பாண்டியன்குளம், கரும்புள்ளியான் குடிநீர் திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திடம் ரிஷாட் எம்.பி வேண்டுகோள் - இந்த திட்டத்தை வேறு மாவட்டங்களுக்கு மாற்றுவது பாரிய அநீதி எனவும் தெரிவிப்பு!ஊடகப்பிரிவு-
முல்லைத்தீவு, துணுக்காய், பாண்டியன்குளம் பிரதேச மக்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட ‘கரும்புள்ளியான் குடிநீர் விநியோகத் திட்டத்தை’ வேறு மாவட்டங்களுக்கு திசை திருப்பாமல், மீண்டும் அதே பிரதேசத்தில் ஆராம்பிக்க ஜனாதிபதியும் அரசாங்கமும் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார்.

இந்தப் பிரச்சினை சம்பந்தமாக, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் பாராளுமன்றத்தில் கொண்டுவந்த பிரேரணை தொடர்பில் உரையாற்றிய ரிஷாட் எம்.பி மேலும் கூறியதாவது,

“கரும்புள்ளியான் குடிநீர் திட்டத்தை ஆரம்பிப்பதற்கான கேள்விமனுக்கள் 2022.01.12ஆம் திகதி பத்திரிகைகளில் கோரப்பட்டது. அத்துடன், உலக வங்கியின் மேற்படி திட்டம், இந்தப் பிரதேச மக்களுக்காக கொண்டுவரப்படும் என்ற வாக்குறுதியும் வழங்கப்பட்டது. இதனால், இந்தப் பிரதேச மக்கள் தமக்கு விமோசனம் கிடைக்குமென மகிழ்ச்சியில் இருந்தபோதும், இன்றுவரை அது ஆரம்பிக்கப்படவில்லை. இந்தப் பகுதியில் வாழும் மக்கள் சுத்தமான குடிநீர் இன்றி பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வருவதுடன், சிறுநீரக நோயினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறப்பட்ட இந்த உத்தேச குடிநீர் திட்டம், வேறு மாவட்டத்துக்கு மாற்றப்படவுள்ளதாக அதிகாரிகள் மூலம் அறியவருகின்றது. இதனைக் கேள்வியுற்ற அந்தப் பிரதேச மக்கள் ஏக்கத்துடன் இருக்கின்றனர்.

பாண்டியன்குளம் பிரதேசத்தில் 3047 குடும்பங்கள் அதாவது, 9857 பேர் வாழ்கின்றனர். இதனை அண்டிய பிரதேசங்களில் 4330 குடும்பங்கள் அதாவது, 12994 பேர் வாழ்கின்றனர். அதிகமான மக்கள் செறிந்துவாழும் இந்தப் பிரதேசத்தில், அநேகமானோர் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்பவர்களே. விவசாயிகளும் கூலித் தொழிலாளர்களுமே அநேகர். நீண்டகாலமாக சுத்தமான குடிநீர் இன்மையால், இந்த அப்பாவி மக்கள் சிறுநீரக நோய்க்கு ஆளாகியுள்ளனர். சுமார் 02 சதவீதத்துக்கு மேல் இந்தப் பிரதேசத்தில் சிறுநீரக நோயாளர்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதிக்கப்பட்டோர் சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு செல்லவேண்டியிருப்பதால் நிதி நெருக்கடிக்கும் ஆளாகின்றனர்.

இவ்வாறு மிகவும் துன்பத்தில் வாழும் இந்த மக்களை நாடிவந்த மேற்படி குடிநீர் திட்டத்தை, வேறு இடங்களுக்கு மாற்றுவதோ அல்லது இதற்கு பயன்படுத்தவிருந்த நிதியை வேறு திட்டங்களுக்கு பயன்படுத்துவதோ இந்த மக்களுக்கு செய்யும் பாரிய அநியாயமாகும்.

உலக வங்கியானது, இந்தப் பிரதேசத்தில் மேற்படி திட்டத்தைக் கொண்டுவர ஏற்பாடுகளை செய்த பின்னரும், இவ்வாறான ஒரு நிலை இந்த மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான பிரேரணையை முன்மொழிந்த பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் ஆகியோர், குடிநீர் இன்றி இந்த மக்கள் படுகின்ற அவஸ்தைகளை தெளிவாக விவரித்தனர். அதுமாத்திமின்றி, மாந்தை கிழக்கு பிரதேச சபை தவிசாளர் நந்தனும் இது தொடர்பில், உலக வங்கிக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தார். அத்துடன், ஜனாதிபதிக்கும் இந்தத் திட்டத்தை மீளப்பெற்றுத்தருமாறு கோரி கடிதம் அனுப்பியிருந்தார். இந்த உயர் சபையிலே அந்தக் கடிதங்களின் பிரதிகளையும், ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்துக்கான பதில் கடிதத்தையும் நான் சமர்ப்பிக்கின்றேன். ஹன்சாட்டில் இவற்றை இணைத்துக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுப்பதுடன், இந்த மக்களுக்கு அநியாயம் இழைக்க துணைபோக வேண்டாமெனவும் கோருகின்றேன்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இந்த மக்கள் மிகுந்த கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர். எனவே, விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் அவசரமாக இதில் தலையீடு செய்து, இந்தத் திட்டத்தை ஏற்கனவே முடிவு செய்யப்பட்டவாறு பாண்டியன்குளம் பிரதேசத்தில் ஆரம்பிக்குமாறு வேண்டுகின்றேன்.

இதேவேளை, கனடாவில் வசித்துவரும் செந்தில் குமரன் சார்ந்த அமைப்பொன்று, சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ள இந்தப் பிரதேச மக்களுக்கு உபகரணங்களை வழங்கியமைக்காக, இந்த மக்கள் சார்பில் அவ்வமைப்புக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்” என்று கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :