பாறுக் ஷிஹான்-
சமூக வலைத்தளப் பதிவு தொடர்பாக சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்படக்கூடும் என்ற அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த இளைஞன் அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கி, அவரது உயிரைக் காப்பாற்ற முன்வருமாறு பெரியநீலாவணை ஸ்ரீ மகாவிஷ்ணு தேவஸ்தானத்தின் பிரதம குரு சிவசரி பத்மநிலோஜன் குருக்கள் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அனோஜனின் உயிரைக் காப்பாற்றும் நோக்கில் வெளியிட்டுள்ள விசேட உரையில், தமிழ் – முஸ்லிம் சமூகத் தலைவர்கள், இஸ்லாமிய மதத் தலைவர்கள் மற்றும் ஆன்மீகப் பெரியோர்கள் இவ்விவகாரத்தில் மனிதாபிமான அடிப்படையில் தலையிட்டு, உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
வறுமை மற்றும் குடும்பச் சுமை காரணமாகத் தொழில் தேடி சவுதி அரேபியா சென்ற அனோஜன், சமூக வலைத்தளத்தில் உணர்ச்சிவசப்பட்டு வெளியிட்ட கருத்து தொடர்பாக ஏற்கனவே ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், மேல்முறையீட்டின் காரணமாக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படக்கூடும் என்ற செய்திகள் அவரது குடும்பத்தினரிடையேயும் பிராந்திய மக்கள் மத்தியிலும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன.
மன்னிப்பே மனிதநேயத்தின் உயர்ந்த பண்பு!
இச்சம்பவம் தொடர்பாகத் தனது சமூகம் மற்றும் சமயம் சார்பில் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்த சிவசரி பத்மநிலோஜன் குருக்கள், தவறு செய்த ஒருவர் மனம் வருந்தி மன்னிப்புக் கோரும்போது, அவருக்கு மன்னிப்பு வழங்குவது உயர்ந்த மனிதநேயப் பண்பு எனக் குறிப்பிட்டுள்ளார்.
கடுமையான விமர்சனங்களையும் துன்புறுத்தல்களையும் எதிர்கொண்ட போதிலும் மன்னிக்கும் பண்பை வெளிப்படுத்திய இஸ்லாமிய இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வியல் முன்னுதாரணத்தை நினைவூட்டிய அவர், இஸ்லாம் சமாதானம், கருணை மற்றும் மன்னிப்பு ஆகியவற்றை வலியுறுத்தும் மார்க்கம் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் – முஸ்லிம் ஒற்றுமைக்கு மனிதாபிமான அழைப்பு!
யுத்த வடுக்களிலிருந்து மீண்டு, தமிழ் – முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கம், சமாதானம் மற்றும் சகவாழ்வைக் கட்டியெழுப்ப முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் இக்காலகட்டத்தில், இவ்வாறான சம்பவங்கள் இரு சமூகங்களுக்கிடையிலான உறவுகளில் பாதிப்பை ஏற்படுத்த இடமளிக்கக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எனவே, இலங்கையிலுள்ள அனைத்து இஸ்லாமிய மக்களும், மதத் தலைவர்களும், ஆன்மீகப் பெரியோர்களும் ஒன்றிணைந்து இவ்விவகாரத்தில் தார்மீக ரீதியில் தலையிட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன், சவுதி அரேபிய அரசாங்கத்துடனும் இலங்கை அரசாங்கத்துடனும் உரிய தொடர்புகளை ஏற்படுத்தி, பொதுமன்னிப்பைப் பெற்றுக்கொடுத்து அனோஜனை விடுவித்து, தாய்நாட்டிற்கு அழைத்து வந்து அவரது குடும்பத்தினருடன் மீண்டும் இணைப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் சிவசரி பத்மநிலோஜன் குருக்கள் தமது உரையில் உருக்கமாக வலியுறுத்தியுள்ளார்.
ஒரு இந்து மதக் குருவாக, மனித உயிரின் மதிப்பையும் மன்னிப்பின் மகத்துவத்தையும் முன்னிறுத்தி அவர் விடுத்துள்ள இந்த வேண்டுகோள், அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்கான மனிதாபிமான முயற்சிகளில் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைக்கிறது.

0 comments :
Post a Comment