இது தொடர்பான தீர்மானம், சாய்ந்தமருது மறுமலர்ச்சி மன்றத்தின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த கூட்டம் (13) இரவு, அதன் தலைவர் மற்றும் ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர் எம்.எம். அப்துல் ஜப்பார் தலைமையில் நடைபெற்றது.
சாய்ந்தமருது நகர சபை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் சட்ட ரீதியானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதுடன், இரண்டு மாத காலத்திற்குள் எல்லை நிர்ணயத்தை மேற்கொண்டு அதனை வர்த்தமானியில் வெளியிடவும், பின்னர் தேர்தலை நடத்தவும் உத்தரவிட்டுள்ளது.
இதனடிப்படையில், உரிய காலத்திற்குள் நகர சபை ஸ்தாபனப் பணிகளை நிறைவேற்றுதல் அவசியமாக இருப்பதாகவும் மன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
உடனடி நிர்வாக மற்றும் வள தேவைகள்
சாய்ந்தமருது நகர சபையை செயல்படுத்துவதற்காக கட்டிட வசதிகள், ஆளணி, நிர்வாக அமைப்பு மற்றும் சேவை ஆரம்ப நடவடிக்கைகள் ஆகியவற்றை விரைவாக முன்னெடுக்க வேண்டிய தேவை உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் மத்திய அரசின் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு மற்றும் கிழக்கு மாகாண சபை ஆகியவற்றின் பொறுப்பில் உள்ளன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் துரிதப்படுத்துவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் வழிகாட்டல் அவசியம் என மன்றம் வலியுறுத்தியுள்ளது.
அதற்காக, ஜனாதிபதியின் நெருங்கிய அரசியல் தொடர்புடையவராகவும், மண்ணின் பிரதிநிதி பாராளுமன்ற உறுப்பினராகவும் திகழும் அபூபக்கர் ஆதம்பாவாவின் முழுமையான பங்களிப்பு முக்கியமானது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த விடயத்தில் சமூக ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்தும் வகையில், சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் இடைக்கால நிர்வாக சபை முன்னிலை வகித்து அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும் என தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நகர சபை தேர்தல், சபை முறையாக ஸ்தாபிக்கப்பட்ட பின்னரே நடைபெறும் என்பதால், தற்போதைய நிலையில் தேர்தலை முன்னிலைப்படுத்தி அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டிய அவசரம் இல்லை எனவும் மன்றம் தெரிவித்துள்ளது.
முதலில் சபையை சட்டபூர்வமாகவும் நிர்வாக ரீதியாகவும் வெற்றிகரமாக ஸ்தாபிப்பதற்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் அனைத்து தரப்பினருக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

0 comments :
Post a Comment