நூலறிமுகம் - பாலமுனை பாறுக் குறும்பாக்கள்

நூல் : பாலமுனை பாறுக் குறும்பாக்கள்
ஆசிரியர் : கலாபூசணம் பாலமுனை பாறுக்
பதிப்பு : புரவலர் புத்தகப் பூங்கா, கொழும்பு.
விலை : 200.00
நூலாய்வு : அட்டாளைச்சேனை எஸ்.எல். மன்சூர்


பாலமுனை பாறுக் நாடறிந்த கவித்துமிக்க நூல்களைப் படைத்துவரும் கவிஞர், பன்முகப்பார்வையுடன் கவிதைகளை எழுதிவருபவர். இவரது கவிதைகள் ஒவ்வொன்றும் தன்னுடைய நாளாந்த வாழ்க்கை முறைகளின் அடிப்படையில் பின்ணிப்பிணைந்து காணப்படுவது விசேட அம்சமாகும். அந்த அடிப்படையில் ஆறாவது படைப்பாக பாலமுனை பாறுக் குறும்பாக்கள் எனும் தொகுதியினை வெளியிட்டு இலக்கிய உலகிற்கு தன்னுடைய பங்கினை செலுத்தியுள்ளார்.

இலங்கையின் மகாகவி அமரர் உருத்திரமூர்த்தி அவர்களைத் தொடர்ந்து கவிதைப் பாணியில் குறும்பாக்கள் வெளிவரத் தொடங்கின. மகாகவிக்குப் பிறகு அதிகமான குறும்பாத் தொகுதிகள் வெளிவந்திருப்பது கிழக்கு மாகாணத்தின் தென்கிழக்குப் பிரதேசத்திலாகும். ஒலுவில், பாலமுனை பிரதேச கவிஞர்கள் மூவர் குறும்பாக்களை வெளியிட்டுள்ளனர். அந்த மூவரில் பாலமுனை பாறுக் அவர்களும் ஒருவர்;. ஏற்கனவே ஒலுவில் எஸ்.ஜலாத்தீன், ஒலுவில் ஜே. வகாப்தீன் ஆகியோரும் குறும்பாத் தொகுதிகளை வெளியிட்டுள்ளனர்.

எந்தவொரு விடயத்தையும் நகைச்சுவைப்பாங்கான முறையில் மேற்கொள்கின்றபோது அந்தவிடயம் வெற்றி பெறும். அந்த வகையில் சொல்ல வந்த விடயங்களை நகைச்சுவைப்பான முறையில் சொல்கின்றபோது அது இரசிகர்களின் மனதில் இலகுவாக பதிந்துவிடும். கூறவந்த விடயமும் மறைமுகமாக அங்கே கூறப்பட்டுவிடும். பொதுவாக பாலமுனை பாறுக் அவர்கள் எப்போதுமே நகைச்சுவையாக பேசுபவர். மேடைகளில் கவிதை பொழிகின்றபோது நகைச்சுவைய ததும்ப பேசுவார். சாதாரணமாக பேசுகின்றபோதும் நகைச்சுவையாகவே பேசக் கூடியவர். இவரது கவிதைகளும் நகைச்சுவையாக அமைகின்றபோது அது இரசிக்கக் கூடியதாக இருக்கும்.

இந்நூலுக்கு நெய்திறம் மிக்க நெசவாளர் செய்த நேரிய நூல்' எனும்' எனும் தலைப்பில் பேராசிரியர், முனைவர் மு.இ. அகமது மரைக்காயர் வழங்கியுள்ள ஆசியுரையில் 'மரபில் வல்லவரான கவிப்புனல் பாறுக் புதுக்கவிதையின் பக்கம் சிறிது பயணித்து மீண்டும் யாப்பை நோக்கி வந்துள்ளார். கவிஞர்களிடம் குறும்பாக்களைப் படைக்கும் போக்கு துளிர்த்துள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது' என்று 'நெய்திறம் மிக்க நெசவாளர் செய்த நேரிய நூலாகிய இந்நூல் இலக்கியச் சுவைஞர்களின் உள்ளங்களில் உயரிடம் பிடிக்கும்; என்று உறுதியாகக் நம்புகிறேன்' என்றும் கூறுகின்றார்.

பேராசிரியர் சி. மௌனகுரு அவர்கள் குறும்பாவில் அமைந்தது சுவைதரும் அங்கதப் பாக்கள் எனும் தலைப்பில் அணிந்துரையில் பாலமுனை பாறுக்கின்; குறும்பாக்களிலே சமூகக் கிண்டல் நன்றாகவே வந்துள்ளது. நம்மை அண்மைக்காலமாகத் தாக்கிய பல விடயங்கள் அவரின் குறும்பாவின் பாடு பொருளாய் உள்ளன. என்று கூறுகின்;றார் பேராசிரியர் சி. மௌனகுரு அவர்கள்.

கலாபூசணம் ஏ.எம்.எம். அலி, தன்னுடைய ஆசியுரையில் 'கலைப் பெறுமானம் நிறைந்த பாலமுனை பாறுக் குறும்பாக்கள்' எனும் தலைப்பில் வழங்கியுள்ளார். 'படைப்புக்குத் தேவையான அனுபவமும் ஆற்றலும் பெற்றிருக்கும் கவிஞர் பாலமுனை பாறுக் வாழ்வின் யதார்த்தத் தளத்தில் நின்று கற்பனையும் அனுபவமும் கலந்து தனக்குள் கருக் கொண்ட பொருளுக்குக் குறும்பா மூலம் அழகிய வடிவங் கொடுத்துள்ளார். இவருக்கு இப்பா மூலம் கிடைத்திருக்கும் ஆனந்தம் ஆத்ம திருப்தி மற்றைய மனிதனையும் மகிழ்விக்கும். அப்படி மகிழ்வித்தலே கவிதையின் முக்கியபணி' என்று கூறுகின்றார்.

வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பதுபோல மகிழ்ச்சி என்னும் நல்லுணர்வு மனதில் ஏற்படும் போதே நகைச்சுவையை இரசித்து வாய்;விட்டுச் சிரிக்க முடியும். மனப்போராட்டம் மறையவும் மனது சமநிலை அடையவும், உடல் நலம் பெறவும் நகைச்சுவை உணர்வு உதவுகின்றது என்கிறார் நூலாசிரியர் பாலமுனை பாறும் 'குறும்பா விருந்து வைத்து' எனும் தலைப்பினூடாக.



பாடும் மீன் எனும் தலைப்பில் வரும் முதலாவது கவிதையிது.

வாவியிலே மீனிருந்து பாடும்

வந்திங்கே பாம்புகளும் ஆடும்

பாவிசைக்கக் கிழக்கிலிருந்துப்

பதிபிறந்தோன் பயிலுவதோ?

நாவினிக்கக் கவிதருவான் நாடும்.



இவ்வாறு பேதை எனும் தலைப்பில்

எழிலரசி எதிர்வீட்டுச் சீதை

எவனோடு ஏகினளோ கோதை

பழிசுமந்தாள், வயிறூதிப்

பதைபதைத்தாள், ஊர்கேட்க

விழிபிதுங்கி நின்றனளே பேதை. இவ்வாறு சமூக நடத்தைக் கோலங்களையும் எழுதியுள்ளமை யதார்த்தமான கவிதைகள் என்றே கூறலாம்.

மேலும் CIRCULAR எனும் தலைப்பில் ஒருகுறும்பா இவ்வாறு அமைந்துள்ளது

சிலகாலம் பணிபுரிந்த சாரு

சேர்கியூலர் என்றவர்;க்குப் பேரு

இளகாமல் நெகிழாமல்

இருந்துபணி புரிந்தவராம்

நெளிகின்றார் பென்சன்கிவ் பாரு!

இவ்வாறு 100 தலைப்புக்களில் ஐந்து வரிகளைக் கொண்ட இக்குறும்பாக்கள் வாசிக்கின்றபோது நம்மிடையே கலந்துள்ள பல விடயங்களை குறும்புத்தனத்துடன் கூறுகின்ற கவிஞரின் சொல்லாடல்கள் மிகவும் கருத்தாளமிக்கதாகவே காணப்படுகின்றன.



பெருவிழா எனும் தலைப்பில் பெருமைக்கு மாவிடிக்கும் கூட்டம் பெயர்பெறுதல் தானவர்கள் நாட்டம் உருப்படியாய் ஒன்றுமில்லை ஒருசிலரைச் சேர்த்தெடுத்து படம் போடத் தானிந்த ஆட்டம்! என்று எங்கோயோ இடிக்கின்றார் இவர் கவிதைகள் ஊடாக. இன்று நடைமுறையிலுள்ள பல்வேறு விடயங்களைத் தொட்டுக் காட்டும் விடயங்களை நீங்களும் ஒருமுறை வாசித்தால் புரிவீர்கள் வாழ்வின் எத்தனையோ நகைச்சுவையின் பக்கங்களை. இறுதியில் தன்னுடைய ஏனைய நூல்களின் விபரங்களும், அட்டையின் இறுதியில் நவாஸ்சௌபி அவர்களின் கவிதை வரிகளும் பாலமுனை பாறுக் அவர்களின் இருப்பின் அர்த்தம் புரிகின்றது.

எழுத்தாகி ஆள்வதும் எழுத்தாகி வாழ்வதும் எல்லோருக்கும் சாத்தியமாகி விடுவதில்லை. இந்தச் சாத்தியத்தை சாதிப்பவர்களே சரித்திரத்தில்; நிலைத்து விடுவார்கள். சரித்திரமே இலகுவில் யாரையும் ஏற்றுக் கொள்ளாது. என்று தன்னுடைய வழமையான நடையில் நின்று பாலமுனை பாறுக் பற்றியும், அவரது கவிதைகள் பற்றியும், அவரது ஆளுமை பற்றியும், இக்குறும்பா பற்றியும் எடுத்தியம்புகின்றார் கவிஞர் நவாஸ் சௌபி. எப்படியோ இன்றைய கால கட்டத்திற்குப் பொருத்தமான கவனிக்கத்தக்கதுமான பல விடயங்கள் உள்ளே பொதிந்துள்ளன. என்பது மட்டும் உண்மையாகும்.

அட்டாளைச்சேனை எஸ். எல். மன்சூர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :