டிஜிட்டல் மாற்றத்தின் புதிய பரிமாணங்களை ஆராய்ந்த தென்கிழக்குப் பல்கலைக்கழக முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடத்தின் 15ஆவது சர்வதேச ஆய்வு மாநாடு!



“டிஜிட்டல் மாற்றத்தில் வணிகத்தை மறுவடிவமைத்தல்” என்ற தொனிப்பொருளில் சர்வதேச ஆய்வாளர்கள் சங்கமம் – 60க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளில் 44 சிறந்த ஆய்வுகள் தெரிவு

எம்.வை. அமீர்-
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடம் ஏற்பாடு செய்திருந்த 15ஆவது வருடாந்த சர்வதேச ஆய்வு மாநாடு (15th Annual International Research Conference – AIRC 2026), 2026.11.17ஆம் திகதி பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பவியல் பீட கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

“Reimagining Business in the Digital Transformation: Shaping Management, Technology, Finance, and Human Capital” (டிஜிட்டல் மாற்றத்தில் வணிகத்தை மறுவடிவமைத்தல்: முகாமைத்துவம், தொழில்நுட்பம், நிதி மற்றும் மனித மூலதனத்தை மேம்படுத்துதல்) என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இம்மாநாடு, டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சியால் உலகளாவிய வணிகம், முகாமைத்துவம், நிதித்துறை மற்றும் மனித வள முகாமைத்துவம் ஆகியவற்றில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை ஆராய்வதற்கும், புதிய ஆய்வுக் கண்டுபிடிப்புகளைப் பகிர்ந்து கொள்வதற்கும் முக்கிய சர்வதேசக் களமாக அமைந்தது.

மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கலாநிதி ஏ. இல்முதீன் வரவேற்புரை நிகழ்த்தினார். இதன்போது பதில் உபவேந்தர், பீடாதிபதிகள், பேராசிரியர்கள், சிறப்பு விருந்தினர்கள், பிரதான சிறப்புரையாளர், ஆய்வாளர்கள், ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தவர்கள், அனுசரணையாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் வரவேற்ற அவர், டிஜிட்டல் யுகத்தில் செயற்கை நுண்ணறிவு (AI), தன்னியக்கத் தொழில்நுட்பம் (Automation) மற்றும் தரவு சார்ந்த புத்தாக்கங்கள் வணிகத்துறையிலும் சமூகத்திலும் ஏற்படுத்தி வரும் மாற்றங்களைச் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், சர்வதேச கல்விசார் ஒத்துழைப்புகள், அறிவுப் பரிமாற்றம் மற்றும் ஆய்வுத் தொடர்புகளை வலுப்படுத்துவதன் மூலம் சமகாலச் சவால்களுக்கு நிலையான தீர்வுகளை உருவாக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து, மாநாட்டின் தலைவரும் முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடத்தின் பீடாதிபதியுமான பேராசிரியர் கலாநிதி ஏ.எம்.எம். முஸ்தபா தலைமையுரை நிகழ்த்தினார்.

தனது உரையில், இம்மாநாட்டிற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆய்வாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களிடமிருந்து 60க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் கிடைக்கப்பெற்றதாகவும், அவற்றில் கடுமையான மதிப்பாய்வு நடைமுறைகளின் பின்னர் 44 சிறந்த ஆய்வுக் கட்டுரைகள் வெளியீட்டிற்காகத் தெரிவு செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.

ஆய்வின் தரம், கல்விசார் பங்களிப்பு மற்றும் சர்வதேச ஆய்வுத் தரங்களைப் பேணுவதில் மாநாட்டின் ஏற்பாட்டுக் குழு கொண்டுள்ள அர்ப்பணிப்பையும் அவர் எடுத்துரைத்தார்.

இதனைத் தொடர்ந்து மாநாட்டின் ஆய்வுச் சுருக்கத் தொகுப்பு நூல் (Book of Extended Abstracts) உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டது. ஆய்வாளர்களின் அறிவுசார் பங்களிப்புகளை ஆவணப்படுத்தும் இந்நூல், மாநாட்டின் முக்கிய வெளியீடாக அமைந்தது.

அதனைத் தொடர்ந்து தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதில் உபவேந்தர் பேராசிரியர் எம்.ஏ.எல். அப்துல் ஹலீம் உரையாற்றினார்.

தனது உரையில், டிஜிட்டல் மாற்றம் என்ற தொனிப்பொருள் இன்றைய உலகளாவிய பொருளாதார மற்றும் தொழில்நுட்பச் சூழலுக்கு மிகவும் பொருத்தமானது எனக் குறிப்பிட்ட அவர், கடந்த சில தசாப்தங்களாக டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மனித வாழ்க்கையிலும் பணிச் சூழலிலும் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.

அதேவேளை, தொழில்நுட்ப வளர்ச்சியுடன் அதிகரித்து வரும் எரிசக்தி மற்றும் மூலப்பொருட்களின் தேவை, மின்னணுக் கழிவுகளின் முகாமைத்துவம் (E-waste Management) போன்ற சவால்களையும் கவனத்தில் கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். இத்தகைய சவால்களை எதிர்கொள்வதற்கு பொருத்தமான கொள்கை மாற்றங்களும் ஆய்வு அடிப்படையிலான தீர்வுகளும் அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், உள்நாட்டு மற்றும் சர்வதேச ஆய்வாளர்கள் ஒரே தளத்தில் இணைந்து தமது கண்டுபிடிப்புகளைப் பகிர்ந்து கொள்வதற்கும், பல்கலைக்கழகங்களுக்கிடையிலான ஆய்வுக் கூட்டாண்மைகளை மேம்படுத்துவதற்கும் இம்மாநாடு சிறந்த வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.

மாநாட்டின் பிரதான சிறப்புரையை சர்வதேச அளவில் அறியப்பட்ட கல்வியாளரும் ஆய்வாளருமான பேராசிரியர் கலாநிதி ஆனந்த் நய்யார் (Prof. Dr. Anand Nayyar) நிகழ்நிலையூடாக வழங்கினார்.

தனது சிறப்புரையில், தொழில்நுட்பப் புரட்சியின் பரிணாம வளர்ச்சியை இயந்திரமயமாக்கல் மற்றும் வெகுஜன உற்பத்தி ஆகிய ஆரம்பக் கட்டங்களிலிருந்து செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), கிளவுட் கம்ப்யூட்டிங் (Cloud Computing), பெரிய தரவு (Big Data) மற்றும் குவாண்டம் கம்ப்யூட்டிங் (Quantum Computing) போன்ற நவீன தொழில்நுட்பங்கள் வரையில் விரிவாக எடுத்துரைத்தார்.

குறிப்பாக, செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டுடன் மட்டும் டிஜிட்டல் மாற்றம் மட்டுப்படுத்தப்படுவதில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், உற்பத்தி, விநியோகச் சங்கிலி (Supply Chain), தளவாட முகாமைத்துவம் (Logistics) மற்றும் வாடிக்கையாளர் சேவைகள் உள்ளிட்ட வணிகத்தின் அனைத்துத் துறைகளிலும் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைத்து மறுவடிவமைப்புச் செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

மேலும், கல்வி மற்றும் ஆய்வுப் பணிகளில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி எதிர்காலச் சவால்களுக்கு ஏற்ற புத்தாக்கத் தீர்வுகளை உருவாக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். அவரது சிறப்புரை, டிஜிட்டல் மாற்றத்தின் எதிர்காலப் போக்குகள் தொடர்பில் பங்கேற்பாளர்களுக்கு புதிய அறிவையும் சிந்தனைகளையும் வழங்கியது.

இதனைத் தொடர்ந்து பிரதம விருந்தினர், மாநாட்டுத் தலைவர் மற்றும் ஏற்பாட்டுக் குழுவினர் கௌரவிக்கப்பட்டனர். அத்துடன், முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடத்தில் சிரேஷ்ட பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்ற பேராசிரியர் ஏ. ஜௌபர் விசேடமாகப் பாராட்டி கௌரவிக்கப்பட்டார். மாநாட்டின் வெற்றிக்கு அனுசரணை வழங்கிய நிறுவனங்களுக்கும் இதன்போது நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டன.

தொடர்ந்து மாநாட்டின் செயலாளர் கே.எல். பாத்திமா நுப்லா நன்றியுரை நிகழ்த்தினார்.

இதன் பின்னர் பிற்பகல் 1.30 மணி முதல் 4.00 மணி வரை முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடத்தில் தொழில்நுட்ப ஆய்வு அமர்வுகள் நடைபெற்றன. இவ்வமர்வுகளில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தமது ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்ததுடன், துறைசார் நிபுணர்கள் மற்றும் ஏனைய ஆய்வாளர்களுடன் ஆக்கபூர்வமான கருத்துப் பரிமாற்றங்களிலும் ஈடுபட்டனர்.

இம்மாநாட்டின் ஏற்பாட்டுப் பணிகளில் மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கலாநிதி ஏ. இல்முதீன் உள்ளிட்ட ஏற்பாட்டுக் குழுவினர் முக்கிய பங்களிப்புகளை வழங்கினர்.

மாநாட்டின் செயலாளர்களாக கே.எல்.எப். நுப்லா மற்றும் எம்.ஏ.எப். ஜெல்சா ஆகியோரும், பொருளாளராக கலாநிதி ஏ.எல்.எம். அயூப்கானும் பணியாற்றினர்.

அதேவேளை, மாநாட்டின் ஆசிரியர் குழுவின் பிரதம ஆசிரியராக கலாநிதி எம்.பி.எம். இர்ஷாத் செயற்பட்டதுடன், பேராசிரியர் கலாநிதி ஏ. இல்முதீன், கலாநிதி ஏ.எல்.எம். அயூப்கான், கே.எல்.எப். நுப்லா எம்.ஏ.எப். ஜெல்சா, கலாநிதி எச்.எம். நிஜாம் மற்றும் திரு ஏ.எல். சரீபுதீன் ஆகியோர் ஆசிரியர் குழுவில் அங்கம் வகித்தனர்.

இந்நிகழ்வில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகளான பேராசிரியர் எம்.எம். பாஸில், கலாநிதி எம்.ஐ.எம். ஜெசில் உள்ளிட்டோர், பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்கள், பதிவாளர் எம்.ஐ. நௌபர், முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடத்தின் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியலாளர்கள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

பல்கலைக்கழக மட்டத்திலான ஆய்வுப் பணிகளை சர்வதேசத் தரத்திற்கு உயர்த்துதல், புதிய ஆய்வுச் சிந்தனைகளை ஊக்குவித்தல், கல்வியாளர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் இடையிலான சர்வதேசத் தொடர்புகளை வலுப்படுத்துதல் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தின் சவால்களுக்குப் பொருத்தமான தீர்வுகளை முன்வைத்தல் ஆகிய நோக்கங்களை முன்னிறுத்தி நடைபெற்ற இம்மாநாடு, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆய்வுப் பாரம்பரியத்தை மேலும் வலுப்படுத்தும் முக்கிய நிகழ்வாக அமைந்தது.

அறிவியல், தொழில்நுட்பம், வணிகம் மற்றும் முகாமைத்துவத் துறைகளில் புதிய சிந்தனைகளை உருவாக்குவதற்கும், எதிர்கால சர்வதேச ஆய்வுக் கூட்டாண்மைகளுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கும் AIRC 2026 மாநாடு சிறந்த தளமாகத் திகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.




















































































 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :