உம்றா யாத்திரை செல்வதாகக் கூறி சட்டவிரோதமான முறையில் சவூதி அரேபியாவிற்கு வேலை வாய்ப்புக்காக செல்ல முற்பட்ட இரு முஸ்லிம் யுவதிகளை நேற்று முன்தினம் விமான நிலையத்தில் வைத்து வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியக அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த 22 மற்றும் 24 வயதையுடைய இரு யுவதிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர்.
போலியான வயதை சமர்பித்து உப முகவர்களினூடாக பதிவுகள் மேற்கொள்ளபட்டு உம்ரா யாத்திரைக்குச் செல்வதாக இஹ்ராம் ஆடையுடன் விமான நிலையத்துக்கு வருகை தந்தபோதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில்வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
25 வயதுக்கு குறைந்த எவருக்கும் வேலை வாய்ப்பு பணியகத்தின் பயிற்சி நெறியில் கலந்து கொள்ள முடியாது. இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் இவர்கள் பயிற்சி நெறியை மேற்கொள்ளாமல் போலி அனுமதிப் பத்திரத்துடன் துணை முகவர் நிறுவனத்தினூடாக சவூதி அரேபியா செல்ல முற்பட்டனர். இது தண்டனைக்குரிய குற்றமாகும்.
இதேவேளை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் பிரகாரம் இவ்வருடம் ஜனவரி முதல் ஏப்ரல் மாதம்வரை சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்ல முற்பட்டவர்கள் மற்றும் 34 முகவர் நிறுவனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதேபோன்று சென்ற வருடம் இக்காலப் பகுதியில் சுமார் 77 பேர் கைது செய்யப்பட்டனர். 2012 ஆம் ஆண்டு ஜனவரி முதல் பெப்ரவரி வரை 14 பேரும் இவ்வருடம் 28 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு செல்ல முயற்சிப்பவர்களுக்கு தராதரம் பார்க்காமல் தண்டனை வழங்க தாம் பணியகத்துக்கு உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.VV

0 comments :
Post a Comment