மக்கள் வழங்கிய அதிகாரத்தை காத்தான்குடி நகர சபை துஷ்பிரயோகம் செய்கிறது;

காத்தான்குடி நகர சபை நேற்று வெள்ளிக்கிழமை (21.12.2012) நடாத்திய முப்பெரும் எழுச்சி விழாவை தமது நகர சபை உறுப்பினர்கள் பகிஷ்கரித்ததாக நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
...
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

இறுதியாக நடந்து முடிந்த காத்தான்குடி நகர சபைத் தேர்தலில் மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியிலேயே வாக்களித்திருந்தார்கள். குறிப்பாக காத்தான்குடி நகரம் எதிர்நோக்கும் மிக முக்கியமான பிரச்சினைகளான மடுவப் பிரச்சினை,குப்பைகளை அகற்றுதல், சீரற்ற வீதிகள் மற்றும் வெள்ள நீர் வடிந்தோட முடியாத வடிகான்கள் ஆகியவற்றுக்கு நகர சபை மூலமாக தீர்வு காணப்பட வேண்டும் என்பதே மக்களின் பெரும் எதிர்பார்ப்பாக இருந்தது.

அத்தோடு நகர சபையானது பொது நிதியைக் கையாளும் விடயத்தில் வெளிப்படைத் தன்மையோடும் நேர்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்றே மக்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். இருப்பினும் தற்போதைய நகர சபை நிர்வாகம் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை விடுத்து அப்பிரச்சினைகளை வளரவிட்டு மேலும் மக்களுக்கு அசௌகரியங்களை தோற்றுவிக்கும் வகையிலேயே செயற்பட்டு வருவது கவலைக்குரியதாகும்.

மடுவப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டிய நகர சபை நிர்வாகம் இன்று அதனை மூடுவதற்கே வழி வகுத்துள்ளது. குப்பைப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாகக் கூறி மக்களிடம் பணம் வசூலித்த போதிலும் அதற்கு தீர்வு காணவில்லை. கோடிக்கணக்கான ரூபாய்களை செலவு செய்து வீதி அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதாகக் கூறிக் கொண்டாலும் வடிகான்கள் எவையுமே வெள்ள நீர் வடிந்தோடுவதற்கேற்ற வகையில் அமைக்கப்படவில்லை. நகர சபையினால் அமைக்கப்பட்ட எந்த வீதிகளுமே தரமானதாகவோ சீரானதாகவோ அமையவில்லை.

இவ்வாறு மக்களின் அதிமுக்கிய பிரச்சினைகள் எவற்றுக்குமே தீர்வைக் காணவோ தீர்வைக் காண்பதற்கான முயற்சிகளையோ மேற்கொள்ளாத நிலையில் அதே மக்களின்பணத்தைச் செலவு செய்து விழாக்களைக் கொண்டாடுவது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.

நகர சபை என்பது மிகவும் வெளிப்படைத் தன்மையுடையதாகவும் மக்களுக்கு விசுவாசமானதாகவும் அமைய வேண்டும் என நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது. நாம் எதிர்க்கட்சியில் இருக்கின்ற போதிலும் மக்களின் நலன்கருதி நகர சபையினால் முன்னெடுக்கப்படும் எந்தவொரு வேலைத் திட்டத்திற்கும் எமது ஆதரவு கிடைக்கும் என்பதை தொடர்ச்சியாக வலியுறுத்தியே வருகிறோம்.

இருந்த போதிலும் மடுவப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினால் முன்மொழியப்பட்ட விஞ்ஞான பூர்வமான தீர்வுத் திட்டத்தை கணக்கிலெடுக்காது அதனைத் தூக்கி எறிந்த இந்த நகர சபை நிர்வாகம் இன்று மடுவத்தையே இழுத்து மூடுவதற்கு துணை போயுள்ளமையானது துரதிஷ்டவசமானதாகும்.

அதே போன்றுதான் குப்பை மற்றும் வடிகான் பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வைக் காண்பதற்கான பங்களிப்புக்களைச் செய்வதற்கு எமது இயக்கம் தயாராக விருந்த போதிலும் நகர சபை நிர்வாகம் அதில் போதிய அக்கறை காட்டவோ அல்லது நேர்மையாக செயற்படவோ முன்வரவில்லை.

அது மாத்திரமன்றி மக்களின் நிதியினைக் கையாளும் நகர சபையில் ஊழல் மோசடிகள் இடம்பெறக் கூடாது எனவும் நிதி விவகாரத்தில் வெளிப்படைத் தன்மை பேணப்பட வேண்டும் எனவும் நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம்.

சபையில் நடைபெற்ற நிதி கையாளல்முறைகேடுகளை எமது உறுப்பினர்கள் ஆதாரபூர்வமாக நிரூபித்திருந்த போதிலும் அவைஎவற்றுக்கும் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு நகர சபை நிருவாகம் நேர்மையுடன் செயற்படவில்லை. மாறாக காத்தான்குடி நகர சபையின் 35 வீதமான மக்கள் ஆணையைப் பெற்ற எமது பிரதிநிதிகளின் குரல்களை நசுக்கும் வகையிலேயே நகர சபை நிருவாகம் நடந்து கொண்டது.

நிதி மற்றும் கொள்வனவு நடவடிக்கைகளோடு தொடர்புபட்ட மிக முக்கியமான சகல குழுக்களிலிருந்தும் எமது உறுப்பினர்கள் நீக்கப்பட்டார்கள். இதுவும் கூட நகரசபை நிருவாகத்தினால் மோசடியான வகையில் கூட்டறிக்கையில் செருகப்பட்ட ஒரு தீர்மானத்தின் மூலமாகவே மேற்கொள்ளப்பட்டது. கொந்தராத்து நடவடிக்கைகள் தொடர்பாக எமது உறுப்பினர்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு இதுவரை முழுமையான, முறையான பதில்கள் அளிக்கப்படவில்லை.

நகர சபை நிருவாகத்தினரின் தனிப்பட்ட நலன்களை பூர்த்தி செய்யும் பொருட்டு மக்களினால் வழங்கப்பட்ட அதிகாரமானது சர்வாதிகாரமான முறையில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது. காத்தான்குடி மெத்தைப் பள்ளிவாயலுக்குச் சொந்தமான கடைகளை நகர சபையின் எவ்வித தீர்மானமுமின்றி சட்டபூர்வமான நடைமுறைகளை மதிக்காமல் உடைத்துத் தள்ளிய சம்பவம் இதற்கு நல்ல உதாரணமாகும்.

இதன் தொடரில் மேற்கொள்ளப்பட்டு வரும் நீதிமன்ற வடிவடிக்கைகள் காரணமாக பள்ளிவாயல் மற்றும் நகரசபைத் தரப்பில் பொதுமக்களின் நிதியை அநியாயமாக செலவழிக்கின்ற நிலையினை இந்த சர்வாதிகார நடவடிக்கை ஏற்படுத்தியிருக்கிறது.

மக்களுக்கு சொந்தமான நகரசபை அமர்வுகளை சிவில் சமூகப் பிரதிநிதிகளோ அல்லது ஊடகவியலாளர்களோ அவதானிப்பதற்கான உரிமையை இந்த நகர சபை நிருவாகம் தொடர்ந்தும் மறுத்து வருகிறது. சாதாரணமாக ஒரு இணையத்தளம் மூலமாகவேணும் சபை நடவடிக்கைகளை மக்களுக்குத் தெரியப்படுத்தவதற்குக் கூட முடியாத நிலையிலும் தாம் நிருவகிக்கின்ற எல்லையைக் கூட இதுவரை காலமும் நிர்ணயிக்க முடியாத நிலையிலுமே நகர சபை இயங்கி வருவதனை மக்கள் விசனத்துடன் அவதானித்து வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

ஆகமொத்தத்தில், மக்களின் உணர்வுகளை மதித்து நகரசபை மக்களுக்கு ஆற்ற வேண்டிய மிக அடிப்படைக் கடமைகளை செய்வதற்கோ அல்லது குறைந்தபட்ச வெளிப்படைத் தன்மையினையும் நேர்மையினையும் கடைப்பிடிப்பதற்கோ நகரசபையினால் இதுவரை முடியவில்லை.

இப்படியான நிலையில் இவ்வளவு பிரச்சினைகளும் இருக்கத்தக்கதாக கிழக்கு மாகாணத்தின் சிறந்த நகர சபையாக பரிசு பெற்றதாக பெருமைப்பட்டுக் கொள்வதில் எவ்வித அர்த்தமுமில்லை.

இவ்வாறான பின்னணியில், மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் எவற்றுக்கும் தீர்வு காணவோஅல்லது தீர்வை நோக்கி அடியெடுத்து வைக்கவோ முற்படாத நிலையில் அல்லது மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட முடியாத நிலையில் நகர சபை நிருவாகம், இவ்வாறான ஒரு விழாவை மக்களின் பணத்தை செலவழித்து நடாத்துவதானது அர்த்தமற்றது மாத்திரமன்றி நமது மக்களை அவமதிக்கும் செயலுமாகும் என்றே எமது இயக்கம் கருதுகிறது.

எனவே நகர சபையால் நடாத்தப்பட்ட விழாவை எமது மக்களின் சார்பாக நின்று உழைத்து வரும்,மக்களின் உணர்வுகளை மதிக்கம் ஒரு இயக்கம் என்ற வகையில் எமது இயக்கம் பகிஷ்கரிக்க வேண்டும் எனத் தீர்மானித்தது. அந்த வகையிலேயே இன்றைய நிகழ்வுகள் எமது இயக்கத்தின் பிரதிநிதிகளான நகரசபை உறுப்பினர்கள் இருவரும் பகிஷ்கரித்திருக்கிறார்கள் என்பதனை எமது இயக்கம் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :