கிழக்கு மாகாண சபையின் கடந்த ஆட்சிக் காலத்தில் முதலமைச்சராக சிவநேசதுரை சந்திரகாந்தன் இருந்த போது கிழக்கு மாகாண சபை ஒரு செயல் திறன் மிக்க மாகாண சபையாக இயங்கியதுடன் இதனால் பல் வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் நடைபெற்றதையும் அவதானிக்க முடிந்ததாக மாகாண சபை உறுப்பினர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கிழக்கு மாகாண சபை தனியாக உருவாக்கப்பட்டு இரண்டாவது ஆட்சிகாலம் இடம் பெற்றுக்கொண்டிருக்கும் இன்றைய சூழ் நிலையில் பலத்த கனவுகளுடன் புதிய முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் தலைமையில் கிழக்கு மாகாண சபையின் புதிய நிருவாகம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டது.
இதன் புதிய நிருவாகம் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் தலைமையில் பொறுப்பேற்றதிலிருந்து எந்த ஒரு உருப்படியான வேலைத்திட்டங்களையும் இந்த முதலமைச்சரினால் செய்யப்படவில்லையென கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
முன்னாள் முதலமைச்சர் சந்திர காந்தன் சுறு சுறுப்பாக இயங்கியது போன்று இந்த முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் இயங்கவில்லை என்றும் இவர் ஒரு செயல் திறன் மிக்கவராக காணப்படவில்லை எனவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கூறகின்றனர்.
முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் எந்த வொரு வைபவத்திற்கு சென்றாலும் அங்கு அவர் தூங்குவதையே அவதானிக்க முடிகின்றது எனவும் மாகாண சபை அமர்வுகளில் கூட தூங்கிக் கொண்டே இருப்பார் எனவும் மாகாண சபை உறுப்பினர்கள் கவலையுடன் கூறுகின்றனர்.
இவர் இவ்வாறு உறங்கி கொண்டிருந்தால் இந்த மாகாண சபையை எவ்வாறு செயல் திறன் மிக்க மாகாண சபையாக கட்டியெழுப்ப முடியும் மெனவும் அவர்கள் வினா எழுப்புகின்றனர்.
மாகாண சபை அமர்வின் போது முதலமைச்சர் தூங்கினால் அவருடை கையடக்க தொலைபேசிக்கு அவருடை இணைப்பாளர் அதிர்வு கொடுப்பதையும் அப்போது முதலமைச்சர் விழித்தெழுவதையும் மாகாண சபை உறுப்பினர்கள் அவதானித்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
அதே போன்று வைபவங்களுக்கு முதலமைச்சர் சென்றால் அவர் தூங்கி விடுவார் என்பதற்காக அருகில் மாகாண சபை உறப்பினர்கள் யாராவது இருந்தால், சேர்ரை கொஞ்சம் தூங்க விடாமல் கதையை கொடுங்கள என முதலமைச்சரின் இணைப்பாளர் ஒருவர் அங்கு அருகிலிருக்கும் மாகாண சபை உறுப்பினருக்கு கூறுவதையும் அவதானிப்பதாகவும் கூறுகின்றனர்.
இந்த முதலமைச்சரிடத்தில் ஒரு செயல் திறனை காணவில்லை, வேலைத்திட்டங்கள் எதுவுமில்லை, ஆரோக்கியமான கருத்துப் பறிமாறல்கள் இல்லை, ஏதாவது உற்சாகமாக மக்களுக்கு செய்ய வேண்டுமென்ற சிந்தனை கூட இல்லை, இந்த நிலையில் இவரைக் கொண்டு எப்படி இந்த கிழக்கு மாகாண சபையை கொண்டு செல்வது என்றும் மாகாண சபை ஆளும்கட்சி உறுப்பினர்களே கேட்கின்றனர்.
முஸ்லிம் முதலமைச்சர் வேண்டும் என்ற கோசத்துடன் இந்த முதலமைச்சர் நியமிக்கப்பட்டார். ஆனால் இவ்வாறு ஒரு தூங்கும் முதலமைச்சராக ஒரு செயல் திறன் இல்லாத முதுலமைச்சராக இருப்பார் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. இப்படி இவர் இருப்பார் என்றிருந்தால் சந்திர காந்தனையே முதலமைச்சராக வைத்திருக்க முடியுமே என்றும் முஸ்லிம் மாகாண சபை உறுப்பினர்கள் அங்கலாய்த்துக் கொள்கின்றனர்.
ஒரு வைபவத்திற்கு நேரத்திற்கு செல்லும் பழக்கம் அவரிடமில்லை. அவர் சார்ந்த எல்லா வைபவங்களுக்கும் நேரத்திற்கு செல்லமாட்டார் எனவும் மட்டக்களப்பில் நடைபெற்ற உள்ளுராட்சி மன்ற வைபவமொன்றுக்கு 3 மணித்தியாலயங்கள் பிந்தியே முதலமைச்சர் சென்றார் எனவும் அதனால் முன்னாள் முதலமைச்சர் சந்திர காந்தன் உரிய நேரத்திற்கு சென்று வைபவத்தை ஆரம்பித்து வைத்தார் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.
முஸ்லிம்களுக் கெதிராக பொது பல சேனா செய்த காடைத்தனங்களின் போதெல்லாம் இந்த முஸ்லிம் முதலமைச்சர் வாய் பொத்தி மௌனமாக இருந்ததையும் இவர்கள் கவலையுடன் கூறுகின்றனர்.
இதற்கு எல்லாம் பதில் கூறவேண்டிய பொறுப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கும், தேசிய காங்கிரசுக்கும் உண்டு. அதிலும் விஷேடமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு இந்த விடயத்தில் அதிக பதில் கூறவேண்டிய பொறுப்பிருக்கின்றது.
ஏனெனில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்தான் இந்த தூங்கும் முதலமைச்சரை தெரிவு செய்தது. அவர்களின் கௌரவத்தையும் அவர்களின் அரசியல் செல்வாக்கையும் காட்ட வேண்டும் என்று எடுத்த இந்த முதலமைச்சர் தெரிவானது இன்று முழு கிழக்கு மாகாண சபையையே செயலிழக்க செய்துள்ளது.
முஸ்லிம் சமூகத்திற்கு மாத்திரமல்ல கிழக்கு மாகாணத்திலுள்ள எந்தவொரு சமூகத்திற்கும் இந்த முதலமைச்சரினால் எந்தவொரு பயனுமில்லை எனவும் மாகாண சபை உறுப்பினர்கள் கூறுகின்றனர்.
இதன் பின்னணியில் தான் இன்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்குள் குறிப்பாக ஆளும்தரப்பு முஸ்லிம் உறுப்பினர்களுக்குள் இந்த விவகாரம் மிக கடுமையாக அலசப்பட்டு பூதாகாரம் எடுத்துள்ளன.
கிழக்கு மாகாண சபையில் ஆட்சி மாற்றம் வேண்டு மென்றும், கிழக்கு மாகாண சபை செயல் இழந்து வருகின்றது என்றல்லாம் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் அறிக்கைகளை விடுவதும், வைபவங்களில் பேசுவதுமாக உள்ளதை அவதானிக்க முடிகின்றது.
எனவே எதிர் காலத்தில் தற்போதய கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் சதா தூங்குவதை நிறுத்தி கிழக்கு மாகாணத்திலுள்ள சமூகங்களுக்கு சேவை செய்ய வேண்டும். இல்லையேல் முதலமைச்சரை மாற்றி வேறு ஒரு முதலமைச்சரை நியமித்து செயல் திறன் மிக்க ஒரு மாகாண சபையாக கிழக்கு மாகாண சபையை ஆக்க வேண்டும்.
இதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஒன்று படுவதும் குறிப்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இதை கவனத்தில் கொள்வது மிகவும் அவசியமாகும்.

0 comments :
Post a Comment