கலைஞர் கருணாநிதியை கரித்து கொட்டுவதை நிறுத்துங்கள்!தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி



சும்மா கலைஞர் கருணாநிதியை கரித்து கொட்டுவதை நிறுத்துங்கள்! இலங்கையில் தமிழர்களின் எல்லா இழப்புகளுக்கும், தமிழக அரசியல்வாதிகளையும், இந்திய தலைவர்களையும் காரணமாக காட்டுவதையும் நிறுத்துங்கள்!! என கொழும்பு மாவட்ட எம்பி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

தமிழக இலங்கை அரசியல் பிரமுகர் மறைந்த மணவை தம்பியின் மைந்தர் மணவை அசோகனின் பவள விழா நிகழ்வு மட்டக்குளியில் நடைபெற்ற போது, அதில் அதிதியாக கலந்துக்கொண்ட தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், தமது உரையில் மேலும் கூறியதாவது,

சும்மா கலைஞர் கருணாநிதியை கரித்து கொட்டுவதை நிறுத்துங்கள். இலங்கையில் தமிழர்களின் எல்லா இழப்புகளுக்கும், தமிழக அரசியல்வாதிகளையும், இந்திய தலைவர்களையும் காரணமாக காட்டுவதை நிறுத்துங்கள். இலங்கையில் தமிழர்கள் கண்டு விட்ட இழப்புகளுக்கு முதற்காரணம், இலங்கை தமிழ் அரசியல் மேதைகள். இரண்டாவது காரணம், கொலைகார பேரினவாத அரசுகள்.

1940களில் கண்டிய சிங்கள தலைமைகளே தர முன் வந்த சமஷ்டியை எட்டி உதைத்தது யார்? 65:35 என்ற ஜனபரம்பலுக்கு, நியாயமேயற்ற 50:50 என்ற யதார்த்தமற்ற கோரிக்கையை முன் வைத்து, பிரிட்டீஷ் அரசாங்கமே கைவிரிக்கும் நிலைமையை ஏற்படுத்தியது யார்? 1987ல் வடக்கு கிழக்கு மாநிலம் என்ற அடிப்படையை துவக்கி வைத்த, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தையும், மாகாணசபைகளையும் எட்டி உதைத்தது யார்?

இன்று, "பிச்சை வேண்டாம், நாயை பிடி!" என்ற மாதிரி, 13ம் திருத்தத்தையாவது முழுமையாக அமுல் செய்யுங்களேன் என ஓலமிடுவது யார்? இந்திய நாட்டு பிரதமராக இருந்த, மீண்டும் பதவிக்கு வரவிருந்த, ராஜீவின் மரணத்துக்கு காரணத்தை மறந்து விட்டு, இப்போது இந்திய அரசு தலைவர்களிடம், அதிகாரிகளிடம் கோரிக்கை மேல் கோரிக்கை வைப்பது யார்? இன்றும்கூட சகோதர முஸ்லிம் மக்களின் தேசிய அபிலாஷைகளை உள்வாங்காமல், வடக்கு-கிழக்கு இணைப்பு என நிபந்தனை விதிப்பது யார்?

கருணாநிதியும், இந்திய தலைவர்களும் அதி உத்தமர்கள் என நான் கூற வரவில்லை. கருணாநிதியை கருணை நிதி எனவும் நான் கூறவில்லை. ராஜிவ் காந்தியை மகாத்மா காந்தி எனவும் நான் கூற வரவில்லை. ராஜிவ் அனுப்பி வைத்த இந்திய அமைதி படை இங்கே கொலைகள், பாதகங்கள் செய்யவே இல்லை எனவும் நான் கூற வரவில்லை. “ஆர்மி” என்ற இராணுவம் எல்லா நாட்டிலும் ஒன்றுதான். கட்டவிழ்த்து விட்டால் இந்திய, இலங்கை, இங்கிலாந்து, அமெரிக்க இராணுவம் எல்லாம் ஒன்றுதான்.

இந்தியா ஒரு நாடு. இலங்கை இன்னொரு நாடு. தமது "தேச நலன்கள்" அவரவருக்கு முக்கியம் என்பதும், இந்தியர்கள் எமக்காக வரக்கூடிய தொடுவானம் எதுவரை என்பதும், நமது தமிழ் அரசியல் மேதைகளுக்கு விளங்கி இருந்திருக்க வேண்டும். அது சிங்கள அரசியல் மேதைகளுக்கு நன்கு தெரிந்து இருந்தது. அதனால்தான் அவர்கள் கெட்டிக்காரத்தனமாக காய் நகர்த்தி தமது இலக்கை அடைந்தார்கள்.

கருணாநிதியோ, ஜெயலலிதாவோ, எம்ஜியாரோ, இன்று ஸ்டாலினோகூட, தமக்கு வாக்களித்து ஆட்சியில் அமர்த்தும் எட்டு கோடி தமிழருக்குதான் முதலில் பொறுப்புகூற கடமைபட்டுள்ளார்கள். இந்திரா காந்தியோ, ராஜீவ் காந்தியோ, இன்று நரேந்திர மோடியோகூட, தமக்கு வாக்களித்து ஆட்சியில் அமர்த்தும் நூற்றிமுப்பது கோடி இந்திய மக்களுக்குதான் முதலில் பொறுப்புகூற கடமைபட்டுள்ளார்கள். தங்கள் பார்வையில் தங்கள் நாட்டுக்கும், அரசாங்கத்துக்கும் தீமை எனை அவர்கள் கருதும் எந்த ஒரு காரியத்தையும் அவர்கள் செய்ய மாட்டார்கள்.

இதிலும்கூட, கருணாநிதி இலங்கை தமிழருக்காக, தமிழ் நாட்டில் இரண்டு முறை தனது திராவிட முன்னேற்ற கழக மாநில ஆட்சியை இழந்தார் என்பது இங்கே எத்தனை தமிழ் மேதைகளுக்கு ஞாபகம் இருக்கிறது? ஆகவே, சும்மா கலைஞர் கருணாநிதியை குறி வைத்து கரித்து கொட்டுவதை நிறுத்துங்கள். முதலில் சுய விமர்சனம் செய்ய ஆரம்பியுங்கள். வரலாறு முழுக்க செய்து விட்ட சுய தவறுகளை தேடுங்கள். விடை கிடைக்கும்.

நான் சும்மா ஊருக்கு உபதேசம் செய்யவில்லை. அனுபவத்தை பகிர்கிறேன். எனக்கு பின்னடைவு ஏற்பட்டால், காரணத்தை எனக்குள்ளேதான் நான் தேடுகிறேன். ஆகவே விடையும் கிடைக்கிறது. இந்த யுக்தியை எனக்கு வரலாறு கற்று கொடுத்திருக்கின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :