மட்டக்களப்பு கல்முனை பிரதான நெடுஞ்சாலையில்; நாவற்குடா பிரதேசத்தில் நாவற்குடா பிள்ளையார் கோயிலுக்கு முன்பாக இன்று திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் நாவற்குடாவைச் சேர்ந்த 44 வயது தாதி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தாதியாக கடமையாற்றும் தமோதரன் விஜயதன்தனி என்ற குறித்த பெண்; ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் கல்வி கற்கும் 10 வயதுடைய தனது மகன் தனுஜன்; என்பவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு பிரத்தியேக வகுப்புக்காக சென்று கொண்டிருந்த போது நாவற்குடா பிள்ளையார் கோயிலுக்கு முன்பாக சுமார் 2.30 மணியளவில் வைத்து மோட்டார் சைக்கிளுடன் மூதூரிலிருந்து கல்முனையை நோக்கி சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபையின் வாகரை சாலைக்குச் சொந்தமான பஸ் வண்டியொன்று மோதுண்டதிலேயே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில் மோட்டர் சைக்களில் பயணித்த நாவற்குடா பிரதேசத்தை சேர்ந்த தாதி தமோதரன் விஜயதன்தனி(வயது 44) ஸ்தலத்திலேயே உயிரிழந்ததுடன் அவரது மகன் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
வாகரை டிப்போ பஸ் சாரதி என்.பேராநந்தன் காத்தான்குடிப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பஸ் வண்டியும் காத்தான்குடிப் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருவதாக காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அஜித் பிரசன்ன தெரிவித்தார்.


0 comments :
Post a Comment