ஸ்ரீசங்கர் நற்பணி மன்றத்தின் தலைவரும், அமரர் ஸ்ரீசங்கரின் பிரதான சிஷ்யருமான வீ. சண்முகராஜாவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் பல்வேறு கலை, சமூக மற்றும் ஊடகத் துறைகளைச் சேர்ந்த பிரமுகர்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்வின் பிரதம அதிதியாக ஹாஷிம் உமர் பவுண்டேஷனின் நிறுவனர் ஹாஷிம் உமர் கலந்து கொண்டார். அவர் நினைவேந்தல் விளக்கேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்ததுடன், நிகழ்வில் பங்கேற்ற நடனக் கலைஞர்களுக்கு பாராட்டு பரிசில்களையும் வழங்கி கௌரவித்தார்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட ஊடகவியலாளரும் புதிய அலை கலை வட்டத்தின் நிறுவனருமான ராதாமேத்தா, தெலுங்கு காங்கிரஸ் தலைவர் எம். அன்பழகன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டனர். மேலும் கலைஞர்கள், கலை ஆர்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் ஸ்ரீசங்கரின் அபிமானிகள் எனப் பலரும் பங்கேற்று அவருடைய கலைப் பணிகளையும் சமூகப் பங்களிப்புகளையும் நினைவுகூர்ந்தனர்.
நிகழ்வின் போது அமரர் கலைவேந்தன் ஸ்ரீசங்கரின் கலைப் பயணம், இலங்கைத் தமிழ் மேடை நாடக வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய அர்ப்பணிப்பு, திரைப்படத் துறையில் அவர் பதித்த முத்திரை மற்றும் பல தலைமுறைக் கலைஞர்களை உருவாக்கிய அவரது சேவைகள் குறித்து உரையாற்றிய பேச்சாளர்கள் விரிவாக எடுத்துரைத்தனர்.
தமிழ் கலை மற்றும் கலாசார வளர்ச்சிக்காக வாழ்நாள் முழுவதும் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய கலைவேந்தன் ஸ்ரீசங்கரின் சேவைகள் என்றும் அழியாதவை என்றும், அவரது கலைப் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருப்பதாகவும் நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தினர்.
உணர்வுபூர்வமான அஞ்சலி நிகழ்வாக அமைந்த இந்நிகழ்வில் கலை நிகழ்ச்சிகள், நினைவுரைகள் மற்றும் கௌரவிப்புகளும் இடம்பெற்றதுடன், அமரர் ஸ்ரீசங்கரின் நினைவுகள் மீள்பார்க்கப்பட்டன.
நிகழ்வில் ஹாஷிம் உமர், ராதாமேத்தா, எம். அன்பழகன் உள்ளிட்ட பிரமுகர்களுடன் கலைஞர்கள் மற்றும் கலை அபிமானிகள் பலரும் கலந்துகொண்டிருந்ததை நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் காணலாம்.






0 comments :
Post a Comment