யார் இந்த எஸ்.பி.பி?

J.f.காமிலா பேகம்-

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் இன்று பிற்பகல் 1 மணியளவில் உயிரிழந்தார் என்று நிர்வாகம் அறிவித்திருக்கின்றது.

உயிரிழக்கும்போது 75 வயதைப் பூர்த்திசெய்துள்ளார் பாடகர் பாலசுப்பிரமணியம்.

யார் இந்த எஸ்.பி.பி?

ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் எனும் இயற்பெயர் கொண்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம் தற்போது ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள நெல்லூரில் கொணேடம்மாபேட்டையில் 1946 – ம் ஆண்டு பிறந்தார்.

எஸ்.பி.பியின் தந்தை எஸ்.பி. சம்பமூர்த்தி ஹரிகாதா நாடகக் கலைஞர். இவருக்குப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம், எஸ்.பி சைலாஜா உள்ளிட்ட 8 குழந்தைகள் பிறந்தனர்.

சிறு வயதிலிருந்தே இசை மற்றும் பாடல்களில் ஆர்வத்துடன் பங்கேற்ற எஸ்.பி.பி கல்லூரியில் படித்த போதே பல்வேறு இசைப் போட்டிகளில் பங்குபெற்றுள்ளார்.

1964 – ம் ஆண்டில், சென்னை தெலுங்கு கலாச்சார அமைப்பு ஏற்பாடு செய்த அமெச்சூர் பாடகர்களுக்கான இசைப் போட்டியில் முதல் பரிசை வென்றார்.

இசைக்கச்சேரி நடத்திக்கொண்டிருந்த காலத்தில், அனிருட்டா (ஹார்மோனியம்), இளையராஜா (கிதார் மற்றும் ஹார்மோனியம்), பாஸ்கர் (தாளம்), மற்றும் கங்கை அமரன் (கிதார்) ஆகியோரை அடங்கிய ஒளி இசை குழுவின் தலைவராகவும் இருந்துள்ளார் எஸ்.பி. பாலசுப்ரமணியம்.

1966 – ம் ஆண்டு, ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மரியாதை ராமன்னா எனும் தெலுங்கு திரைப்படத்தில் தான் எஸ்.பி.பி முதல் முறையாகப் பின்னணிப் பாடகராக அறிமுகமானார்.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி இசையில் எல்.ஆர்.ஈஸ்வரியோடு இணைந்து, ஹோட்டல் ரம்பா திரைப்படத்தில் ’அத்தானோடு இப்படியிருந்து எத்தனை நாளாச்சு’ என்ற பாடல் தான் எஸ்.பி.பி பாடிய முதல் தமிழ் பாடல். ஆனால், எதிர்பாராத விதமாக ஹோட்டல் ரம்பா படம் வெளியாகவில்லை.

அதன்பிறகு, சாந்தி நிலையம் என்ற திரைப்படத்தில் ‘இயற்கையெனும் இளையகன்னி’ பாடலைப் எஸ்.பி.பி பாடினார். ஆனால், அந்தப் படம் வெளிவரும் முன்பே எம்.ஜி.ஆர் நடித்த அடிமைப் பெண் திரைப்படம் வெளியாகி, எஸ்.பி.பி. பாடிய ’ஆயிரம் நிலவே வா’ பாடல் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது.

1968 – 1969 ம் ஆண்டுகளில் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி மற்றும் ஜெய்சங்கர் படங்களில் சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, வாணி ஜெயராம் மற்றும் ஜானகி ஆகியோருடன் இணைந்து எம்.எஸ்.வி இசையில் தொடர்ச்சியாக பல பாடல்களைப் பாடியுள்ளார்.

அதன்பிறகு, 1970 – ம் ஆண்டுகளில் இளையராஜா, எஸ்.பி.பி மற்றும் ஜானகி ஆகியோர் இணைந்த வெற்றிக்கூட்டணி உருவானது.

கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ‘சங்கராபாணம்’ என்ற திரைப்படம் தான் எஸ்.பி.பியின் வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தியது. 1980 – ம் ஆண்டு, முழுக்க முழுக்க இசையை மட்டுமே அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த 10 பாடல்களில் 9 பாடல்களை எஸ்.பி.பி தான் பாடியிருந்தார். கர்நாடக சங்கீதத்தை முறையாகக் கற்காமல், இந்தப் படத்தில் சிறப்பாக பாடியிருந்தது எஸ்.பி.பிக்கு பெரும் புகழைச் சேர்த்தது. இந்தப் படத்தில்தான் எஸ்.பி.பி முதல் தேசிய விருதைப் பெற்றார்.

1981 ஆம் ஆண்டு பாலசந்தரின் இயக்கத்தில் லக்ஷ்மிகாந்த் பியாரேலால் இசையில் வெளியான ஏக் துஜே கேலி படம் அதிரி புதிரி ஹிட் அடித்தது. இந்த படத்தில் கமல்ஹாசனுக்காக எஸ்.பி.பி பாடிய அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகின.

தொடர்ந்து மைனே பியார் கியா படத்தில் சல்மான் கானுக்காக பாடிய பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. ’தில் தீவானா’ எனும் பாடலைப் பாடியதற்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார். அதேபோல், சாஜன் மற்றும் ஹம் ஆப்கே ஹைன் கோன் பட பாடல்களும் இந்தியாவில் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமாகின.

தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் சுமார் 40,000 பாடல்களுக்கும் மேல் பாடியுள்ளார் எஸ்.பி.பி.

இந்திய அரசு 2001 – ம் ஆண்டு எஸ்.பி.பி- க்கு பத்மஸ்ரீ விருதையும் 2011 – ல் பத்ம விபூஷன் விருதையும் வழங்கி சிறப்பித்துள்ளது.

இதுவரை, நாற்பதாயிரம் பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் , ஹிந்தி ஆகிய மொழிகளில் பாடி ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளார். தேசிய விருதை நான்கு மொழிகளுக்குப் பெற்ற ஒரே திரைப்படப் பின்னணிப் பாடகர் இவர் ஒருவரே என்பது குறிப்பிடத்தக்கது.

1981 – ம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருதைப் பெற்றுள்ளார். ஆந்திர அரசின் நந்தி விருதை 25 முறை பெற்று சாதனை படைத்துள்ளார்.

பின்னணிப் பாடகராக மிளிர்ந்ததோடு மட்டுமல்லாமல் 70 – க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்து அசத்தியுள்ளார் எஸ்.பி.பி. ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைப்பாளராகப் பின்னணி இசை அமைத்துள்ளார். கேளடி கண்மணி என்ற படத்தில் மண்ணில் இந்த காதல் என்ற பாடலை மூச்சு விடாமல் பாடி பிரமிக்க வைத்தார்.

1981- ம் ஆண்டு கன்னட இசையமைப்பாளர் உபேந்திர குமாருக்காக காலை 9 மணியிலிருந்து இரவு 9 மணிக்குள் 21 பாடல்களைப் பாடி சாதனை படைத்தார். தமிழ் மொழியில் ஒரே நாளில் 19 பாடல்களையும்; இந்தி மொழியில் 6 மணி நேரத்தில் 16 பாடல்களையும் எஸ்.பி.பி பாடி சாதனை படைத்துள்ளார்.

எஸ்.பி. பாலசுப்ரமணியம் சாவித்ரி என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவருக்கு பல்லவி என்ற மகளும் எஸ்.பி.பி சரண் என்ற மகனும் உள்ளனர்.

`முதல் மரியாதை’ படத்தில் சிவாஜிக்குப் பதிலாக நடித்திருக்க வேண்டியவர். பாரதிராஜா வற்புறுத்தியும் கடைசி நேரத்தில் எஸ்.பி.பி மறுத்துவிட்டார்

பாடுவது மட்டுமல்லாமல் அழகாக வரைவார் எஸ்.பி.பி. மேலும், புல்லாங்குழலும் இனிமையாக வாசிப்பார். அவரது அறையில் இரவு நேரங்களிலிருந்து புல்லாங்குழல் இசை கசியும்.

ரஷ்யா தவிர மற்ற நாடுகள் அனைத்துக்கும் சென்று வந்துள்ளார். கடைசி வரை ரஷ்யாவுக்குச் செல்ல முடியவில்லையே என்ற ஏக்கம் எஸ்.பி.பிக்கு இருந்துள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :