இஸ்லாமிய விரோதப் போக்கை தூண்டுவதற்கு தீய சக்திகள் சதி! அமைச்சர் ஹக்கீம்.





இஸ்லாமிய விரோதப் போக்கை தூண்டுவதற்கு தீய சக்திகள் சதி!
அரச மேல்மட்டத்திற்கு கூட்டாக தெரிவிப்பதே சிறந்த வழி
பதுளையில் அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு

யுத்த சூழ்நிலையிலும் பின்னரும் தமிழ் மக்கள் நாட்டைவிட்டு பெரும் எண்ணிக்கையில் புலம்பெயர்ந்து சென்றதால் அவர்களின் எண்ணிக்கையிலும், குடித்தொகை பரம்பலிலும் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை  காரணம் காட்டியும், முஸ்லிம்களின் சனத்தொகை வெகுவாக அதிகரித்து வருவதாகக் கூறியும் இஸ்லாமிய விரோதப் போக்கை தூண்டுவதற்கு தீய சக்திகள் திட்டமிட்டுச் செயல்படுகின்றன என தெரிவித்துள்ள நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், ஆட்சித் தலைவர் உட்பட அரச மேல்மட்டத்தினருக்கு கட்சி பேதம், இயக்க வேறுபாடுகளின்றி கூட்டாக சேர்ந்து இவற்றை எத்திவைப்பதோடு உரிய தீர்வுகளைக் காண்பதற்கும் தீர்மானித்துள்ளோம் எனவும் கூறியுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (02) பதுளை ஜூம்ஆ பள்ளிவாசலில் நடைபெற்ற ஒன்றுகூடலின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பதுளையில் அண்மையில் இடம்பெற்ற சம்பவங்களை தொடர்ந்து நிலைமையை நேரில் கண்டறிவதற்காகவும், கருத்துக்களை பரிமாறிக்கொள்வதற்காகவும் அவர் அங்கு சென்றிருந்தார்.
அவர் அங்கு உரையாற்றிய போது மேலும் தெரிவித்தவையாவன,
இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் எதிரான நடவடிக்கைகள் குறித்து தனித்தனியாக முடிவுகளை மேற்கொள்ளாது, ஒன்றாகக் கூடி கலந்தாலோசித்து கூட்டாக முடிவுகளை எடுக்க வேண்டுமென்ற அடிப்படையில் கொள்ளுப்பிட்டி பள்ளிவாசலில் அண்மையில் அரசாங்கத்திலும் எதிர்கட்சியிலும் உள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜம்இய்யதுல் உலமா பிரதிநிதிகள், முஸ்லிம் கவுன்சில் பிரதிநிதிகள் அடங்கலாக சந்தித்து நிலைமையை ஆராய்ந்தோம். அப்பொழுது பதுளை விவகாரம் பற்றியும், அதன் பின்னணி பற்றியும் ஆராயப்பட்டது.
தீவிரவாத இணையத்தளங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விட்டுள்ள பொய்ப்பிரசாரங்கள் பற்றியும் கவன ஈர்ப்பு மேற்கொள்ளப்பட்டது.
பதுளை சம்பவத்தை எடுத்துக்கொண்டால் ஒரேவிதமான விஷமச் சக்தி செயல்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினை அகஸ்மாத்தாக உருவானது அல்ல. சில காலமாக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. முஸ்லிம்களின் பொருளாதாரத்தை முடக்குவதுடன், இந்த நாட்டையே முஸ்லிம்கள் அபகரித்துக்கொள்ளப் போகிறார்கள் என்ற புரளியை கிளப்புவதும் அவர்களது நோக்கமாகும். புதிதாகத் தோற்றுவிக்கப்பட்டுள்ள ஒரு தீவிரவாத பேரினவாத அமைப்பு அண்மைக்காலமாக முஸ்லிம் விரோத நடவடிக்கைகளை சில பிரதேசங்களில் மேற்கொண்டு வருகிறது.

இவ்வாறான சூழ்நிலையில் முஸ்லிம்கள் பக்குவமாகவும் நேர்மையாகவும் நிலைமைகளை கையாள்வதோடு உள்ளுர் தலைமைகளுடன் ஒத்துழைத்து செயல்பட வேண்டும். அத்துடன் உச்சக் கட்ட சகிப்புத் தன்மையையும் கடைபிடிக்க வேண்டும். ஆரம்பகால இஸ்லாமிய வரலாற்றை உற்றுநோக்கினால் ஈமானிய இஸ்லாமிய சமுதாயம் சகிப்புத் தன்மையின் உச்சக் கட்டத்தை பிரதிபலித்ததனாலேயே இஸ்லாத்தின் வளர்ச்சி மேலோங்கியது புலப்படும்.

எதற்கெடுத்தாலும் தேவையற்ற விதத்தில் அவர்கள் வாளை உருவவில்லை. தடியெடுத்தவனெல்லாம் வேட்டைக்காரன் என்ற மனப்போக்கில் நிலைமைகளை சிக்கலாக்கிக்கொள்ளக் கூடாது. விடயங்களை நிதானமாகவும், புத்திசாலித்தனமாகவும் அணுக வேண்டும்.
அமைச்சர் பௌசியின் இல்லத்தில் சில தினங்களுக்கு முன் நடந்த சந்திப்பில் அமைச்சர் பெசில் ராஜபக்ஷவுடன் இவை பற்றி உரையாடப்பட்டு அதற்கு சாதகமான பதில் கிடைத்துள்ளது. அன்றைய சந்திப்பில் நான் கலந்துகொள்ள முடியாத சந்தர்ப்பத்தில் எமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை அதில் கலந்துகொள்ளச் செய்திருந்தேன்.

இஸ்லாமிய, முஸ்லிம் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் ஒருவிதமான அசாமான்ய தைரியத்துடன் அதில் இறங்குகிறார்கள் என்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இதன் பின்னணியில் சர்வதேச சதி ஒன்று உள்ளதா, அரசாங்கத்தை பலமிழக்கச் செய்வதற்கான ஒரு பின்புலம் உள்ளதா என்ற பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

பலாங்கொடை தப்தர் ஜெய்லானி மலைக்குகை விவகாரம், மூதூர் ஜபல் மலை விவகாரம், புல்மோட்டையிலிருந்து பொத்துவில் வரை ஏற்பட்டுள்ள நிலைமை என்பவற்றின் பின்னணியில்  புராதன சின்னங்களை தேடிக் கண்டுபிடிப்பதாகக் கூறி அகல்வாராய்வுகளிலும், தொல் பொருள் ஆய்வுகளிலும் கூடுதல் கவனம் செலுத்தப்படுவது பற்றி சீர்தூக்கிப் பார்க்கப்படுகின்றது.
ஆத்திரப்பட்டு அவசரப்பட்டு முஸ்லிம்கள் மோதலில் ஈடுபடுவார்களென தீய சக்திகள் எதிர்பார்த்திருந்து அதனை தமது குறுகிய நோக்கங்களை அடைவதற்கு வாய்ப்பாக பயன்படுத்த எண்ணுகின்றனர்.
1915 ஆம் ஆண்டிலிருந்து முஸ்லிம் விரோத நடவடிக்கைகள் படிப்படியாக காலத்துக்கு காலம் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது.

பெரும்பான்மை சிங்கள மக்களிலும் மிகப் பெரும்பாலானோர் இனவாதத்தை வெறுக்கின்றனர். சிங்கள மக்களில் மிக மிக குறைந்த எண்ணிக்கையினரே இனவாதத்தை ஆதரிக்கின்றனர். புதிதாக தோற்றம்பெற்றுள்ள பௌத்த பேரினவாத அமைப்பினர் சிங்கள மக்களில் மிகச் சிலரே. அவர்கள் முஸ்லிம்கள் மத்தியில் பீதி மனப்பான்மையை ஏற்படுத்த எத்தனித்து வருவதோடு, முஸ்லிம்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு பிரச்சினைகளை உண்டாக்குவதற்கு சந்தர்ப்பங்களை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இதன் பின்னணி பற்றி இப்பொழுது தெரியவந்துள்ளது.

யுத்த சூழ்நிலையிலும் பின்னரும் தமிழ் மக்கள் நாட்டைவிட்டு பெரும் எண்ணிக்கையில் புலம்பெயர்ந்து சென்றதால் அவர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை  காரணம் காட்டியும், முஸ்லிம்களின் சனத்தொகை வெகுவாக அதிகரித்து வருவதாகக் கூறியும் இஸ்லாமிய விரோதப் போக்கை தூண்டுவதற்கு தீய சக்திகள் திட்டமிட்டுச் செயல்படுகின்றன.
ஆட்சித் தலைவர் உட்பட அரச மேல்மட்டத்தினருக்கு கட்சி பேதம், இயக்க வேறுபாடுகளின்றி கூட்டாக சேர்ந்து இவற்றை எத்திவைப்பதோடு உரிய தீர்வுகளைக் காண்பதற்கும் தீர்மானித்துள்ளோம்.

இவ்வாறு அமைச்சர் ஹக்கீம் தமது உரையில் தெரிவித்தார்.
பள்ளிவாசல் நிருவாகிகள். உலமாக்கள், ஊர் ஜமாஅத்தினர் ஆகியோர் ஒன்று கூடல் நிகழ்விற்கு சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அமைச்சர் ஹக்கீம், பண்டாரவளை, பலாங்கொடை ஆகிய இடங்களுக்கும் விஜயம் செய்தார். இதற்கான ஏற்பாடுகளை அமைச்சரின் இணைப்பாளர் சியாத் ஹமீத் மேற்கொண்டிருந்தார்.

டாக்டர். ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்
ஊடகச் செயலாளர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :