பாறுக் ஷிஹான்-
கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் டிஜிட்டல் தேவைகளைத் திறம்பட நிறைவேற்றும் நோக்கில் உருவாக்கப்பட்ட 'டிஜிட்டல் மற்றும் சுகாதார தகவல் பிரிவு' (Digital and Health Information Unit) நேற்று திங்கட்கிழமை (28) உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அவராலேயே இப் புதிய பிரிவு நாடா வெட்டித் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பதில் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல். பாறூக், தர முகாமைத்துவ வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.ஆர்.எம். அஸ்மி, கணக்காளர் யூ.எல். ஜவாஹிர், நிர்வாக உத்தியோகத்தர் ஏ. பௌமி அஸ்மின் உட்பட வைத்தியசாலையின் பல்வேறு பிரிவுகளையும் சேர்ந்த அரச உத்தியோகத்தர்கள், வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
இப் புதிய பிரிவின் திறப்பு விழாவைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த வைத்தியசாலை நிர்வாகத்தினர், இப் பிரிவின் ஊடாக வைத்தியசாலையின் டிஜிட்டல் சேவைகள் மற்றும் சுகாதாரத் தகவல் முகாமைத்துவ நடவடிக்கைகள் மேலும் துரிதப்படுத்தப்பட்டு வலுப்படுத்தப்படும் எனத் தெரிவித்தனர்.
அத்துடன், நவீன தகவல் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான சுகாதாரச் சேவைகளை நோயாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் மிக இலகுவாகவும் விரைவாகவும் வழங்குவதற்குக் கட்டமைப்பு ரீதியான பல மேலதிக நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகச் சுட்டிக்காட்டப்பட்டது.

0 comments :
Post a Comment