வரலாற்றுத் தவறினை முஸ்லிம் கட்சிகள் ஒரு போதும் செய்துவிடக்கூடாது-PMGG


19 வது திருத்தச்சட்டத்திற்கு ஆதரவளிப்பதன் மூலம் இந்நாட்டின் நிரந்தர அரசியல் தீர்வினை பின் தள்ளும் வரலாற்றுத் தவறினை முஸ்லிம் கட்சிகள் ஒரு போதும் செய்துவிடக்கூடாது என நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் வேண்டுகோள்விடுத்துள்ளது.

13 ஆவது திருத்தச் சட்டத்தில் மேலும் திருத்தங்களை மேற்கொண்டு 19 ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டு வரும் வகையில் அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடுகள் தொடர்பில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

13 ஆவது திருத்த சட்டத்தின் மூலமாக மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை மேலும் பலவீனப்படுத்துவதற்கான திட்டமிட்ட செயற்பாடாகவே தற்போது அரசாங்கம் முன்வைத்துள்ள 19ஆவது திருத்தச் சட்டமூல யோசனைகள் தெரிகின்றன.

அரசாங்கம் தீவிர முனைப்புக்காட்டும் இந்த நடவடிக்கையானது இந்நாட்டின் நிரந்தர அரசியல் தீர்வுக்கு குந்தகம் விளைவிக்கும் ஒன்றாகவே அமைந்திருக்கின்றது.

இந்நாட்டின் நிரந்தர சமாதானத்தை அடைவதற்கு அவசியமான, அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தக்க அரசியல் தீர்வுக்கு முட்டுக்கட்டையாக அமையப் போகின்ற இது போன்ற நடவடிக்கைகளுக்கு சிறுபான்மைக் கட்சிகள் எவையும் குறிப்பாக முஸ்லிம் கட்சிகள் ஆதரவளிக்கக் கூடாதென நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் கேட்டுக் கொள்ள விரும்புகின்றது.

அதிகாரங்களை மாகாணங்களுக்குப் பகிர்ந்தளிப்பதன் மூலம் சிறுபான்மை மக்களினுடைய அரசியல் அபிலாசைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் மூலமாக உருவாக்கப்பட்டதே இந்த 13 ஆவது திருத்த சட்டமாகும்.

இதன் மூலமாக உருவான மாகாண சபைகள் கடந்த 25 வருடங்களாக நம்நாட்டில் இயங்கி வருகின்றன. வடகிழக்கு தமிழ் முஸ்லிம் மக்களின் அரசியல் அபிலாசைகளை தீர்த்து வைப்பதற்கென கொண்டுவரப்பட்ட இந்த மாகாண சபை கட்டமைப்புகள் துரதிஸ்டவசமாக வடகிழக்கு மாகாணங்களுக்கு வெளியில்தான் இதுவரை காலமும் ஓரளவு சிறப்பாக இயங்கி வந்திருக்கின்றன.

கடந்த 5 வருடங்களாக மாத்திரமே கிழக்கு மாகாண சபை மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களுடன் இயங்கி வருகிறது. இந்த நிலையில்தான் பலமான சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியில் வடமாகாண சபைத் தேர்தலை நடாத்த வேண்டிய கட்டாயத் தேவையில் இப்போது அரசாங்கம் இருக்கிறது.

இந்தத் தருணத்தில் மாகாண சபைகளின் அதிகாரத்தை இல்லாதொழித்து அமையப்போகின்ற வட மாகாண சபையினை மக்களுக்குப் பிரயோசனமற்ற அதிகாரமற்ற மாகாண சபையாக உருவாக்குகின்ற முயற்சியில் இப்போது இந்நாட்டின் இனவாத அரசியல் சக்திகள் இறங்கியிருக்கின்றன.

இவர்களின் கோரிக்கைகளுக்கு ஏற்றாற்போல் அரசாங்கமும் திருத்த சட்ட மூலம் ஒன்றை கொண்டு வருவதற்கான முயற்சியில் தற்போது தீவிரமாக இறங்கியிருக்கிறது.

துரதிஸ்டவசமாக அரசாங்கத்தினதும், இந்த இனவாத சக்திகளினதும் நிகழ்ச்சி நிரல் ஒன்றாகவே அமைந்திருப்பது கவலையளிக்கிறது.

யுத்தத்தை நிறைவு செய்ததன் பின்னர் 13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படும் எனவும் 13 ஆவது திருத்த சட்டத்திற்கு மேலதிகமான அதிகாரங்களும் வடகிழக்கு மாகாணங்களுக்கு வழங்கப்படும் எனவும் அரசாங்கம் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் சிறுபான்மை சமூகங்களுக்கும் இந்நாட்டின் ஏனைய மக்களுக்கும் அது போல சர்வதேச சமூகத்திற்கும் உறுதியளித்திருந்தது.

இருந்தாலும், அந்த வாக்குறுதிகளையெல்லாம் காற்றில் பறக்க விட்டு விட்டு பேரினவாத சக்திகளை திருப்திப்படுத்துவதற்காக இப்போது 19 ஆவது திருத்தம் ஒன்றினை கொண்டுவருவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது.

இத்திருத்தத்தின் மூலமாக 13 ஆவது திருத்த சட்டம் ஊடாக மாகாண சபைகளுக்கு கிடைத்திருக்கும் முக்கிய அதிகாரங்ளை இல்லாமல் செய்து மாகாண சபைகளை செல்லாக்காசாக்குகின்ற முயற்சிகளையே அரசாங்கம் செய்யத் தொடங்கியிருக்கின்றது.

அந்த முயற்சியை வெற்றியளிக்க செய்வதற்கான ஆதரவினை இப்போது அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளிடம் அரசாங்கம் கோரியிருக்கின்ற நிலையில் சிறுபான்மைக்கட்சிகள் குறிப்பாக முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் இந்தத் திருத்தத்திற்கு ஆதரவு அளிக்கக் கூடாதென நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் வினயமாகக் கேட்டுக் கொள்கிறது.

கடந்த பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் அரசாங்கத்தினால் இந்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட 18 ஆவது திருத்த சட்டத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவினை முஸ்லிம் கட்சிகள் வழங்கியதன் மூலமாக இந்த நாட்டில் மக்கள் நலன்களை உறுதிப்படுத்தும் சுதந்திர, ஜனநாயக, நிர்வாகக் கட்டமைப்புகளுக்கான அத்திவாரம் சிதைக்கப்பட்டது.

இதன் காரணமாக நிதி, நிர்வாக, சட்டம், ஒழுங்கு, நீதித்துறை மற்றும் ஊடக சுதந்திரம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை ஜனநாயக விடயங்களில் பலமோசன விளைவுகள் இப்போது ஏற்பட்டிருக்கிறன. அதனைத் தொடர்ந்து திவி நெகும சட்டத்தை இந்த அரசாங்கம் கொண்டு வந்த வேளையில் அதற்கும்; கண்மூடித்தனமாக முஸ்லிம் கட்சிகள் ஆதரவளித்தன.
இப்போது 19ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டிய நிர்ப்பந்த நிலையினை அரசாங்கம் உருவாக்கியிருக்கிறது. இதற்கு ஒருபோதும் சிறுபான்மைக்கட்சிகள் ஆதரவளிக்கக்கூடாது.

இவ்வாறான திருத்தம் ஒன்றுக்கு நாங்கள் ஒருபோதும் ஆதரவளிக்க மாட்டோம் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்கனவே பகிரங்கமாக அறிவித்திருக்கிறது. இது வரவேற்கப்படவேண்டிய ஒன்றாகும்.

இருந்தாலும் திவிநெகும சட்டத்தின் போதும் இவ்வாறுதான் ஆதரவளிக்க மாட்டோம் என முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பத்தில் அறிவித்திருந்ததும், பின்னர் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் கட்சிக்குள் குற்றம் சாட்டிக் கொண்டு முதலில் மாகாண சபையிலும் பின்னர் பாராளுமன்றத்திலும் எவ்வித நிபந்தனைகளுமில்லாமல் இச்சட்ட மூலத்திற்கு வாக்களித்ததனை இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தமாகும்.

மேலும், மாகாண சபை அதிகாரங்களை இல்லாதொழிக்கும் 19 ஆவது திருத்த சட்ட மூலம் தொடர்பில் முஸ்லிம்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பதாக கூறிக்கொள்ளும் ஏனைய முஸ்லிம் கட்சிகள் இது தொடர்பில் இது வரை மௌனம் சாதிப்பதும் கவலையளிக்கிறது.

அமைச்சர் றிஸாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இதுவரை இவ்விடயம் தொடர்பில் மௌனம் காத்து வருகின்றன.

'முஸ்லிம்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்போமம். அதிகாரப்பகிர்வில் முஸ்லிம்களுக்கு உரிய பங்கினை பெற்றுத் தருவோம்' எனக்கூறி முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்று இன்று அரசாங்கத்தின் பிரதிநிதிகளாக மாறியிருக்கின்ற முஸ்லிம் பிரதிநிதிகள் அதிகாரப் பகிர்வின் அடிப்படை அம்சங்களையே இல்லாமல் செய்கின்ற இந்த 19 ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு ஒருபோதும் ஆதரவளிக்கக்கூடாது.

சிறுபான்மை சமூகங்களுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளித்து தேசத்தைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தில் சகல மக்களையும் பங்காளிகளாக்கி சமூகங்களுக்கிடையிலான நம்பிக்கையை வளர்த்தெடுத்து நிரந்தர சமாதானத்தை நோக்கி நகர வேண்டிய தீர்க்கமான ஒரு கட்டத்தில் நம்நாடு இருக்கிறது.

இச்சந்தர்ப்பத்தில் மாகாண சபைகளின் அதிகாரங்களையும் அதற்கான காப்பீடுகளையும் இல்லாதொழிக்க முயலும் இந்த 19ஆவது திருத்த சட்டயோசனைகளுக்கு ஆதரவளித்து நம்நாட்டை நிரந்தர சமாதானத்தை நோக்கிய பயணத்தில் மோசமாகப் பின் தள்ளுகின்ற வரலாற்றுத்தவறினை முஸ்லிம் கட்சிகளும் ஏனையோரும் ஒரு போதும் செய்துவிடக் கூடாது என நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் வேண்டிக் கொள்கிறது.

இவ்விடயத்தில் முஸ்லிம் சிவில் தலமைகளின் மௌனமும் கவளையளிப்பதாகவே அமைந்திருக்கிறது. அர்த்த பூர்வமான அதிகார பகிர்வொன்றின் மூலமாகவே இந்நாட்டில் நிரந்தர சமாதானத்தையும், சமூகங்களுக்கு இடையிலான நிலையான ஒற்றுமையினையும் உருவாக்க முடியும் என அனைவரும் உனர்ந்திருக்கின்ற நிலையில் இதற்கு குந்தகமாக அமையும் எந்த ஒரு முயற்சிகள் தொடர்பிலும் அக்கறையோடு செயற்படுவது முஸ்லிம் சமூகத்தின் கடமையாகும். 

அந்த வகையில் முஸ்லிம் சிவில் தலைமைகள் இவ்விடயம் தொடர்பில் சம்மந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் உரிய அழுத்தங்களை கொடுப்பதற்கும் முன் வரவேண்டும் எனவும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் கேட்டுக் கொள்கின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :