நாவிதன்வெளி பிரதேசத்தின் மத்தியமுகாம் பிரதான வீதியில் நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைக்காக நிர்மாணிக்கப்பட்டு வரும் குடிநீர் தாங்கியின் பணிகள் நீண்டகாலமாக மந்தகதியில் முன்னெடுக்கப்பட்ட நிலையில், தற்போது முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளமை கவலையளிப்பதாக ஐக்கிய மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினருமான எம்.ஏ. நளீர் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று (17) கருத்து வெளியிட்ட அவர் மேலும் தெரிவித்ததாவது:
நாவிதன்வெளி பிரதேச மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் மத்தியமுகாம் பிரதான வீதியில் குடிநீர் தாங்கி அமைக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சராக ஏ.எல்.எம். அதாஉல்லா பதவி வகித்த காலத்தில் இதற்கான அடிக்கல் நாட்டப்பட்டு நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
பின்னர் முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் காலத்தில் இதற்கான நிதியொதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், அவை எதிர்பார்த்த வேகத்தில் இடம்பெறவில்லை. கடந்த கால அரசாங்கங்களிலும் மந்தகதியில் இடம்பெற்ற இந்நிர்மாணப் பணிகள் தற்போதைய அரசாங்கத்தின் காலத்திலும் உரிய வேகத்தில் முன்னெடுக்கப்படவில்லை.
இந்நிலையில், கடந்த மாதம் 06ஆம் திகதியுடன் குறித்த குடிநீர் தாங்கியின் நிர்மாணப் பணிகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் குறித்த வேலைத்திட்டத்தை 2026 ஒக்டோபர் 31ஆம் திகதிக்குள் நிறைவு செய்ய வேண்டியிருந்த போதிலும், தற்போதைய நிலைமையை கருத்திற்கொள்ளும்போது அந்த காலக்கெடுவிற்குள் பணிகளை நிறைவு செய்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே காணப்படுகிறது.
அரசாங்கத்திற்கும் ஒப்பந்தக்காரர்களுக்கும் இடையில் நிலவும் நிதி வழங்கல் மற்றும் நிர்வாக ரீதியான பிரச்சினைகளே நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தப்பட்டமைக்கான காரணமாகக் கூறப்படுகிறது. ஆனால், இவ்வாறான நிர்வாக அல்லது நிதிப் பிரச்சினைகளின் சுமையை அப்பாவி பொதுமக்கள் மீது சுமத்த முடியாது.
நாவிதன்வெளி ஒரு குடியேற்றப் பிரதேசமாகும். இப்பிரதேச மக்கள் நீண்டகாலமாக குடிநீர் தொடர்பான பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். குடிநீர் தாங்கி நிர்மாணிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில், இப்பிரதேச மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு ஓரளவு தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது.
எனவே, தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள நிர்மாணப் பணிகளை மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
அத்துடன், ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்க வேண்டிய கொடுப்பனவுகள், நிர்வாக ரீதியான தடைகள் உள்ளிட்ட பிரச்சினைகள் இருப்பின் அவற்றை விரைந்து தீர்த்து, மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த முக்கியமான திட்டத்தை காலதாமதமின்றி நிறைவு செய்ய வேண்டும்.
“அரசாங்கங்கள் மாறினாலும், மக்களின் அடிப்படைத் தேவைகள் மாறுவதில்லை. குடிநீர் என்பது அரசியல் விடயமல்ல; அது மக்களின் அடிப்படை உரிமை. எனவே, இந்தத் திட்டத்தை மேலும் காலதாமதப்படுத்தாமல் உடனடியாக நிறைவு செய்து நாவிதன்வெளி மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு வழங்க வேண்டும்” எனவும் எம்.ஏ. நளீர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

0 comments :
Post a Comment