அஸ்லம் எஸ்.மௌலானா-
கல்முனை மாநகர சபை எல்லைக்குள் சுகாதாரத்திற்கு கேடாக அமைந்திருந்த மூன்று உணவகங்களை மூடுமாறு சுகாதாரத் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.
கல்முனை மாநகர பிரதேசங்களில் இன்று வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு பரிசோதனை நடவடிக்கைகளின் போது இம்மூன்று உணவகங்களும் மிக மோசமான நிலையிலும் சுகாதாரத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் இயங்கி வந்தமை கண்டிபிடிக்கப்பட்டதாக மாவட்ட மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பி.பேரம்பலம் தெரிவித்தார்.
இம்மூன்று உணவகங்களும் சுகாதார நடைமுறைக்கு ஏற்ற வகையில் மீளமைக்கப்பட்ட பின்னர் எமது சுகாதார அதிகாரிகள் பார்வையிட்டு உறுதி செய்யும் படசத்தில் அவற்றை மீண்டும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
அதேவேளை நேற்று கல்முனை மாநகர பிரதேசங்களிலுள்ள உணவகங்களில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு பரிசோதனை நடவடிக்கைகளின் போது கைப்பற்றப்பட்ட மனித நுகர்வுக்கு உதவாத உணவுப் பொருட்கள் இன்று கல்முனை மாநகர சபை வளாகத்தில் வைத்து எரியூட்டி அழிக்கப்பட்டது.
இதன்போது கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, மாநகர சபையின் பிரதம சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர் எம்.சி.எம்.மாஹிர், கணக்காளர் எச்.எம்.எம்.ரஷீத், மாவட்ட மேற்பார்வை சுகாதார பரிசோதகர் பி.பேரம்பலம் மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களும் பிரசன்னமாகி இருந்தனர்.
அதேவேளை கடந்த ஒரு வார காலத்தினுள் கல்முனை மாநகர பிரதேசங்களில் ஹோட்டல்கள், தேநீர் கடைகள், பலசரக்கு கடைகள், கிழங்கு பொரியல் கடைகள் உட்பட 244 உணவு கையாளும் நிலையங்கள் திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது எனவும் இதன்போது பெரும்தொகையான பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு- அழிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றின் உரிமையாளர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாகவும் மாவட்ட மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பி.பேரம்பலம் தெரிவித்தார்.
எதிர்காலங்களில் தமது உணவகங்களில் சுத்தம் சுகாதாரம் பேணுவதில் அலட்சியம் காட்டும் உரிமையாளர்கள் மீதும் மனித நுகர்வுக்கு உதவாத மற்றும் காலாவதியான உணவுப் பொருட்களை வைத்திருப்போர் மீதும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பொது மக்களுக்கு சுத்தமான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதிப் படுத்தும் பொருட்டு கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பரின் உத்தரவின் பேரில் மாநகர் சபையின் பிரதம சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர் எம்.சி.எம்.மாஹிர் அவர்களின் வழிகாட்டலில் கல்முனை மாநகர பிரதேசங்களில் இந்த திடீர் சுற்றிவளைப்பு சோதனைகள் முடுக்கி விடப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment