தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 12ஆவது சர்வதேச கலை ஆய்வரங்கு (SEUIARS – 2026)



தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கலாசாரப் பீடம் ஏற்பாடு செய்திருந்த 12ஆவது சர்வதேச கலை ஆய்வரங்கு (SEUIARS – 2026) 2026.03.31 ஆம் திகதி பீடத்தின் கலைத் தியேட்டரில் இடம்பெற்றது.

“Transformation through Digitalization: Pathways to a Connected Future” (டிஜிட்டல் மாற்றம் மூலம் இணைந்த எதிர்காலம்) என்ற தலைப்பில் நடைபெற்ற இவ்வாய்வரங்கு, நவீன டிஜிட்டல் மாற்றங்களையும் கலை ஆராய்ச்சிகளையும் இணைக்கும் சர்வதேச அறிவியல் மேடையாக அமைந்தது.

நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் கலாநிதி சி.எம்.எம். மன்சூர் தனது வரவேற்புரையில், இவ்வாய்வரங்கில் தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் இருந்து அறிஞர்கள், ஆய்வாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் இணைந்து கருத்து பரிமாற்றத்தில் ஈடுபடுகின்றனர் எனக் குறிப்பிட்டார். மேலும், இவ்வாண்டு ஆய்வரங்கிற்காக மொத்தம் 160 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்ததுடன், அவற்றில் 110 உயர்தர ஆய்வுகள் மதிப்பாய்வின் பின்னர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்நிகழ்வு அறிவியல் கலந்துரையாடலுக்கான முக்கிய தளமாக மட்டுமின்றி, சமூக, கலாசாரம் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களை விமர்சன ரீதியாக ஆராயும் வாய்ப்பையும் வழங்குகின்றது என அவர் கூறினார்.

தொடர்ந்து கலை மற்றும் கலாசாரப் பீடத்தின் பீடாதிபதியும் ஆய்வரங்கின் தலைவருமான பேராசிரியர் கலாநிதி எம்.எம். பாஸில் அவர்கள் உரையாற்றினார். தனது உரையில், கடந்த ஒரு தசாப்தமாக இவ்வாய்வரங்கு கல்விசார் பரிமாற்றத்திற்கான முக்கிய மேடையாக வளர்ச்சியடைந்துள்ளதாகவும், இது ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களை ஒருங்கிணைக்கும் அறிவியல் தளமாக திகழ்கின்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், “டிஜிட்டல் மாற்றம் இன்று தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. கல்வி, தொடர்பியல், நிர்வாகம், வர்த்தகம் மற்றும் கலாசாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் அது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது” என அவர் தெரிவித்தார். குறிப்பாக, மனிதவியல் மற்றும் சமூக அறிவியல் துறைகளில் அறிவு உருவாக்கம், பரிமாற்றம் மற்றும் பயன்பாடு ஆகியவை டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் மாற்றமடைந்து வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.

தென்கிழக்கு பல்கலைக்கழகம் டிஜிட்டல் மாற்றத்தை முன்னெடுத்து வருவதாகவும், மாணவர் பதிவு முறை, பரீட்சை முடிவுகள் செயலாக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கல் ஆகியவை முழுமையாக டிஜிட்டல் முறைக்கு மாற்றும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். மேலும், கடந்த ஆறு ஆண்டுகளில் மெய்நிகர் கற்றல் சூழல் (VLE) முறையில் கற்பித்தல் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கலை மற்றும் கலாசாரப் பீடம் தகவல் தொழில்நுட்பத்தை கல்வியுடன் ஒருங்கிணைக்கும் முன்னோடியான பீடமாக திகழ்கின்றதாகவும், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப (ICT) பட்டப்படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டு மாணவர்கள் அதிகளவில் பயன் பெறுகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், புவியியல் தகவல் முறை (GIS), தொலை உணர்தல் (Remote Sensing), கல்வித் தொழில்நுட்பம் போன்ற பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

பல்துறை மற்றும் இடைத்துறை ஆய்வுகள் மூலம் மாணவர்களும் பேராசிரியர்களும் தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் இணைந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். குறிப்பாக, COVID-19 தொடர்பான சமூக ஊடக பயன்பாடு மற்றும் கல்வி தொடர்பான ஆய்வுகள் சர்வதேச இதழ்களில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், புவியியல் துறையின் கீழ் நவீன ட்ரோன் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டு, நாட்டின் பல பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மாணவர்களின் குறும்பட தயாரிப்பு, டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கம் போன்ற செயல்பாடுகளும் பீடத்தின் டிஜிட்டல் முன்னேற்றத்தை வெளிப்படுத்துகின்றன எனவும் அவர் கூறினார்.

இந்த ஆய்வரங்கு வெறும் கல்விசார் நிகழ்வாக மட்டுமின்றி, சிந்தனை, புத்தாக்கம் மற்றும் ஆராய்ச்சி வளர்ச்சிக்கான தளமாக அமைகின்றது எனவும், டிஜிட்டல் காலத்திற்கு ஏற்ப கல்வியாளர்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைடீன் அவர்கள் தனது பிரதான உரையில், இவ்வாய்வரங்கம் பல்கலைக்கழகத்தின் நீண்டகால கல்வி பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் முக்கியமான அறிவியல் மேடையாக உருவெடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், உள்ளூர் மற்றும் சர்வதேச ஆய்வாளர்கள் ஒன்று கூடுவதன் மூலம் அறிவு பரிமாற்றம் மற்றும் கல்விசார் ஒத்துழைப்புகள் வலுப்பெறுகின்றன எனவும் தெரிவித்தார்.

அவர் மேலும், டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் கல்வி, கலாசாரம், தொடர்பு உள்ளிட்ட அனைத்து துறைகளையும் மாற்றி அமைத்து வரும் காலத்தில், இவ்வாண்டு ஆய்வரங்கின் கருப்பொருள் மிகவும் பொருத்தமானதாக இருப்பதாகக் குறிப்பிட்டார். அதேவேளை, டிஜிட்டல் முன்னேற்றத்துடன் மனித மதிப்புகள் மற்றும் கலாசார அடையாளங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

ஆராய்ச்சிகள் வெறும் பதவி உயர்விற்கான வெளியீடுகளாக மட்டும் அமையாமல், சமூகத்தின் நிஜ தேவைகளை தீர்க்கும் வகையில் அமைய வேண்டும் என அவர் வலியுறுத்தினார். உள்ளூர் சவால்கள், கலாசாரங்கள் மற்றும் சமூகப் பிரச்சினைகளை மையமாகக் கொண்ட ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.

மேலும், பல்துறை அணுகுமுறைகள், சமூக இணைப்பு, உள்ளூர் தேவைகளுடன் உலகளாவிய கோட்பாடுகளை இணைத்தல், மற்றும் தரமான உள்ளூர் இதழ்கள் மற்றும் ஆய்வரங்குகளை மேம்படுத்துதல் ஆகியவை ஆராய்ச்சி வளர்ச்சிக்கு அவசியமானவை எனவும் குறிப்பிட்டார்.

பின்னர் முக்கிய உரையாளர் அறிமுகத்தை SEUIARS – 2026 பொருளாளரும் விரிவுரையாளருமான ஏ.எப். தஹாரா வழங்கினார்.

நிகழ்வின் முக்கிய உரையாளர் மலேசியாவின் சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் கலாநிதி ஐனோல் மட்ஸியா ப்த். சுபைரி அவர்கள் இணைய வழியாக உரையாற்றி, உலகளாவிய கலை ஆய்வுகளின் தற்போதைய நிலை, கலாசார பரிமாற்றத்தின் அவசியம் மற்றும் எதிர்கால கல்வி ஆராய்ச்சிகள் குறித்து விரிவாக விளக்கினார்.

இந்த ஆய்வரங்கில் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள் இடம்பெற்றன. அவற்றில்:
டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் புத்தாக்கம்
டிஜிட்டல் யுகத்தில் சமூகம் மற்றும் கலாசாரம்
புவியியல் தகவலியல் மற்றும் சுற்றுச்சூழல்
மொழி, இலக்கியம் மற்றும் பயன்பாட்டு மொழியியல்
தத்துவம், உளவியல், கல்வி மற்றும் டிஜிட்டல் நலன்
அரசியல், அமைதி மற்றும் டிஜிட்டல் ஆட்சி
தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொடர்பியல்
வரலாறு மற்றும் பன்னிருவியல் ஆய்வுகள்


நிகழ்வை TESL விரிவுரையாளர் இசட்.ஹூருல் பிர்தௌஸ் அவர்கள் திறம்பட தொகுத்து வழங்கினார். நிகழ்வின் இறுதியில் செயலாளர் கலாநிதி எம்.ஐ.எப். கரீமா நன்றி உரையாற்றி நிகழ்வை நிறைவு செய்தார்.

இந்நிகழ்வில் பீடாதிபதிகளான பேராசிரியர் ஏ.எம்.எம். முஸ்தபா, அஷ்-ஷெய்க் எம்.எச்.ஏ. முனாஸ், ஆர்.கே.அஹ்மட் றிபாய் காரியப்பர், நூலகர் எம்.எம். றிபாவுத்தீன், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், திணைக்களத் தலைவர்கள், விரிவுரையாளர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள், கல்விசாரா பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டு தங்களது ஆய்வுகளைப் பகிர்ந்து கொண்டனர்.

கலை மற்றும் கலாசார ஆய்வுகளை மேம்படுத்தும் முக்கிய சர்வதேச தளமாக இவ்வாய்வரங்கு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
































































































 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :