பொதுநலவாய மாநாட்டை சாட்டாக வைத்து அரசாங்கம் தனக்கு பிடிக்காத மற்றும் தனது போக்கோடு ஒத்துவராத அரசியல் வாதிகளை அவமானப்படுத்தும் முயற்சியில் அரசாங்க ஊடகங்கள் வாயிலாக தீவிரமாக இறங்கியுள்ளதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது என்று தெரிவித்துள்ளார் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான அஸாத் சாலி.
நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டை குழப்ப சில தீய சக்திகள் முயன்று வருவதாக அரச தொலைக்காட்சி ஊடகங்களில் வெளியிடப்படும் செய்திகளின் பின்னணியில் காட்டப்படும் காட்சிகளில் என்னுடைய படக்காட்சிகளும் சேர்க்கப்பட்டு ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.
இதற்கு முன்னரும் இது போன்ற செய்திகளோடு எனது காட்சிகளும் ஒளிபரப்பட்ட ஒரு பின்னணியில் தான் நான் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தேன். மீண்டும் அதுபோன்ற ஒரு சிக்கலில் என்னை மாட்டவைப்பதற்கான அரசின் ஒரு சூழ்ச்சியா தற்போதைய செய்திக் காட்சிகள் என்ற சந்தேகம் என்னுள் தோன்றியுள்ளது.
பொதுநலவாய மாநாட்டை நாங்கள் குழப்ப முயற்சிக்கவில்லை. அவ்வாறான ஒரு தேவையும் எமக்கு இல்லை.அது தானாகவே குழப்பத்தில் முடிவடையும்.அதில் எமக்கு எந்த சநதேகமும் இல்லை. இலங்கை பொதுநலவாய அமைப்பின் தலைமையை ஏற்றால், அந்த தலைமைத்துவ பதவிக்கான அடுத்த இரண்டு வருட காலத்தில் ஒன்றில் இலங்கை பொதுநலவாய அமைப்பில் இருந்து நீக்கப்படலாம்.
அல்லது இதுவரை பேணப்பட்டு வரும் அந்த அமைப்பின் உன்னதமான கொள்கைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் சாவுமணி அடிக்கப்படலாம்.இதில் ஏதாவது ஒன்று நிச்சயம் நடக்கும். ஏனெனில் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் விடயத்தில் இந்த அரசாங்கத்தின் போக்கிற்கும் பொதுநலவாய அமைப்பின் கொள்கைகளுக்கும்,கடப்பாடுகளுக்கும் இடையில் மலைக்கும் மடுவுக்கும் இடையிலான வித்தியாசம் காணப்படுகின்றது. ஜனநாயக மற்றும் மனித உரிமை விடயங்களை துச்சமென மதிக்கும் ஒரு அரசால் நிச்சயம் பொதுநலவாய அமைப்பு எதிர்ப்பார்க்கின்ற விழுமியங்களுடன் கூடிய தலைமைத்துவத்தை வழங்க முடியாது.இதனால்தான் இந்த பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்துவதென்பது அரசு தனக்குதானே விரித்துக் கொண்ட வலை என்று நாம் ஏற்கனவே வர்ணித்துள்ளோம்.
அரசாங்கம் இனிமேலாவது தனது பொறுப்பை உணர்ந்து சர்வதேச ரீதியாக அதற்குள்ள கடப்பாடுகளை மதித்து நடந்து கொள்ள வேண்டும் என்பதே சர்வதேச சமூகத்தின் எதிர்ப்பார்ப்பாகும்.அதனை வலியுறுத்தும் நோக்கிலேயே பல தலைவர்கள் இந்த மாநாட்டுக்கு வர முடிவு செய்துள்ளனர்.
இதை நன்கு உணர்ந்து உள்ளுரில் தனது அரசியல் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு எதிராக அரசு மேற்கொண்டு வரும் எல்லாவிதமான அடக்கு முறைகளையும் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என நாம் மீண்டும் வலியுறுத்திக் கொள்ள விரும்புகின்றோம்.
எந்த ஒரு விடயத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் நன்மைகளும் உள்ளன.தீமைகளும் உள்ளன.இந்த மாநாட்டை பொறுத்தமட்டில் இலங்கைக்கு தீமைகளே அதிகம்.குறிப்பாக மக்கள் இந்த மாநாட்டு செலவுகளை பொறுப்பேற்க வேண்டிய நிலை மாநாடு முடிந்த கையோடே ஏற்பட்டு விடும்.மக்கள் எதிர்நோக்க வேண்டியுள்ள தீமைகளை அவர்களுக்கு உணர்த்துவது எதிர்க்கட்சிகள் என்ற வகையில் எமது தலையாய கடமையாகும்.அதற்காக மாநாட்டை குழப்ப முயலுபவர்கள் என எம்மை அரச ஊடகங்கள் வாயிலாக சித்தரிக்க முயல்வது அரசின் வங்குரோத்து நிலையையே வெளிப்படுத்துகின்றது.குழப்பத்தில் முடிவடையவுள்ள ஒரு மாநாட்டை குழப்பும் முயற்சியில் எமது நேரத்தை வீணடிக்க வேண்டிய அவசியம் எமக்கில்லை.

0 comments :
Post a Comment