தமிழ் பேசும் கட்சிகளின் ஒன்றிணைவு சிறுபான்மை மக்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வரலாற்றுச் சந்தர்ப்பம் – சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி முபிஸால் அபூபக்கர்




எம்.என்.எம். அப்ராஸ்-
மிழ் பேசும் ஆறு அரசியல் கட்சிகள் பொதுவான அரசியல் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் ஒன்றிணைந்து செயற்பட முன்வந்திருப்பது, இலங்கையின் தமிழ் பேசும் சிறுபான்மை மக்களின் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் இருந்து வரும் அரசியல், சமூக, பொருளாதார மற்றும் அரசியலமைப்புச் சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் முன்னெடுப்பாகும் என்று பேராதனைப் பல்கலைக்கழக மெய்யியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளரும் சமூக செயற்பாட்டாளருமான கலாநிதி முபிஸால் அபூபக்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கைத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள் மற்றும் முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் ஒரே மேடையில் அமர்ந்து, பொதுவான கோரிக்கைகள் மற்றும் பகிரப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் இணைந்து செயற்பட முன்வந்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கதும், எதிர்கால அரசியல் பயணத்திற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடியதுமான ஒரு முன்னேற்றமாகும் என்றார்.

இந்த ஒன்றிணைவு எந்தவொரு இனத்திற்கோ, மதத்திற்கோ அல்லது சமூகத்திற்கோ எதிரான அரசியல் முயற்சியாகக் கருதப்படக் கூடாது. மாறாக, ஜனநாயக அடிப்படையில் சிறுபான்மை மக்களின் அரசியல் உரிமைகள், சமத்துவம், நீதி மற்றும் கண்ணியமான வாழ்வை உறுதிப்படுத்தும் பொறுப்புணர்வுமிக்க அரசியல் அணுகுமுறையாகவே இதைப் பார்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கடந்த பல தசாப்தங்களாக சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக பல்வேறு அரசியல் பேச்சுவார்த்தைகள், இணக்கப்பாட்டு முயற்சிகள் மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், அவற்றில் பெரும்பாலானவை இடைநடுவில் கைவிடப்பட்டதோ அல்லது நடைமுறைப்படுத்தப்படாமல் போனதோ காரணமாக தமிழ் பேசும் மக்களிடையே ஆழமான நம்பிக்கையின்மை உருவாகியுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், தற்போதைய இந்த அரசியல் ஒன்றிணைவு மற்றும் தொடர்ச்சியான சந்திப்புகள், தமிழ் பேசும் மக்களிடையே புதிய நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளன. இந்த அரசியல் உரையாடல் எந்தவித இடையூறும் இன்றி தொடர்ச்சியாகவும், நேர்மறையான அணுகுமுறையுடனும் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், சிறுபான்மை மக்களின் நீண்டகால அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்கான நிலையான தீர்வுகள் ஜனநாயக உரையாடல், பரஸ்பர புரிந்துணர்வு, அரசியல் ஒத்துழைப்பு மற்றும் அரசியலமைப்பிற்கு உட்பட்ட பேச்சுவார்த்தைகள் மூலமே சாத்தியமாகும். எனவே, இவ்வாறான கூட்டு அரசியல் முயற்சிகளுக்கு அரசியல் கட்சிகள் மட்டுமன்றி, சிவில் சமூக அமைப்புகள், கல்வியாளர்கள், மதத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஆக்கபூர்வமான ஆதரவை வழங்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

தமிழ் பேசும் மக்களின் அரசியல் ஒற்றுமை என்பது வெறும் தேர்தல் கூட்டணியாக மட்டுமல்லாமல், அவர்களது ஜனநாயக உரிமைகள், சமத்துவம், நீதிக்கான கோரிக்கைகள் மற்றும் அரசியல் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்தும் உறுதியான அடித்தளமாக அமைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறான அரசியல் ஒத்துழைப்பு சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை முன்னெடுப்பதோடு மட்டுமல்லாமல், நாட்டின் தேசிய நல்லிணக்கம், ஜனநாயகப் பண்பாடு, பரஸ்பர நம்பிக்கை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் சூழலை வலுப்படுத்தும் நேர்மறையான முன்னேற்றமாகவும் அமையும் என்று கலாநிதி முபிஸால் அபூபக்கர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :