
இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழையால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளப் பெருக்கு காரணமாக ஆற்றோரம் இருந்த சுமார் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன. முக்கிய புனித தலங்களை இணைக்கும் சாலைகள் துண்டிக்கப்பட்டதால் பக்தர்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதற்கிடையே பழங்குடி மாவட்டமான கின்னார் மாவட்டத்தில் பிரச்சாரத்திற்குச் சென்ற இமாச்சல பிரதேச முதல்வர் வீரபத்ர சிங், சாங்லா பள்ளத்தாக்கில் சிக்கிக்கொண்டார். நிலச்சரிவால் சாலைப் போக்குவரத்து தடைப்பட்டதால் அவர் அங்கேயே தங்கியிருக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
சுமார் 60 மணி நேரத்திற்குப் பிறகு அவரை தனி ஹெலிகாப்டர் மூலம் மீட்டு அழைத்து வந்தனர். அவருடன் 10க்கும் மேற்பட்ட வயது முதிர்ந்த சுற்றுலாப் பயணிகளும் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டனர். மழை விட்டு, வானிலை சரியாக இருந்ததால் ஹெலிகாப்டர் அப்பகுதிக்கு செல்ல முடிந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அப்பகுதியில் இன்னும் 1700 பேர் பள்ளத்தாக்கிலேயே தவித்து வருகின்றனர். அவர்களை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கின்னார் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவு அதிக அளவாக நேற்று மட்டும் 204 மி.மீ. மழை பெய்துள்ளது. இந்தியா-திபெத் தேசிய நெடுஞ்சாலையில், கின்னார் செல்லும் பகுதியில் கடும் நிலச்சிரிவு ஏற்பட்டுள்ளதால், இன்னும் ஓரிரு நாட்கள் அந்த சாலை திறக்கப்படமாட்டாது என்று தெரிகிறது. சாலைகளில் சரிந்து கிடக்கும் மண் மற்றும் பாறைகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
0 comments :
Post a Comment