வடிவேலுவின் தெனாலிராமன் படத்தின் விமர்சனம் : மொத்தத்தில் ‘தெனாலிராமன்’ கோமாளி.

நடிகர் : வடிவேலு
நடிகை :மீனாட்சி தீக்ஷித்
இயக்குனர் :யுவராஜ் தயாளன்
இசை :டி.இமான்
ஓளிப்பதிவு :ராம்நாத் ஷெட்டி

விகட நகரத்தை ஆட்சி செய்து வருகிறார் வடிவேலு. இவரது அரசவையில் நவரத்தின மந்திரிகளாக 9 பேர் பணிபுரிந்து வருகிறார்கள். குறுநீல மன்னரான ராதாரவி சீன அரசிடம் பணத்தை வாங்கிக் கொண்டு, அவர் ஆட்சி செய்யும் நாட்டிற்கு சீன வணிகத்தை கொண்டு வருகிறார். இதேபோல் விகட நகரத்திலும் சீன வணிகத்தை புகுத்த நவரத்தின மந்திரிகளையும் கைக்குள் போட்டுக் கொண்டு திட்டம் தீட்டுகிறார்.

இவர்களின் திட்டத்திற்கு ஒரே ஒரு மந்திரி மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கிறார். எதிர்ப்பு தெரிவிக்கும் மந்திரி கொல்லப்படுகிறார். விகட நகரத்தின் அரசவையில் நவரத்தின மந்திரிகளில் ஒருவர் இல்லாததால், அந்தப் பதவிக்கு தெனாலிராமனான மற்றொரு வடிவேலு வருகிறார். தெனாலிராமனை எப்படியாவது கைக்குள் போட்டுக் கொண்டு சீன வணிகத்தை விகட நகரத்திற்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்று மந்திரிகள் திட்டம் தீட்டுகின்றனர்.

தெனாலிராமனோ, மக்களுக்கு எந்தவொரு நன்மையும் செய்யாத அரசன் வடிவேலுவை கொல்வதற்காகவே அரசவையில் இடம்பிடித்துள்ளான். ஆனால் இங்கு வந்து பார்த்தபிறகுதான் அரசன் ஒரு அப்பாவி, அவர் தீட்டும் நல்லத்திட்டங்களை மந்திரிகள்தான் செயல்படுத்தாமல் இருக்கிறார்கள் என்ற உண்மையை தெரிந்துக் கொள்கிறான். இதனால் மந்திரிகள் போடும் திட்டத்திற்கு தெனாலிராமன் முட்டுக்கட்டையாக இருக்கிறான். அவர்களை பழிதீர்க்கவும் முடிவு செய்கிறான்.

இறுதியில் மந்திரிகளின் சதி திட்டத்தை தெனாலிராமன் முறியடித்தாரா? தங்களின் திட்டத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் தெனாலிராமனை மந்திரிகள் பழிவாங்கினார்களா? என்பதே மீதிக்கதை.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றும் வடிவேலு, முந்தைய படங்களில் பார்த்த தெளிவு இல்லை. இவருக்கு உரித்தான வசனங்களும், பாடிலாங்வேஜும் இப்படத்தில் காணமுடியவில்லை. நிறைய காட்சிகளில் நீண்ட வசனங்களைப் பேசி பார்ப்பவர்களை போரடிக்க வைக்கிறார். வடிவேலு படம் என்றாலே முழுக்க முழுக்க சிரித்து விட்டு வரலாம் என்று நம்பி திரையரங்கு போனவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.

படத்தில் நாயகி மீனாட்சி தீக்‌ஷீத், பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார். ஒல்லியான தேகமும், மென்மையான சிரிப்புமாக மனதை கொள்ளை கொள்கிறார். நடிக்க வாய்ப்பு குறைவு என்றாலும் துறுதுறு நடிப்பில் ரசிகர்களை கவர்கிறார்.

படத்தில் ராதாரவி, மனோபாலா, தேவதர்ஷினி, நமோ நாராயணன், சண்முக ராஜ் போன்ற பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ளார்கள். அனைவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

டி.இமான் இசையில் ‘ஆணழகு’ பாடல் ரசிக்க தூண்டுகிறது. ‘ரம்பப்ப’ பாடல் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசையிலும் சிறப்பாக செய்திருக்கிறார். ராம்நாத் ஷெட்டியின் ஒளிப்பதிவில் அரண்மனைக் காட்சிகளை படமாக்கிய விதம் அருமை. பிரபாகரனின் அரங்கமைப்பு மெய்சிலிர்க்க வைக்கிறது. படத்தில் அனைவருடைய உடைகளும் கண்ணை கவரும் வகையில் அழகான வடிவமைத்த ஆடை வடிவமைப்பாளர் முருகனுக்கு பெரிய கைத்தட்டலை கொடுக்கலாம்.

சரித்திர பின்னணி கொண்ட கதையை காமெடி என்ற பெயரில் பல்வேறு புதுமைகளை புகுத்த நினைத்த இயக்குனர் யுவராஜ் தயாளன் திரைக்கதையில் கோட்டைவிட்டுயிருக்கிறார். பிளாஸ்பேக் காட்சிகளை மிகநீண்ட காட்சிகளாக வைத்திருப்பது போரடிக்க வைக்கிறது. அடுத்தடுத்து நடக்கும் காட்சிகளை முன்கூட்டியே யூகிக்கும் அளவிற்கு படமாக்கி சலிப்பை ஏற்றுகிறார் இயக்குனர்.

மொத்தத்தில் ‘தெனாலிராமன்’ கோமாளி.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :