இந்த நாட்டின் ஐக்கியத்திற்கும் சுபீட்ஷத்திற்கும் அதிகாரப் பகிர்வு முக்கியம்-ஹனீபா மதனி

'அண்மைக்காலங்களாக அமைச்சர் விமல் வீரவன்ச அவர்களின் தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் ஊடாக மாநாடுகளில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினையும், அதன் தேசியத் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களையும் மிகக் கடுமையாக விமர்ச்சித்து வந்துள்ளமையை கவலையுடன் நோக்குவதோடு, இவ்விடயம் கட்சிப் போராளிகள் மத்தியிலும், முஸ்லிம் சமூகத்திலும் பாரிய அதிருப்தி அலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது.' 

என அக்கரைப்பற்று மநாகர சபையின் எதிர்கட்சித் தலைவரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஊடக பணிப்பாளருமான அஷ்ஷெய்க் எஸ்.எல்.எம். ஹனிபா மதனி ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கில் நடைபெற்ற நீண்டகால ஆயுதப்போராட்டத்தை நிறுத்தி இனப்பிரச்சினையின் தீர்வாகவே 13வது திருத்தச்சட்டம் ஏற்படுத்தப்பட்டது. இச்சட்ட மூலத்தின் வலுவை மேலும் குறைக்கும் வகையில் அரசாங்கம் அவசர அவரசமாக இரு திருத்தங்களை அமைச்சரவைக்குக் கொண்டுவந்தது. இப்பிரேரணைக்கு பௌத்த கடும்போக்காளர்களான ஹெல உறுமைய உள்ளிட்டவர்கள் பலத்த ஆதரவு தெரிவித்தவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் தனது காத்திரமான எதிர்ப்பைத் தெரிவித்திருந்தார்கள். 

இதுவே தேசிய ஐக்கிய முன்னணியின் ஊடக நிகழ்வில் ஹக்கீம் அவர்களை திட்டித்தீர்ப்பதற்குரிய காரணமாக அமைந்திருந்தது.

'மு.கா.வின் முன்னாள் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் வடக்கு – கிழக்கு இணைந்திருப்பதை விரும்பவில்லை, கிழக்கு மாகாணம் தென்மாகாணத்தோடு இணைவதையே விருப்பமாகக் கொண்டிருந்தார். ஆனால் ஹக்கீம் வடகிழக்கு இணைப்பிற்கு ஆதரவு தெரிவிக்கின்றார்.இதனால் இவர் சம்பந்தனின் வாலாகவும், இந்தியா, நோர்வே போன்ற நாடுகளில் ஏஜென்டாகவும் தொழிற்படுகின்றார்.

அத்தோடு அஷ்ரப் அவர்களின் மரணத்தில் சதிசெய்து ஸ்ரீ.ல.மு.காவின் தலைமைத்துவத்தை எடுத்துக்கொண்டிருப்பார் எனும் சந்தேகமும் தோன்றுகிறது'.

இவை, தேசிய சுதந்திர முன்னணியால் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களாகும். ஷஷ தமிழ் மக்களின் நீண்டநாள் போராட்டத்திற்கு இணைந்த வடகிழக்கு மாகாணமே தீர்வாக அமையவேண்டுமானால் இணைந்த வடகிழக்கில் முஸ்லிம்களை பெரும்பாண்மையாகக்கொண்ட அதிகார அலகு வழங்கப்பட வேண்டும். 

அது தென்கிழக்கை மையப்படுத்தியதாகவோ, முஸ்லிம் உள்ளுராட்சி சபைகளை ஒன்றிணைத்து நிலத்தொடர்பற்றதாகவோ அமையப்பெறலாம் என மர்ஹூம் அஷ்ரப் யோசனை தெரிவித்திருந்தார். இவற்றை மையப்படுத்தியதாகவே ஒலுவிலில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தை ஸ்தாபிப்பதற்கு அவர் பாடுபட்டார். தெற்கோடு கிழக்கை இணைக்கும் விடயம் பற்றி அவர் எங்கும் பிரஸ்தாபித்திருக்கவில்லை. அவ்வாறான எண்ணமும் அவரிடம் காணப்பட்டதாக தெரியவில்லை. 

கிழக்கு வாழ் மக்களின் அதிகமானோர் தமிழைத் தாய் மொழியாய் கொண்டிருந்ததே இதற்குப் பிரதான காரணமாகும். மாகாணசபை முறைமை பற்றி அஷ்ரப் கொண்டிருந்த யதார்த்தமான நிலைப்பாடுகள் ஷஷஎமது பார்வை', 'தென்கிழக்கு அலகு' எனும் கட்சிசார் கையேடுகளிலும் அஷ்ரப் அவர்களின் பாராளுமன்ற உரைகளிலும் அச்சொட்டாக வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன. 

இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் முஸ்லிம்கள் முற்றாக புறக்கணிக்கப்பட்டதனால் அதனை முஸ்லிம்களின் மீது திணிக்கப்பட்ட அடிமைச்சாசனம் என சுட்டிக்காட்டிய அஷ்ரப் அவர்கள் இந்த உடன் படிக்கையின் அடிப்படையில் 13வது திருத்தச்சட்டத்தின் கீழ் 1978ம் ஆண்டு நடைபெற்ற வடக்கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் பங்குபற்றி தனது கட்சிக்கு 17 ஆசனங்களையும் பெற்றெடுத்தார்.

அவர் மேலும் அவ்வறிக்கையில் ஷஷமர்ஹூம் அஷ்ரப் அவர்கள் அகால மரணடைந்த வேளை அது பற்றி நீதி விசாரணை ஒன்று நடாத்தப்பட்டு மரணத்திற்கான உண்மையைக் கண்டறிய வேண்டும் என ரஊப் ஹக்கீம் அவர்கள் வேண்டுகோள் விடுத்ததன் பேரில் முன்னாள் ஜனாதிபதி சந்திரக்கா அம்மையார் அவர்களால் இதற்கென ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டது.

 இந்த ஆணைக்குழுவின் அறிக்கைக்கு என்ன நடந்தது என்பதை எதிர்வரும் அமைச்சரவைக் கூட்டங்களில் அல்லது பாராளுமன்ற அமர்வுகளில் அமைச்சர் வீரவன்ச அவர்களால் தட்டிக்கேட்க முடியுமாக இருந்தால் அப்போது அமைச்சருக்கு இதுபற்றி இருக்கின்ற சந்தேகங்களும், மயக்கங்களும் தெளிந்துவிடும்.

கடந்த வருடம் நடந்து முடிந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் பின் ஆட்சி அமைக்கும் வேளை ஸ்ரீ.மு.காங்கிரஸ் அரசுடன் இணைந்து செயற்பட்டபோதும், வட மாகாண வாக்காளர் திருத்தச்சட்ட மூலத்தை நீதி அமைச்சர் ஹக்கீம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தபோதும் புலர்பெயர் தமிழ்களும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஹக்கீம் அரசின் ஏஜென்டாக மாறிவிட்டார். முஸ்லிம் காங்கிரஸ் கட்சியையும், முஸ்லிம்களையும் விலைபேசி விற்றுவிட்டார். எனத் திட்டித்தீர்த்தனர்.

இனரீதியான முரண்பாடுகளுடன் சிந்திக்கப்பழகிக்கொண்ட இந்த நாட்டின் தமிழ், சிங்கள சமூகங்களுக்கிடையில் சிக்கித்தவிக்கின்ற முஸ்லிம் சமூகத்தை அரசியல் ரீதியில் வழிநடாத்த வேண்டிய ஹக்கீம் போன்றவர்கள் திரிசங்கு நிலைக்குள் அவஸ்தைப்படுவதை நாம் எப்போதும் உணர முடிகின்றது.

வடகிழக்கில் யுத்தம் நடைபெற்ற வேளை வயல் நிலங்களுக்கு விவசாயம் செய்யப்போகா விடாது புலிகள் முஸ்லிம்களைத் தடுத்தனர், பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்ட போது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தினர். யுத்தம் முடிந்து சமாதானம் நிலவுகின்ற இக்கால கட்டத்திலும் முஸ்லிம்களின் விவசாயக் காணிகள் கிழக்கில் பலவந்தமாக பறிக்கப்படுகின்றன. பள்ளிவாசயல்கள் உடைக்கப்படுகின்றன. 

முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களும், சமயக்கடமைகளும் குறிவைக்கப் படுகின்றன. இவை இனவாதிகளால் மேற்கொள்ளப்படுவதாக சொல்லப்படுகின்றது. இத்திரிசங்கு நிலை காரணமாகவே மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் ஸ்ரீ.ல.மு.காங்கிரஸின் தொடர் நடவடிக்கையாக தேசிய ஐக்கிய முன்னணியையும் அரசியல் கட்சியாக தொடங்கி வைத்தார்கள்.

இந்த நாட்டில் முஸ்லிம் சமூகம் இருதலைக் கொள்ளி எறும்பாகவே நகர்ந்துகொண்டிருக்கின்றது. இச்சமூகத்தை அரசியல் ரீதியில் வழிநடாத்துகின்ற முஸ்லிம் காங்கிரஸின் தலைமைக்கு பாரிய சவால்கள் இருப்பதை அமைச்சர் வீரவன்ச போன்று எல்லாத்தரப்பினரும் உணரக்கடமைப் பட்டிருக்கின்றனர். 

 எது எப்படியிருப்பினும் மு.காவின் தலைமைத்துவம் இவ்வாறான சலசலப்புக்களுக்கு அஞ்சப்போவதில்லை மு.காவின் தலைமை அரசில் அங்கம் வகிக்கும்போது பெட்டிப் பாம்பாகவோ அல்லது தொட்டில் பிள்ளையாகவோ இருந்துவிடும் என யாராவது நினைப்பின் அது பிழையானதாகும்.

முஸ்லிம்களின் அதிகப்படியான மக்கள் ஆணையைப் பெற்ற றஊப் ஹக்கீம் போன்ற சமூகத் தலைவர்களையோ நாட்டின் உயர் அந்தஸ்த்தில் உள்ள கற்றறிந்த பெரியார்களையோ பற்றி பகிரங்கமாக கருத்துவெளியிடும் போது அரசியலாக இருப்பினும் அதில் நாகரீகம் பேணப்படல் வேண்டும் .

அவ்வறிக்கையில் மேலும் இந்த நாட்டின் ஐக்கியமும், சுபீட்ஷமும் அதிகாரப் பகிர்விலேயே தங்கியிருக்கின்றது' எனும் உண்மையை அமைச்சர் விமல் அவர்கள் தன் கட்சிக்காரர்களுக்கு உரத்துச் சொல்ல வேண்டும். 120 கோடி மக்களையும் பன்னூறு மொழிகளையும் கொண்ட இந்திய உபகண்டம் அதிகாரப் பகிர்வின் மூலம் ஐக்கியத்தையும், சுபீட்சத்தையும், தேசப்பற்றையும், வளர்த்துக் கொள்ள முடியுமாக இருப்பின் இருமொழிகளை மட்டும் கொண்ட சின்னஞ்சிறு இத்தீவில் ஏன் ஐக்கியத்தையும், சுபீட்சத்தையும், தேசப்பற்றையும் கட்டியெழுப்ப முடியாது?

தமிழ் பேசும் மக்களையும், தேசிய உணர்வோடு சிந்திக்க வழிசமைப்போம். இதற்காக இனவாத சிந்தனைகளுக்கும் நம்பிக்கையீனங்களுக்கும் வேட்டுவைப்போம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :