளினால் தீக்கிரையாக்கப்பட்ட தர்கா நகர் முஸ்லிம்களின் இரத்தக்கறை படிந்த கோர சம்பவங்கள் தொடர்பில் பேசுவதற்கும் அதன் சூத்திரதாரிகளைக் கண்டித்தும் அவர்கள் கைது செய்யப்பட்டு- சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்துவதற்கும் சந்தர்ப்பம் கோரிய போது தவிசாளரினால் மறுப்புத் தெரிவிக்கப்பட்டதுடன் அவருக்கு ஆதரவாகவும் பக்கபலமாகவும் அமைச்சர் உதுமாலெப்பை கோஷம் எழுப்பினார்.

அன்று முஸ்லிம்களின் தர்கா நகர் முற்றாக எரித்து சாபலாக்கப்பட்டு- அவர்கள் உடுத்த உடையுடன் அகதிகளாக வெளியேறும் கோரமான காட்சிகளை பார்த்து முழு உலகுமே கண்ணீர் சிந்திக் கொண்டிருந்த நிலையில் எமது உணர்வுகளுடன் விளையாடுவதற்கு தவிசாளர் முற்பட்டார். அதற்கு முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த ஒரு அமைச்சரே பக்க துணையாக நின்றிருந்தார் என்பது மிகவும் கவலைக்கும் கண்டனத்திற்கும் உரிய விடயமாகும்.

ஒரு அமைச்சுப் பதவிக்காக- சுயநல அரசியலுக்காக தனது தலைவர் வழியில் அரசாங்கத்தை திருப்திப்படுத்தும் நோக்கில் மாகாண அமைச்சர் உதுமாலெப்பையும் பல்வேறு சந்தர்ப்பங்களில் முஸ்லிம் சமூகத்திற்கு துரோகமிழைத்து வந்துள்ளார். 

ஆனால் முஸ்லிம்கள் கொல்லப்பட்டும் அவர்களது வீடுகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் சொத்துகள் எரித்து நாசமாக்கப்பட்டும் அவர்களது உயிர், உடைமை அனைத்தும் கேள்விக்குறியாக்கப்பட்டு நிர்க்கதியடைந்து அகதி முகாம்களில் தஞ்சமடைந்துள்ள நிலையிலும் முஸ்லிம் பெண்களின் கற்புகளுக்கு கூட உத்தரவாதம் இல்லாத ஆபத்தான சூழ்நிலையிலும் பரிதவித்துக் கொண்டிருக்கின்ற போது அவர்களுக்காக குரல் எழுப்பும் வாய்ப்பைக் குழிதோண்டிப் புதைத்த உதுமாலெப்பையின் துரோகத்தனம் மிகவும் கேவலமானதாகும். 

அவரின் இந்த சுயநல செயற்பாட்டை எதிர்கால சந்ததி கூட நிச்சயம் மன்னிக்க மாட்டாது என்பதை அவர் புரிந்து கொள்ளுதல் வேண்டும். பதவி, சொகுசுகளுக்காக சமூகத்தைக் காட்டிக் கொடுப்போர் இறைவன் சந்நிதானத்தில் பதில் சொல்லியாக வேண்டும். இந்த உலகத்தில் கூட அவர்கள் தம் சமூகத்தினரால் தண்டிக்கப்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

சபையில் சமூகத்தினருக்கு எதிராக செயற்பட்டு விட்டு- வெளியே வந்து தான் சரியாக நடந்து கொண்டது போன்றும் மு.கா. உறுப்பினர்களாகிய நாம்தான் தவறிழைத்து விட்டோம் என்றும் ஊடகங்களுக்கு அவர் கருத்துக் கூறியிருப்பது அவரது நயவஞ்சகத்தையும் கோழைத்தனத்தையுமே காட்டுகிறது. 

அவர் சொல்லியிருப்பது உண்மையாக இருந்தால்- அது குறித்து என்ண்டுஅன் பகிரங்க விவாதம் ஒன்றை நடத்துவதற்கு அவர் தயாரா என்று சவால் விடுக்கின்றேன். இது தொடர்பில் எந்தவொரு ஊடகத்திலோ பகிரங்க இடம் ஒன்றிலோ அவருடன் விவாதிப்பதற்கு நான் தயாராக இருக்கின்றேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.. 

எம்மால் அமைக்கப்பட்ட மாகாண சபையில் எமது சமூகத்தினருக்காக பேசும் உரிமையை தடுத்து நிறுத்திய தவிசாளருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்து அவரை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளோம். அது போன்று முஸ்லிம் சமூகத்தினருக்கு துரோகமிழைத்து வருகின்ற மாகாண அமைச்சர் உதுமாலெப்பையையும் அமைச்சுப் பதவியில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய துர்ப்பாக்கியம் ஏற்படும் என்று அவரை இந்த சந்தர்ப்பத்தில் எச்சரிக்கிறேன்" என்று குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :