ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை மேற்கொண்டு எமது நாட்டில் புதைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஜனநாயகத்தை நிலைநாட்ட அனைத்து மக்களும் முன்வர வேண்டுமென நவசம சமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்தார்.
கொழும்பு பான்ஸ் பிளேஸில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற அதிகாரத்தை பகிர்ந்து நாட்டைக் கட்டியெழுப்பும் அமைப்பின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் ஜனநாயகம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. எனவே ஜனநாயகம் இல்லாவிட்டால் அனைத்து மக்களும் போராட வேண்டியநிலை உருவாகும். இத் தத்துவத்தை கால்மாக்ஸ் அழகாக கூறியுள்ளார். இவ்வாறான போராட்டங்கள் பிரித்தானியா, ஜேர்மன் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளில் இடம்பெற்றுள்ளன.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அசாத் சாலி கைது செய்யப்பட்டுள்ளமையானது கண்டனத்துக்குரியது. அவரை உடனடியாக விடுதலை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு அவர் ஆயுதக் குழுக்களுடன் தொடர்புபட்டிருந்தால் எந்த ஆயுதக் குழுவுடன் அவருக்கு தொடர்புடையது என்பதை பகிரங்கப்படுத்த வேண்டும். அவர் பயங்கரவாத செயற்பாடுகளுடன் எவ்விதத்திலும் தொடர்புடையவர் அல்ல.
நாம் அவருடைய கைது தொடர்பில் நீதிமன்றம் செல்லவுள்ளோம்.
அவரின் விடுதலைக்காக விகாரை மற்றும் பள்ளிவாசல்களில் விசேட பிரார்த்தனைகளில் ஈடுபட்டுள்ளதுடன் சர்வதேசத்திற்கு தெரியப்படுத்தும் வகையில் கையொழுத்து வேட்டையையும் நடத்துவதற்கு நாம் தீர்மானித்துள்ளோம்.
எனவே இவ்வாறான செயற்பாடுகள் தொடராமல் இருப்பதற்கு போராட்டங்களை மேற்கொண்டு ஜனநாயகத்தை நிலைநாட்ட அனைவரும் முன்வர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment