முட்டுக் கொடுக்க வந்த கம்பு – முளைத்து விடுமோ என்று அச்சப்படுகின்றார்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் சிலர் - சேகு இஸ்ஸதீன்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் தான் வகிக்காத பதவியில் இருந்து தன்னை நீக்கியதாக வெளிவந்துள்ள செய்தியானது - தனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது என முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தவிசாளருமான சேகு இஸ்ஸதீன் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொள்கை பரப்புச் செயலாளர் பதவியில் இருந்து சேகு இஸ்ஸதீன் நீக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் குறித்துக் கேட்ட போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். 

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

"வவுனியாவில் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாட்டில், என்னை அந்தக் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராகவும், உயர்பீட உறுப்பினராகவும் அறிவித்தார்கள். 

ஆனால், அந்தப் பேராளர் மாநாட்டுக்கு நான் சமூகமளிக்கவில்லை. அதேவேளை, அந்த நியமினம் குறித்து நான் எதுவும் பேசவுமில்லை. அதேவேளை, கட்சியில் எனக்கு எதுவித பதவியும் தேவையில்லை என்று முன்னதாக அவர்களிடம் நான் கூறியிருந்தேன். 

இருந்தபோதும், அவர்கள் அந்தப் பதவியினை எனக்கு வழங்கியுள்ளதாக அறிவித்த படியால், அதற்குரிய நிமனக் கடிதத்தினை வழங்குமாறு கட்சியின் செயலாளர் எம்.ரி. ஹசன் அலியிடம் அப்போது கேட்டேன். 

அப்படி யாருக்கும் நியமனக் கடிதம் வழங்கும் வழக்கம் கட்சியில் இல்லை என்று ஹசனலி கூறினார். காரணம், அவ்வாறு உத்தியோகபூர்வமாக நியமனக் கடிதங்களை வழங்கினால், சிலவேளைகளில் கட்சியோடு குறித்த நபர்கள் பிரச்சினைப்படும் சந்தர்ப்பங்களில் - தமது கடிதங்களை எடுத்துக் கொண்டு நீதிமன்றம் சென்று, கடிதங்களை ஆதாரமாக காண்பித்து வழக்குகளைத் தாக்கல் செய்யக் கூடும் என்றார். 

அடுத்ததாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் நான் ஓர் அங்கத்தவராகவும் இல்லை. முஸ்லிம் சமூகத்திற்கு என்னாலான நல்லவற்றைச் செய்ய வேண்டும் என்பதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸோடு இணைந்து செயற்பட்டேன். 

அவ்வளவுதான். தலைவர் அஷ்ரப் காலத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து என்னை விலக்கினார்கள். அப்போது, கட்சியில் இருந்து என்னை நீக்குவதாக எனக்கு அனுப்பப்பட்டிருந்த கடிதத்தில் அப்போது செயலாளராக இருந்து ரவூப் ஹக்கீம்தான் கையொப்பம் இட்டிருந்தார். 

அப்படியென்றால், கட்சியில் இருந்து உத்தியோகபூர்வமாக எழுத்து மூலம் விலக்கிய என்னை, உத்தியோகபூர்வமாக இணைத்திருக்க வேண்டுமல்லவா? நான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து விலக்கப்பட்ட பிறகு அந்தக் கட்சியில் இணைவதற்கான எந்தவித அங்கத்துவ விண்ணப்பங்களையும் இதுவரை நிரப்பிக் கொடுக்கவில்லை. 

இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட கூட்டங்களுக்கு வருமாறு என்னை அழைப்பார்கள். ஆனால், கிட்டத்தட்ட 25 கூட்டங்களுக்கு தொடராக நான் செல்லவேயில்லை. 

சிரமங்கள் எடுத்து கொழும்புக்குச் சென்று அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமளவு – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட கூட்டங்கள் இருப்பதில்லை. அங்கு ஆரோக்கியமான விடயங்கள் அதிகமாகப் பேசப்படுவதுமில்லை. உண்மையில், முஸ்லிம் காங்கிரஸின் உருவாக்கத்தில் எனது பங்கு முக்கியமானது. ஆனால், கட்சியில் எனக்குரிய இடத்தினை வழங்குவதற்கு அங்குள்ள சிலர் தயங்குகின்றார்கள். 

முட்டுக் கொடுக்க வந்த கம்பு – முளைத்து விடுமோ என்று அச்சப்படுகின்றார்கள். ஆனால் பதவிகளுக்கு ஒருபோதும் நான் ஆசைப்பட்டது கிடையாது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அரசியலில் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்கும், தன்னுடைய கட்சி அரசாங்கத்தில் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்கும் - 'அதிரடித் தீர்மானங்கள்' என்று பெயர் வைத்துள்ளார்கள்"  என்றார்.    


தமிழ்மிரர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

1 comments :

Unknown said...

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னை நாள் தவிசாளரும் முன்னை நாள் வடகிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவரும் முன்னை நாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னை நாள் அமைச்சருமாகிய சேகு இஸ்சடீனை இல்லாத பதவி ஒன்றில் இருந்து நீக்கியதாக வெளியான செய்திகளின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன் நீதி மன்றம் சென்று தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக மான இழப்பு நஷஈடு கோரி வழக்கு தாக்கல் செய்தால் அதன் விளைவு என்னவாகும்?