தான் தமிழீழ விடுதலைப் புலிகளை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவில்லையென தெரிவித்துள்ள சனல் 4 தொலைக்காட்சியின் தயாரிப்பாளர் கெலும் மெக்ரே தான் புலிகளின் ஆதரவாளன் அல்ல எனவும் தெரிவித்துள்ளார். நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த கெலும் மெக்ரேவுக்கு எதிரான ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில் விமான நிலைய வாயிலில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதெ கெலும் மெக்ரே இதனை தெரிவித்துள்ளார்.குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்ட போது அவ்விடத்துக்கு வந்த கெலும் மெக்ரே ஆர்ப்பாட்டக் காரர்களுடன் கலந்துரையாடவும் முற்பட்டுள்ளார்.இதன்போது கருத்து தெரிவித்த கெலும் மெக்ரே-
தான் விடுதலைப் புலிகளின் ஆதரவாளன் அல்லவெனவும் அந்த அமைப்பிடமிருந்து எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பணம் பெற்றுக்கொள்ளவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.அத்துடன் விடுதலைப் புலிகளும் பாரதூரமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளனர் என்பதை தான் ஏற்றுக்கொள்வதாகவும் அது தொடர்பிலும் தான் ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, தான் ஒரு படைப்பாளி என்ற வகையில் தனக்கு எந்தவொரு படைப்பையும் படைக்கும் உரிமை உள்ளது என குறிப்பிட்ட அவர், தற்போது தான் இலங்கைக்கு வந்ததன் நோக்கம் பொது நலவாய அரச தலைவர்களின் மாநாடு தொடர்பில் செய்தி சேகரிப்பது மட்டுமே தெரிவித்தார்.

0 comments :
Post a Comment