தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களுக்கிடையில் நடைபெற்ற ‘அறிவுக் களஞ்சியம்’ (Arivuk Kalanjiyam) அறிவுசார் போட்டித் தொடரின் இறுதிச் சுற்றில், கலை மற்றும் கலாசார பீட மாணவர்கள் சம்பியன் மற்றும் இரண்டாம் இடங்களைப் பெற்று பெருமைமிகு சாதனையை நிலைநாட்டியுள்ளனர்.
கடந்த ஒக்டோபர் 14ஆம் திகதி தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், பல்கலைக்கழகத்தின் பல்வேறு பீடங்களைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.
இப்போட்டியில் கலை மற்றும் கலாசார பீடத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய மாணவர்கள் சிறப்பான அறிவாற்றலையும் போட்டித் திறனையும் வெளிப்படுத்தி முதலிரு இடங்களையும் கைப்பற்றினர்.
இதன்படி, சம்பியன் பட்டத்தை வென்ற அணிக்கு 20,000 ரூபாய் பணப்பரிசும், இரண்டாம் இடத்தைப் பெற்ற அணிக்கு 10,000 ரூபாய் பணப்பரிசும் வழங்கப்பட்டன. ஒரே பீடத்தைச் சேர்ந்த மாணவர்கள் முதலிரு இடங்களையும் பெற்றுக்கொண்டமை, அப்பீடத்தின் கல்விசார் மற்றும் அறிவுசார் செயற்பாடுகளுக்குக் கிடைத்த குறிப்பிடத்தக்க அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.
இதேவேளை, போட்டித் தொடரின் முழுவதும் சிறப்பான திறமையை வெளிப்படுத்திய கலை மற்றும் கலாசார பீடத்தைச் சேர்ந்த செல்வி பி.எம். ஜோவிட்டா அஸ்வினி, ‘தொடரின் சிறந்த போட்டியாளர்’ (Best Performer of the Series) என்ற சிறப்பு விருதைப் பெற்றுக்கொண்டார். இதற்காக அவருக்கு 5,000 ரூபாய் பணப்பரிசும் வழங்கப்பட்டது.
இந்த விருது, அவரது அறிவாற்றல், போட்டிகளில் வெளிப்படுத்திய திறமை மற்றும் தொடர்ச்சியான சிறப்பான பங்களிப்பை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளது.
‘அறிவுக் களஞ்சியம்’ போன்ற அறிவுசார் போட்டிகள் பல்கலைக்கழக மாணவர்களின் பொது அறிவை விரிவுபடுத்துவதுடன், அவர்களிடையே ஆரோக்கியமான போட்டி மனப்பான்மை, சிந்தனைத் திறன், தன்னம்பிக்கை மற்றும் குழு ஒத்துழைப்பு ஆகியவற்றையும் மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றன. மேலும், பல்வேறு பீடங்களைச் சேர்ந்த மாணவர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்துவதற்கும், பரஸ்பர அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதற்கும் இத்தகைய நிகழ்வுகள் சிறந்த களமாக அமைகின்றன.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின் மாணவர் ஆராய்ச்சி மன்றம் (Students’ Research Forum – SRF), இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
கலை மற்றும் கலாசார பீட மாணவர்களின் இந்த வெற்றியானது, பீடத்தின் மாணவர் திறன்கள் மற்றும் அறிவுசார் வளர்ச்சியைப் பிரதிபலிக்கும் முக்கியமான சாதனையாக அமைந்துள்ளதுடன், எதிர்காலத்தில் பல்கலைக்கழக மட்டத்திலான போட்டிகளில் மேலும் பல வெற்றிகளைப் பெறுவதற்கான ஊக்கத்தையும் வழங்கியுள்ளது.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கலாசார பீடத்திற்கு இந்த வெற்றியைப் பெற்றுத்தந்த மாணவர்களுக்கும், தொடரின் சிறந்த போட்டியாளராகத் தெரிவான செல்வி பி.எம். ஜோவிட்டா அஸ்வினி அவர்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் தெரிவிக்கப்படுகின்றன.

0 comments :
Post a Comment