சாய்ந்தமருது பிரதேசத்தில் நிலவும் மழைக்கால சூழ்நிலையைத் தொடர்ந்து, டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய அபாயம் அதிகரித்துள்ளதாக சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே. மதன் தெரிவித்துள்ளார்.
டெங்கு நோயை பரவச் செய்யும் ஈடிஸ் ஈஜிப்டைஸ் மற்றும் ஈடிஸ் எல்பொபிக்டஸ் எனும் இரண்டு வகை நுளம்புகள், குறைந்தளவு தேங்கியிருக்கும் நீரிலும் முட்டையிட்டு வேகமாகப் பரவக்கூடியவை என்பதால், தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான தளங்களில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
அந்த வகையில், தொழிற்சாலை மற்றும் கட்டுமான தளங்களில் நீர்த்தாங்கிகள் மற்றும் தொட்டிகளில் உள்ள நீரை தினசரி மாற்றுவதுடன், அவற்றை நுளம்புகள் உட்செல்லாதவாறு மூடி வைக்க வேண்டும். பயன்பாட்டில் இல்லாத வாளிகள், பரல்கள், டிரம்கள் போன்றவற்றை தலைகீழாக கவிழ்த்து வைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், கட்டிடங்களின் உள்ளும் வெளியும் காணப்படும் தேவையற்ற அனைத்து பொருட்களையும் அகற்றுவதுடன், கொங்கிரீட் தளங்கள் மற்றும் பொருட்களை மூட பயன்படுத்தப்படும் வரிப்புகள், தார்ப்பாய்கள் போன்றவற்றில் தேங்கும் நீரை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார். வளாகங்களை முறையாக பராமரித்து, ஆங்காங்கே தேங்கி நிற்கும் நீரை முற்றாக அகற்றுவது டெங்கு தடுப்பில் முக்கியமானதாகும் எனவும் அவர் கூறினார்.
டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய இடங்களாக அகற்றப்பட்டு கைவிடப்படும் உக்காத மற்றும் உக்கும் பொருட்கள், மழைநீர் தேங்கி நிற்கக்கூடிய இடங்கள், தடைப்பட்ட கூரைப் பீலிகள், கொங்கிரீட் கூரைகள், மறைக்கப்படாத நீர்த் தொட்டிகள், வீட்டு அலங்காரப் பொருட்கள், குளிர்சாதன மற்றும் குளிரூட்டி தட்டுக்கள், மிருகங்கள் பருகுவதற்காக வைக்கப்பட்டுள்ள சிறிய பாத்திரங்கள், எறும்புப் பொறிகள், செடிகள் மற்றும் மரப் பொந்துகள் ஆகியவை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
டெங்கு நோயிலிருந்து சமூகத்தை பாதுகாக்க தொழிற்சாலை மற்றும் கட்டுமான தள உரிமையாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும், சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் வைத்தியர் ஜே. மதன் கேட்டுக்கொண்டார்.

0 comments :
Post a Comment