“ஹிஜாபை அகற்றச் சொல்வது பெண் தாதியர்களின் கண்ணியத்தை காயப்படுத்தும்!” – றவூப் ஹக்கீம்



கல்முனை வைத்தியசாலை விவகாரத்தில் அரசாங்கம் உடனடியாக தலையிட வேண்டும்
ல்முனை வடக்கு வைத்தியசாலையில் ஹிஜாப் அணிந்து கடமையாற்றும் பெண் தாதியர்களின் உடை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைக்கு அரசாங்கம் உடனடியாக நியாயமானதும் நடைமுறைக்கு ஏற்றதுமான தீர்வொன்றை வழங்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தியுள்ளார்.

நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், சமூக ஊடகங்களில் ஒருவரையொருவர் விமர்சிப்பதன் மூலமாகவோ, குற்றச்சாட்டுகளை முன்வைப்பதன் மூலமாகவோ இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது எனவும், சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரிகள், நிர்வாகத்தினர் மற்றும் அரசாங்கம் ஆகிய தரப்புகள் கலந்துரையாடி உரிய தீர்வை எட்ட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

முஸ்லிம் பெண்கள் தற்போது பல்வேறு தொழில்துறைகளில் முன்னேறி வருவதாகக் குறிப்பிட்ட அவர், குறிப்பாக ஆசிரியர், தாதியர் மற்றும் மருத்துவத்துறைகளில் அவர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.

ஹிஜாப் அணிந்து பணியாற்றும் பெண் மருத்துவர்கள் மற்றும் தாதியர்கள் தங்களது தொழில்முறை கடமைகளை சிறப்பாக நிறைவேற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“ஹிஜாப் அணிந்த நிலையில் காதுகள் மூடப்பட்டிருந்தாலும் ஸ்டெதஸ்கோப்பைப் பயன்படுத்தி நோயாளிகளை பரிசோதிப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை” என பெண் மருத்துவர்கள் தம்மிடம் தெரிவித்ததாகவும் றவூப் ஹக்கீம் கூறினார்.

ஒரு பெண் மருத்துவர் தம்மிடம், ஹிஜாப் அணிந்து காதுகளை மூடிய நிலையிலும் ஸ்டெதஸ்கோப்பைப் பயன்படுத்தி நோயாளிகளை முறையாகப் பரிசோதித்து நோயைக் கண்டறிய முடியும் எனத் தெரிவித்ததாகவும், அவ்வாறிருக்கையில் காதை வெளிப்படையாக வைத்திருக்க வேண்டும் என வலியுறுத்துவதன் அவசியம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
“தேவையற்ற சர்ச்சையை உருவாக்க வேண்டாம்”

சுகாதாரத்துறையில் பணியாற்றும் பெண் ஊழியர்களின் மத மற்றும் கலாசார உணர்வுகளை கருத்திற்கொண்டு, அவர்களின் தொழில்முறை கடமைகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் சீருடை தொடர்பான நடைமுறைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

ஒரு குறிப்பிட்ட வைத்தியசாலையில் மாத்திரம் இவ்வாறான கேள்விகள் எழுப்பப்படுவதற்கான காரணம் தொடர்பிலும் தெளிவு பெற வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக குறித்த அதிகாரி கடமையாற்றிய காலத்தில், முஸ்லிம் மக்கள் அதிகளவில் வசிக்கும் பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளில் ஹிஜாப் அணிந்து கடமையாற்றிய தாதியர்கள் தொடர்பில் இதுபோன்ற பிரச்சினைகள் எழுப்பப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும், கல்முனை வடக்கு வைத்தியசாலை தொடர்பில் மாத்திரம் இவ்வாறான விவகாரம் உருவாகியுள்ளமை தொடர்பில் தமக்கு கேள்விகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“பெண் தாதியர்களின் கண்ணியமும் பாதுகாக்கப்பட வேண்டும்”

தாதியர்களின் சீருடை தொடர்பில் எடுக்கப்படும் எந்தவொரு நிர்வாகத் தீர்மானமும் தொழில்முறைத் தேவைகள், நோயாளிகளின் பாதுகாப்பு, சுகாதார நடைமுறைகள் மற்றும் பணியாற்றும் பெண்களின் தனிப்பட்ட கண்ணியம் ஆகிய அனைத்தையும் கருத்திற்கொண்டே அமைய வேண்டும் என றவூப் ஹக்கீம் வலியுறுத்தினார்.

“பெண் தாதியர்களிடம் அவர்களின் உடையை அகற்றிவிட்டு வருமாறு கூறுவது, அவர்களை அவமானப்படுத்தும் அல்லது நிர்வாணப்படுத்தும் உணர்வை ஏற்படுத்தக்கூடியதாக சமூகத்தில் பார்க்கப்படுகிறது” என அவர் தெரிவித்தார்.

எனவே, சீருடை தொடர்பான நடைமுறைகளைத் தீர்மானிக்கும்போது சம்பந்தப்பட்ட பெண் ஊழியர்களின் மத நம்பிக்கைகள், உணர்வுகள் மற்றும் கண்ணியம் ஆகியவற்றையும் உரிய முறையில் கவனத்தில் கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
சமூகங்களுக்கிடையில் புதிய முரண்பாடு வேண்டாம்

இந்த விவகாரம் முஸ்லிம் மற்றும் தமிழ் சமூகங்களுக்கு இடையில் புதிய முரண்பாடுகளை உருவாக்கும் வகையில் பயன்படுத்தப்படக்கூடாது எனவும் றவூப் ஹக்கீம் வலியுறுத்தினார்.

கல்முனை பிரதேசத்தில் ஏற்கனவே சில விடயங்கள் சமூகங்களுக்கிடையில் உணர்வுபூர்வமான நிலைமைகளை உருவாக்கியுள்ள நிலையில், இவ்வாறான விவகாரங்களில் அனைத்து தரப்பினரும் மிகுந்த பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் ஒருவரையொருவர் குற்றம்சாட்டுவதற்குப் பதிலாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சுகாதாரத்துறை நிர்வாகம் மற்றும் அரசாங்கம் ஆகிய தரப்புகள் நேரடியாக கலந்துரையாடி ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றை உருவாக்குவதே சிறந்த வழி எனவும் அவர் கூறினார்.
அரசாங்கம் உடனடியாக தலையிட வேண்டும்

சுகாதார அமைச்சும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, பெண் தாதியர்களுக்கு அநீதி ஏற்படாத வகையில் நியாயமானதும் நடைமுறைக்கு ஏற்றதுமான தீர்வொன்றை வழங்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கோரிக்கை விடுத்தார்.

முஸ்லிம் பெண் தாதியர்கள் ஹிஜாப் அணிந்துகொண்டு தங்களது தொழில்முறை கடமைகளை திறம்பட நிறைவேற்றுவதற்கான சாத்தியமான நடைமுறைகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆராய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

ஒருபுறம் நோயாளிகளின் பாதுகாப்பும் சுகாதார சேவையின் தரமும் உறுதி செய்யப்பட வேண்டிய நிலையில், மறுபுறம் பணியாற்றும் பெண்களின் மத, கலாசார மற்றும் தனிப்பட்ட கண்ணியமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே சமநிலையான அணுகுமுறையாக அமையும் என அவர் தெரிவித்தார்.

“தேவையற்ற முரண்பாடுகளை உருவாக்கும் வகையிலான சித்து விளையாட்டுகளுக்கு இடமளிக்காமல், அரசாங்கம் விரைவாக தலையிட்டு தீர்வை வழங்க வேண்டும்” என றவூப் ஹக்கீம் மேலும் வலியுறுத்தினார்.

இவ்விவகாரம் தொடர்பில் உரிய அதிகாரிகளிடம் அழுத்தங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், பெண் தாதியர்களுக்கு அநீதி ஏற்படாத வகையில் நியாயமான தீர்வு கிடைக்கும் என தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

மத நம்பிக்கையையும் தொழில்முறை கடமையையும் ஒன்றுக்கொன்று முரணானவையாகக் காட்டாமல், இரண்டையும் மதிக்கும் நடைமுறைத் தீர்வொன்றை உருவாக்குவதே இந்த விவகாரத்துக்கு நீடித்த தீர்வாக அமையும் என்பதே சமூக மட்டத்தில் முன்வைக்கப்படும் முக்கிய எதிர்பார்ப்பாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :