சென்னை எம்.ஜி.ஆர். நகர் போலீஸ் நிலையத்தில் இன்று காலை நடைபெற்ற பரபரப்பான சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-சென்னை எம்.ஜி.ஆர். நகர் சூளைப் பள்ளம் அவ்வை தெருவில் வசித்து வருபவர் வெங்கடேசன், இவரது மனைவி சுனிதா (வயது 29). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. வடபழனியில் உள்ள பிரபல ஆஸ்பத்திரியில் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்து வரும் சுனிதா கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென மாயமானார்.
இது தொடர்பாக அவரது தாய் மேரியம்மாள் கடந்த 5-ந்தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் அதே பகுதியை சேர்ந்த சேகர் என்ற கிறிஸ்தவ போதகருடன் எனது மகள் சுனிதா சென்று விட்டாள். அவளை கண்டுபிடித்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.
இந்த மனு மீது விசாரணை நடத்த எம்.ஜி.ஆர். நகர் போலீசுக்கு உத்தரவிடப்பட்டது. இதைதொடர்ந்து மேரியம்மாளின் புகார் மனு குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது சுனிதாவுக்கும், கிறிஸ்தவ போதகர் சேகருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்தது அம்பலமானது. அவருடன் சுனிதா ஓடிச் சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து சேகரை தேடிக் கண்டுபிடித்து, சுனிதாவை மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். இதற்கு பலன் கிடைத்தது. இன்று அதிகாலையில் சேகர் போலீசில் சிக்கினார். எம்.ஜி.ஆர். நகர் போலீஸ் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது சேகர், உள்ளகரத்தை அடுத்துள்ள புழுதிவாக்கத்தில் சுனிதாவை தங்க வைத்திருப்பதாக கூறினார்.
இதைத்தொடர்ந்து போலீசார், சுனிதாவின் தாய் மேரியம்மாள், தந்தை கொண்டையா ஆகியோரை அழைத்துக்கொண்டு அங்கு சென்றனர். பின்னர் சுனிதாவை எம்.ஜி.ஆர். நகர் போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்து வந்தனர். போலீஸ் விசாரணையின் போது சுனிதா கழிவறைக்கு செல்ல வேண்டும் என்று கூறினார்.
போலீஸ் நிலையத்தின் உள்ளேயே இருக்கும் கழிவறைக்கு அவரை அழைத்துக் கொண்டு தாய் மேரியம்மாள் சென்றார். இந்த நேரத்தில் சுனிதா திடீரென தான் பாட்டிலில் மறைத்து வைத்திருந்த மண் எண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளித்தார். பின்னர் வலி தாங்க முடியாமல் அலறியபடியே எரிந்த நிலையில் அங்கும் இங்கும் ஓடினார்.
இதைப் பார்த்து தாய் மேரியம்மாள் கூச்சல் போட்டார். அவரது அலறல் சத்தத்தை கேட்டு போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் வேலாயுதம் ஓடிச் சென்று சுனிதாவை காப்பாற்ற முயன்றார். அதற்குள் சுனிதா கருகி கீழே சாய்ந்தார்.
உடனடியாக 108 ஆம்புலன்சை வரவழைத்து கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அவரை கொண்டு சென்றனர். சப்-இன்ஸ்பெக்டர் வேலாயுதத்துக்கும் கைகளில் காயம் ஏற்பட்டது. 2 பேருக்கும் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இன்று பிற்பகலில் சுனிதா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் காரணமாக எம்.ஜி.ஆர். நகர் போலீஸ் நிலையத்தில் இன்று காலை பரபரப்பு நிலவியது. உயர் போலீஸ் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமும் இதே போல சுனிதா வீட்டை விட்டு ஓடிச் சென்று பின்னர் மீட்கப்பட்டு கணவர் வெங்கடேசனிடம் ஒப்படைக்கப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவத்துக்கு மூலக் காரணமாக கருதப்படும் கிறிஸ்தவ போதகர் சேகருக்கு 52 வயதாகிறது. இவர் சூளைப் பள்ளத்தில் ‘பரிசுத்த தேவ சபை’ என்ற பெயரில் கிறிஸ்தவ கூடம் ஒன்றை நிறுவி அதில் பிரசங்கம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இவருக்கும் திருமணமாகி மனைவி குழந்தைகள் உள்ளனர்.
மாலைமலர்.
0 comments :
Post a Comment