பொதுநலவாய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் பொதுநலவாய அமைச்சர்கள் மட்ட செயற்பாட்டுக்குழு கூட்டங்கள் (Commonwealth Action Group Meeting - CMAG) இன்று ஆரம்பமாகவுள்ளன.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப குழு அறை மற்றும் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி மண்டப குழு அறைகளில் காலை, மாலை இரண்டு கட்டங்களாக இது இடம்பெறவுள்ளது.
இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் இந்த உயர்மட்ட கூட்டங்களுக்கு தலைமைவகிக்கவுள்ளார்.
பொதுநலவாய அமைச்சர்கள் மட்ட செயற்பாட்டுக் குழு கூட்டம் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் குழு அறை ‘சி’யில் இன்று காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகி நண்பகல் 12.00 மணிக்கு நிறைவடையவுள்ளது.
அதனைத் தொடர்ந்து பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளும் பொருட்டு இலங்கை வந்துள்ள வெளிவிவகார அமைச்சர்களுக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் விசேட பகல் போஷன விருந்துபசாரம் வழங்கவுள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி மண்டபத்தில் பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டிற்கு முன்னரான பொதுநலவாய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் முதலாவது கூட்ட அமர்வு இன்று பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகி மாலை 6.00 மணிக்கு நிறைவடையவுள்ளது.
வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் ஆரம்பமாகவுள்ள பொதுநலவாய அரச தலைவர்களின் உச்சி மாநாட்டின் நிகழ்ச்சி நிரல் மற்றும் அது தொடர்பிலான பல்வேறு விடயங்கள் இன்று நடைபெறவுள்ள அமைச்சர்களின் செயற்பாட்டுக்குழு மற்றும் வெளிவிவகார அமைச்சர்கள் குழு கூட்டங்களில் விரிவாக ஆராயப்படவுள்ளதாக பொதுநலவாய லண்டன் செயலகத்தின் பேச்சாளரும் தொடர்பாடல் மற்றும் பொது விவகாரங்களுக்கான பணிப்பாளருமான ரிச்சட் உக்கு தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கை வந்துள்ள பொதுநலவாய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் பாரியார்களுக்கான விசேட இராப்போஷன விருந்துபசாரம் இன்று இரவு 8.00 மணி தொடக்கம் மவுண்ட்லெவன்யா ஹோட்டலில் நடைபெறவுள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் அவரது பாரியார் திருமதி சாவித்ரி பீரிஸ் ஆகியோர் இந்த விருந்துபசாரத்தை வழங்கவுள்ளனர்.
இதேவேளை, பொதுநலவாய அமைப்பில் அங்கம் வகிக்கும் சிறிய நாடுகளின் அமைச்சர்களின் கூட்டம் நேற்றைய தினம் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் ஆரம்பமானது. திங்கட்கிழமை ஆரம்பமான சகல சிரேஷ்ட அதிகாரிகளின் கூட்டம் நேற்றைய தினம் இரண்டாவது நாளாகவும் இடம்பெற்றது.

0 comments :
Post a Comment