சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கைப் பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை அந்நாட்டின் உயர் நீதிமன்றம் இரத்துச் செய்துள்ளதாக இலங்கை வெளியுறவுத்துறை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா அறிவித்துள்ளமை மிகுந்த மகிழ்ச்சியையும் நிம்மதியையும் அளிக்கின்றது என காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அனோஜன் சிவராசாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட செய்தி அவரது குடும்பத்தினருக்கு மட்டுமன்றி, இலங்கையில் உள்ள அனைவருக்கும் பெரும் கவலையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், ஒக்டோபர் 13ஆம் திகதி வழங்கப்பட்ட மரண தண்டனைத் தீர்ப்பை சவூதி அரேபிய உயர் நீதிமன்றம் இரத்துச் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை பெரும் ஆறுதலை அளிக்கின்றது.
இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தொடர்ச்சியான இராஜதந்திர மற்றும் சட்டரீதியான முயற்சிகளின் விளைவாகவே இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுவது பாராட்டத்தக்கது. இந்த விவகாரத்தில் அனோஜனின் குடும்பத்தினரை நேரடியாகச் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், அவருக்கு நீதி கிடைக்க எம்மால் இயன்ற முயற்சிகளையும் மேற்கொண்டிருந்தோம்.
இந்த மனிதாபிமான விவகாரத்தில் இன, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் பலரும் ஒன்றிணைந்து குரல் கொடுத்தமை இலங்கை மக்களின் ஒற்றுமையையும் மனிதநேயத்தையும் வெளிப்படுத்துகின்றது. குறிப்பாக, அனோஜன் சிவராசாவுக்கு ஆதரவாகத் துணிச்சலுடன் குரல்கொடுத்த முஸ்லிம் அரசியல் மற்றும் சமூகத் தலைவர்கள், ஏனைய சமூகங்களைச் சேர்ந்த சகோதரர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைவரினதும் பங்களிப்பு நன்றியுடன் நினைவுகூரப்பட வேண்டியதாகும்.
மேலும், இந்த விவகாரத்தில் ஒத்துழைப்பை வழங்கிய சவூதி அரேபிய அரசாங்கத்திற்கும், தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்ட இலங்கை அரசாங்கத்திற்கும், சம்பந்தப்பட்ட தூதரக அதிகாரிகளுக்கும், சட்டத்தரணிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஒரு மனிதனின் உயிரைப் பாதுகாப்பதற்காக இன, மத வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட முடியும் என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் எடுத்துக்காட்டியுள்ளது. மனித உயிரின் பெறுமதியையும், நீதிக்காக ஒன்றிணைந்து குரல் கொடுப்பதன் முக்கியத்துவத்தையும் இந்நிகழ்வு உணர்த்துகின்றது.
எனினும், தீர்ப்பு இரத்துச் செய்யப்பட்டுள்ளமை தொடர்பான அறிவிப்பின் பின்னர் அனோஜன் சிவராசாவின் சட்டநிலை மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பான உத்தியோகபூர்வ தகவல்களும் தெளிவுபடுத்தப்பட வேண்டும். அவருக்கு முழுமையான நீதி கிடைத்து, அவர் பாதுகாப்பாகத் தனது குடும்பத்தினருடன் மீண்டும் இணையும் நாள் விரைவில் அமைய வேண்டும் எனப் பிரார்த்திக்கின்றேன் என காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் மேலும் தெரிவித்துள்ளார்

0 comments :
Post a Comment