மலையகத்தில் படித்தவர்கள் அரசியலுக்கு வருவதில்லை என்பது பொய். வருபவர்கள் ஓரங்கட்டப்படுகிறார்கள் என்பதே மெய் - மாற்று அரசியல் கலாசாரம் அவசியம் என்கிறார் திலகர்



லையகத்திலே படித்தவர்கள் அரசியலிலே பங்கேற்பதல்லை என்கின்ற மாயையை உருவாக்கி தாங்கள்தான் சகலருக்கும் தலைமை கொடுக்கிறோம் என மரபுசார் அரசியல் தலைமைகள் பொய்யான புனைவு அரசியலை முன்வைத்து வருகின்றன. ஆனால் உண்மை நிலை அதுவல்ல. மலையகத்திலே ஆரம்பத்தில் இருந்தே அறிவார்ந்த அரசியலை முன்வைத்துச் செயற்பட்ட பல ஆளுமைகளை அடையாளம் காட்ட முடியும். மலையகத்தில் படித்தவர்கள் அரசியலுக்கு வருவதில்லை எனும் பொய்யான மாயையை உருவாக்கி அவ்வாறு வருபவர்கள் ஓரங்கட்டப்பட்டு வருகிறார்கள் என்பதே மெய் என்பதை அரசியல் மட்டத்தில் மக்களிடத்தில் கொண்டு செல்ல வேண்டும். அதற்கு மலையகத்தில் மாற்று அரசியல் கலாசாரம் அவசியம் என மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிறுத்தி அக்கரப்பத்தனை பிரதேச முதன்மை வேட்பாளரும் ராணிவத்தை வட்டார வேட்பாளருமான இளம் பட்டதாரி நீலா பன்னீர்செல்வத்தினை ஆதரித்து பெரிய ராணிவத்தை, மவுசால்ல தோட்டங்களில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்,
மலையகத்தில் படித்தவர்கள் அரசியலில் பங்கேற்பதில்லை எனும் பொய்யான கருத்தை முன்வைத்து புனைவு அரசியல் ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

1920 களில் மலையகத்தில் அரசியல் செயற்பாட்டு தொடக்கத்தை வழங்கி சட்டசபையிலும் அரசவையிலும் அங்கம் வகித்த மலையகதேச பிதா கோ. நடேசய்யர் கற்றறிந்த ஊடகவியலாளரும் பன்னூலாசிரியருமாவார்.

1936 ஆம் ஆண்டு தொழில் மற்றும் வாணிப அமைச்சராக இருந்த கண்டி பன்விலையைச் சேர்ந்த மலையகத்தவரான பெரி.சுந்தரம் என்பவராவார். அவர் அந்த நாளிலேயே லண்டன் பரிஸ்ட்டர் எட் லோ எனும் பட்டம் பெற்றவர்.

1947 ஆம் ஆண்டு பாராளுமன்றில் உறுப்பினராக இருந்த ஜி. ஆர். மோத்தா, டி. ராமானுஜம், சி.வி. வேலுப்பிள்ளை போன்றவர்கள் கற்றறிந்த அறிவார்ந்த அரசியல் முன்வைப்புகளைச் செய்தவர்களே. அவர்களது விவாதங்களை ஹன்சார்ட் அறிக்கையிலே கண்டு வியந்து இருக்கிறேன்.

1960 களில் வி.கே. வெள்ளையன் போன்ற கல்வியாளர்கள் தொழிற்சங்கத் தலைவர்களாக செயற்பட்டார்கள். தேர்தலிலும் அவர் போட்டியிட்டார் . இலங்கை திராவிட இயக்க முன்னோடி ஏ. இளஞ்செழியன், பாடசாலை அதிபரின் சட்டத்தரணி இர. சிவலிங்கம் போன்ற மலையகத்தலே காத்திரமான அரசியலை முன்வைத்தவர்களே. 1980 களில் வி.டி. தர்மலிங்கம், பி.ஏ.. காதர், மு. சிவலிங்கம், ஏ. லோறன்ஸ் போன்றவர்கள் அரசியலில் முனைப்புடன் செயற்பட்டவர்களாவர்.

1990 களில் பி.பி.தேவராஜ் போன்றவர்கள் ராஜாங்க அமைச்சர்களாக இருந்தார்கள். அவர் லண்டனில் உயர் கல்வி கற்கப் போய் அரசியல் ஈர்ப்பால் அதனையே தொடர்ந்தவர்.2010 ஆண்டு பாராளுமன்றத்திலும் கூட சட்டத்தரணி ராஜதுரை அங்கம் வகித்தார்.

இவ்வாறு எல்லா காலத்திலும் மலையகத்தில் கற்றிவாளர்களின் அரசியல் பிரசன்ன்னம் இருந்து வந்துள்ளது. ஆனால் அவ்வாறு முன்வருபவர்களைக் கொண்டு மலையகத்தில் அறிவார்ந்த அரசியலை முன்கொண்டு செல்லாமல் தமது அரசியல் அதிகார பலத்தினை தக்கவைத்துக்கொள்வதற்காக மலையகத்திலே படித்தவர்கள் அரசியலிலே பங்கேற்பதில்லை என்கின்ற மாயையை உருவாக்கி தாங்கள்தான் சகலருக்கும் தலைமை கொடுக்கும் அரசியல் தலைமைகள் என மரபுசார் அரசியல் தலைமைகள் பொய்யான புனைவு அரசியலை முன்வைத்து வருகின்றனர்.

அறிவார்ந்த அரசியல் கருத்துக்களையும் செயற்பாடுகளையும் முன்வைப்போர் ஓரங்கட்டப்பட்டு வந்துள்ளார்கள். ஒரே ஒரு முறை பாராளுமன்றத்துக்கு தெரிவாகி நுவரெலியா மாவட்டத்தின் சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் என சான்று வாங்கிய எனக்கு அடுத்த தேர்தலில் போட்டியிடுவதற்கு கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை. தேசிய பட்டியலில் வாய்ப்பு வழங்குவதாக திட்மிட்டப்பட்ட அடிப்படையில் என்னை வெளியேற்ற நினைத்தார்கள்.
என்னை அரசியலில் இருந்து வெளியேற்ற அவர்களால் முடியாது. நான் பிறந்ததில் இருந்தே அரசியல்வாதி. இறக்கும் வரை அரசியல் வாதி . மாற்று அரசியல் கதைகளைப் பேசிக் கொண்டு இருக்காமல் அதனை களத்தில் இறங்கி செய்துப் பார்ப்பவன். வாடகைக்கு வாகனம் அமர்த்தி ஆதரவாளர்களை மண்டபத்துக்கு அழைத்து பேசிவிட்டுச் செல்வது அல்ல எனது அரசியல். மக்களை தயக்கமின்றி களத்திற்கு சென்று சந்தித்து எனது கருத்துக்களை முன்வைப்பவன்.
அத்தகைய ஒரு முயற்சியாகவே மலையக அரசியல் அரங்கத்தைத் தொடங்கி இருக்கிறேன். அரங்கத்தில் பல நூறு மாணவர்கள் அரசியல் பயில்கிறார்கள். அவர்கள் தேர்தல் களத்திலும் இறங்கியுள்றார்கள். அவர்களுக்கு ஆதரவு தேடி ஊர் ஊராக பயணிக்கிறேன். பிரச்சாரம் செய்கிறேன்.

மலையகத்திலே மாற்று அரசியல் அரசியல் கலாசாரம் ஒன்றை வேண்டி நிற்கும் மக்களுக்கு மலையக அரசியல் அரங்கம் ஒரு தெரிவாக இருக்கிறது. அதனை ஆதரிக்குமாறு வேண்டுகிறோம்.

மலையகக் கல்வியாளரான எம். ஏ. பட்டதாரி டி. வி. மாரி முத்து அவர்கள் நுவரெலியா பிரதேச சபைத் தலைவராக செயற்பட்டதற்கு பிறகு அந்த பிரதேச சபையில் இருந்து உருவான அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கு இளம் பட்டதாரியான சகோதரி நீலா பன்னீர் செல்வத்தை முதன்மை வேட்பாளராக சபைத் தலைமை பதவிக்கு முன்னிறுத்தியுள்ளோம். தோட்டத் தொழிலாளியின் பிள்ளைகளான இத்தகைய கற்றிந்தவர்கள் கைகளுக்கு அரசியல் கைமாற்றப்படும்போதுதான் மலையக அரசியல் அடுத்த தலைமுறையிலாவது அறிவார்ந்த ரீதியாக முன்செல்லும் எனவும் தெரிவித்தார். பெரிய ராணிவத்தை நூலகத்துக்கு தனது "மலைகளைப் பேசவிடுங்கள்" நூல் பிரதியையும் அன்பளிப்பு செய்தார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :