கலை கலாச்சாரங்களை பாதுகாக்க முன்வரவேண்டும் இல்லையேல் எங்களது கலை முற்றாக மங்கிப் போகும்- யோகேஸ்வரன்

த.நவோஜ்-
ங்களது கலை, பாரம்பரிய விளையாட்டுக்கள் மற்றும் பாரம்பரிய பண்பாடுகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தற்கால தமிழ் சமூகத்தின் தேவையாக உள்ளது. இந்தவகையில் எங்கள் மாணவ சமூகம் கல்வியில் முன்னேற்றம் கண்டு அதன் மூலம் எங்களது கலை கலாச்சாரங்களை பாதுகாக்க முன்வரவேண்டும் இல்லையேல் எங்களது கலை முற்றாக மங்கிப் போகும் நிலை வந்துவிடும் என மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

வாழைச்சேனை புதுக்குடியிருப்பு கலை வாணி கலா மன்றத்தினால் தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டை சிறப்பிக்கும் முகமாக பரிசளிப்பு விழா மற்றும் கௌரவிப்பு விழா மன்றத் தலைவர் சு.சுதர்ஜன் தலைமையில் இடம்பெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வாழைச்சேனை புதுக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய குருக்கள் முரசொளிமாறன், புதுக்குடியிருப்பு கிராம சேவை உத்தியோகத்தர் திருமதி.சாந்தினி குமாரவேல், புதுக்குடியிருப்பு கிராம அபிவிருத்திச் சங்க பொருளாளர் எஸ்.மோகனராசா, புதுக்குடியிருப்பு மாதர் சங்கத் தலைவி திருமதி.மெத்தியேஸ் உட்பட பல அதிதிகள் கலந்து கொண்டதுடன், ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களும் இதில் கலந்து கொண்டனர்.

இங்கு பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில்!

புதுவருடத்திலே விளையாட்டு நிகழ்வு மற்றும் கலை நிகழ்வு ஏன் நடைபெறுகின்றது என்றால் இந்த புதுவருடத்திற்கு உரியவர்களாக இருக்கின்ற தமிழர்கள் சிங்களவர்கள் தங்களது கலை கலாசார விழுமியங்களை தங்களது சமூகத்தின் மத்தியிலே நினைவாக வைப்பதற்கும் அதனை வளர்ப்பதற்கும், தமது இனத்தின் பாரம்பரியத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்குமாகவே பெரும்பாலும் இந்நிகழ்வுகள் நடாத்தப்படுகின்றன.

இவ் கலா மன்றம் 1969ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அக்காலப் பகுதியில் இருந்து இவ் அரங்கில் பல கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றது. இந்த புதுக்குடியிருப்பு கிராமத்திலும் மற்றும் அயல் கிராமத்திலும் வாழ்ந்த பல கலைஞர்கள் இக்கலை அரங்கை அலங்கரித்தார்கள். வேறு இடங்களுக்கும் சென்று கலை கலாசார நிகழ்வுகளை நடாத்தி காட்டி, இம்மண்ணுக்கு பெருமை சேர்த்தனர்.

ஆனால் தற்போது இவ்வாறான கலை கலாசார நிகழ்வுகள் நடைபெறாமல் இருப்பதை இட்டு நான் மிகவும் வேதனையடைகின்றேன். புதுவருடத்தில் எங்களது சமூகத்தில் இலை மறை காயாக உள்ள கலைஞர்களின் கலைத்திறன்கள் இவ் அரங்கின் மத்தியிலே கொண்டுவரப்பட வேண்டும். அது ஏனைய இடங்களிலும் பிரபல்யமாக்கப்பட வேண்டும். இதன் மூலமே எமது கலையை வளர்க்க கலை வாணி கலாமன்றம் முன்வர வேண்டும் என இந்த இடத்திலே கேட்டுக் கொள்கின்றேன்.

தற்போது எங்களுடைய கலை, கலாசார விழுமியங்கள் அனைத்தும் எங்களிடமிருந்து மறைந்து போய் உள்ளது. குறிப்பாக விளக்கு ஏற்றும் போது அனைத்து தமிழ் இந்து மக்களும் எழுந்து நிற்க வேண்டும். அதற்கு கை தட்டுவது நமது தமிழ் கலாச்சாரமும் அல்ல, இந்து கலாசாரமும் அல்ல அதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.

விளக்கேற்றல் ஒளியமயமான இறைவணை அந்த இடத்திலே எழுந்தருளச் செய்வதைதான் குறிக்கின்றது. இதுதான் இந்து கலாசாரம், தமிழ் கலாசாரம் எங்களுடைய கலாச்சாரங்களை கட்டி வளர்ப்பதற்காகவே தான் இவ்வாறான புத்தாண்டு கலாசார நிகழ்வுகள் நடைபெறுகின்றது.

வெறுமனே இப்புத்தாண்டு காலங்களில் விளையாட்டு நிகழ்வுகளையும், களியாட்ட நிகழ்வுகளையும் நடாத்தவதால் எதுவித பிரயோசனமும் இல்லை. எங்களிடம் இருந்த பல கலைகள் அழிந்து விட்டன. ஒரு காலத்தில் இங்கு பல மகுடிகள் இடம்பெற்றது. தற்போது ஒரு மகுடியும் நடைபெறுவதில்லை. மகுடி எங்கள் கலாச்சார நிகழ்வாக இருந்தது. தற்போது அது மறைந்து விட்டது.

கலை அரங்குகளில் விடிய விடிய நாட்டுக் கூத்து நடந்தது. இப்போது அது விற்கப்பட்டு விட்டதா? என சந்தேகம் எங்களிடம் உருவாகி இருக்கின்றது. இதனை வேறு இனத்தவர்கள் தங்களது கலாச்சாரமாக கொண்டு விட்டார்கள். தங்களது கலையாக எடுத்து விட்டார்கள்.

எங்களது கலைகளைப் பாதுகாக்கவும், பாரம்பரியத்தை பாதுகாக்கவும், பாரம்பரிய விளையாட்டுக்களை பாதுகாக்கவும், பாரம்பரிய பண்பாடுகளை பாதுகாக்கவும் எங்கள் சமூகம் முன்வர வேண்டும். அதை எல்லோரும் நினைவில் கொள்ள வேண்டும்.

கிழக்கு மாகாணத்திலே மட்டக்களப்பு மாவட்டம் கல்வியே உயர்ந்திருந்தது. விஞ்ஞானப் பட்டதாரியாக இருந்த சுவாமி விபுலானந்தர் இந்தியாவில் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் ஒரு தமிழ் பேராசிரியராக இருந்தார். விஞ்ஞானப்; பட்டதாரியான ஒருவர் தமிழர் பேராசிரியராக இருந்ததாலே எங்களது கிழக்கு மண் கல்வியே உயர்ந்திருந்ததை எடுத்துக் காட்டியது.

தற்போது கல்வியிலே இந்த மட்டக்களப்பு மாவட்டம் பல பின்னடைவுகளை சந்தித்து இருக்கின்றது. இது மிகவும் வேதனையைத் தருகின்றது. இந்நிலையிலே தான் இ;ந்த கலாமன்றம் இப்பிரதேசத்தில் கல்வியில் சாதனை படைத்த மாணவர்களுக்கு கௌரவிப்பு செய்து வருகின்றனர். இவ் கௌரவிப்பு மென்மேலும் தொடர வேண்டும். அதற்கு என்னாலான உதவிகள் என்றும் மேற்கொள்ள தயாராக உள்ளேன்.

நீங்கள் அனைவரும் கல்வியிலே ஆர்வம் காட்ட வேண்டும். இந்தக் கல்வியின் மூலமே எங்களது சமூகத்தின் சகல உரிமைகளையும் எதிர்காலத்தில் பெறமுடியும். அதற்கு கல்லி ஒன்று தான் எங்களுக்கு துணையாக இருக்கின்றது என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

இங்கு கௌரவிக்கப்பட்ட பல்கலைக் கழக மாணவர்கள் பெற்றோரை இழந்தவர்களாக அல்லது மிகவும் வறியவர்களாக இருப்பவர்கள் பல்கலைக் கழக கல்வியை தொடர முடியாமல் கஷ்ர நிலையில் காணப்பட்டால் என்னோடு தொடர்பு கொண்டால் உங்களுக்கு உதவுவது சார்பாக என்னால் பரிசீலிக்க முடியும் என்பதை தெரிவிக்கின்றேன்.

மட்டக்களப்பு மாவட்டத்திலே கிட்டத்தட்ட 79 பல்கலைக் கழக மாணவர்களுக்கு எங்களது மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை பணம் வழங்கப்படுகின்றது. அத்தோடு எனது சொந்த நிதியில் இருந்து 36 மாணவர்களுக்கு நிதி வழங்கி வருகின்றேன். மிகவும் வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்களுக்குத் தான் எங்களுக்கு உதவி வழங்க முடியும்.

எமது தமிழ் பண்பாடையும், தமிழ் கலாச்சாரத்தையும் நீங்கள் ஒவ்வொருவரும் மனதில் கொண்டு பாதுகாக்க முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டு இந்த கலா மன்ற அரங்கில் எதிர்காலத்தில் எங்களது கலை நிகழ்ச்சிகள் நடைபெற ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :