பாராளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் திருப்பூர் வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் மீனவர் பிரச்சினை குறித்து கூறுகையில்,
``இலங்கை கடற்படையினரின் அச்சுறுத்தல்களுக்கும், கொடுமைகளுக்கும், சிறைபிடிப்புகளுக்கும் தமிழக மீனவர்கள் அடிக்கடி ஆட்படுத்தப்படுகிறார்கள். இவை நிகழும் போதெல்லாம் உடனடியாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மூலமும், தூதரக நடவடிக்கைகள் மூலமும் தமிழக மீனவர்கள் விடுவிக்கப்படுவதற்கான நடவடிக்கைகளை நான் மேற்கொண்டு வருகிறேன்.
இதன் மூலம் சிறை பிடிக்கப்பட்டவர்கள் அனைவரும் இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களது உடமைகளும் மீட்கப்பட்டுள்ளன.
இந்தச் சூழ்நிலையில் எனது உத்தரவின் பேரில் தமிழக-இலங்கை மீனவர்கள் இடையேயான முதல் கட்ட பேச்சுவார்த்தை கடந்த 27.1.2014 ஆம் திகதி சென்னையில் நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கு முன்னர் இலங்கை சிறைகளில் வாடிக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நேற்றுமுன்தினம் கொழும்பில் நடைபெறுவதாக இருந்தது.
இந்த பேச்சுவார்த்தையில் தமிழக மீனவர்கள் கலந்துகொள்ளும் வகையில், தற்போது இலங்கை சிறையில் உள்ள 177 தமிழக மீனவர்களையும், 44 படகுகளையும் கண்டிப்பாக இலங்கை அரசு விடுதலை செய்ய வேண்டும் என்று நான் கோரியிருந்தேன்.
என்னுடைய தொடர் வற்புறுத்தல் மற்றும் நிபந்தனை காரணமாக இலங்கை அரசு 116 மீனவர்களையும், 26 படகுகளையும் விடுவித்துள்ளது. இன்னமும் 61 மீனவர்களும், 18 படகுகளும் விடுவிக்கப்பட வேண்டும். இவர்களை விடுவித்தாலே அடுத்தக் கட்டப் பேச்சுவார்த்தையில் தமிழக மீனவர்கள் கலந்து கொள்வார்கள் என்று மத்திய அரசிடம் தெரிவிக்கும்படி நான் உத்தரவிட்டேன். எனது உத்தரவினை அடுத்து தமிழக அரசின் கருத்து மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டது.
எனவே, அனைத்து மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்கும் வகையில் தமிழக -இலங்கை மீனவர்களுக்கு இடையேயான அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைக்கான திகதியை மாற்றியமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. எனது தீவிர முயற்சியின் காரணமாக, அனைத்து தமிழக மீனவர்களும் இன்னும் ஓரிரு நாட்களில் விடுவிக்கப்படுவார்கள். அதன் பின்னர், இரு நாட்டு மீனவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை நடைபெறும் நாள் முடிவு செய்யப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.

0 comments :
Post a Comment