இவரது ஓய்வை முன்னிட்டு, 2026-01-29 ஆம் திகதி தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரதான நூலகத்தின் கருத்தரங்கு மண்டபத்தில் நிகழ்வு ஒன்று நூலக ஊழியர்கள் சார்பில் சிரேஷ்ட பதவிநிலை உத்தியோகத்தர் சி.எம்.ஏ. முனாஸ் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக நூலகர் எம்.எம். றிபாவுத்தீன் அவர்கள் கலந்துகொண்டார். அத்துடன் கௌரவ அதிதிகளாக சிரேஷ்ட உதவி நூலகர்களான ஏ.எம். நஹ்பீஸ் மற்றும் எஸ்.எல்.எம். சஜீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
1997.10.01 ஆம் திகதி தென்கிழக்குப் பல்கலைக்கழக சேவையில் இணைந்து கொண்ட அவர், 2001.10.01 ஆம் திகதி நிரந்தர நியமனம் பெற்றார். அதன்பின் சுமார் மூன்று தசாப்தங்களுக்கு அண்மையான காலப்பகுதியில், நூலக சேவையின் ஊடாக மாணவர்கள், கல்வியாளர்கள், ஆய்வாளர்கள் உள்ளிட்ட பல தரப்பினருக்கும் நேர்த்தியானதும் அர்ப்பணிப்புமிக்கதுமான சேவையினை வழங்கி வந்துள்ளார்.
தென்கிழக்குப் பல்கலைக்கழக சூழலில் சக ஊழியர்களால் பெரிதும் நேசிக்கப்பட்ட நபராகத் திகழும் றசாக் முஹம்மட் அலி அவர்கள், உண்மை, நேர்மை, நகைச்சுவை கலந்த அன்பு மொழி, உயரிய நல்லொழுக்கம் ஆகியவற்றால் அனைவரின் மரியாதையையும் பெற்றவர். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக அவருடன் நெருக்கமாக பழகிய நண்பர்களின் சான்றுகளின்படி, பிறரை விமர்சிக்காத பண்பும், எப்போதும் நல்லிணக்கத்தை விரும்பும் மனப்பான்மையும் அவரின் தனிச்சிறப்பாகும்.
நூலக உத்தியோகத்தராக மட்டுமல்லாது, அரசியல் ஆய்வாளர், கட்டுரையாளர், செய்தியாளர், எழுத்தாளர், நுண்கலை விற்பண்ணர், சிறந்த கலைஞர் எனப் பல துறைகளில் தன்னை நிரூபித்துள்ள இவர், உண்மையிலேயே “பல்துறைக்கலைஞர்” என்ற பட்டத்திற்கு உரியவராக விளங்குகிறார்.
நிகழ்வின்போது அவருடன் இணைந்து பணியாற்றிய சக ஊழியர்கள் நண்பர்கள் என பலரும் பங்கு கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய பல்கலைக்கழக நூலகர் எம்.எம். றிபாவுதீன் அவர்கள், றசாக் முஹம்மட் அலி அவர்களின் பணியை ஒரு தனிநபரின் உத்தியோக வாழ்க்கையாக அல்லாது, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அறிவுப் பாரம்பரிய வரலாற்றின் ஒரு முக்கிய அத்தியாயமாக சித்தரித்தார்.
தமது உரையின் தொடக்கத்தில், இது நிரந்தர பிரியாவிடை அல்ல, அரச சேவையிலிருந்து ஓய்வு பெறும் ஒரு தற்காலிக பிரிவே என குறிப்பிட்ட நூலகர், றசாக் முஹம்மட் அலி அவர்களைப் பற்றி நினைவுகூரும் தருணம் மகிழ்ச்சியும் மனக்கவலையும் கலந்த உணர்வுகளை ஏற்படுத்துவதாக தெரிவித்தார். பல்வேறு ஆளுமைகளைக் கொண்ட ஒருவர் நூலக சேவையை விரும்பித் தேர்ந்தெடுத்தது ஒரு சாதாரண நிகழ்வு அல்ல என்றும், றசாக் அவர்கள் நூலகத்திற்கு தற்செயலாக வந்தவர் அல்ல, அறிவுப் பாரம்பரியத்தின் மீது உள்ள ஆழ்ந்த விருப்பத்தோடும் அர்ப்பணிப்போடும் வந்தவர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தென்கிழக்குப் பல்கலைக்கழகம் உருவான வரலாற்றுப் பின்னணியையும் நூலகர் தனது உரையில் நினைவூட்டினார். வடகிழக்கு பிரதேசங்களில் இருந்து இடம்பெயர்ந்த மாணவர்களின் கல்வித் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய அவசர சூழலில், வழக்கமான நடைமுறைகளைக் கடந்து பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்ட காலகட்டத்தில், திறமை அடிப்படையிலேயே பணியாளர்கள் உள்வாங்கப்பட்டனர் என்றும், அந்தச் சூழலில் மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் நேரடி பரிந்துரையுடன் றசாக் முஹம்மட் அலி அவர்கள் பல்கலைக்கழக சேவையில் இணைக்கப்பட்டமை ஒரு முக்கிய வரலாற்றுச் சம்பவம் என்றும் அவர் தெரிவித்தார். அவரது திறமை, பல்துறை ஆளுமை மற்றும் நேர்மை காரணமாகவே நிரந்தர நியமனம் வழங்கப்பட்டதாகவும் நூலகர் குறிப்பிட்டார்.
நூலகங்களின் வரலாற்றுப் பங்களிப்பை விரிவாக எடுத்துரைத்த நூலகர், அஷூர்பாணிபால் நூலகம், அலெக்சாண்டிரியா நூலகம், அல்-கரவீயின் நூலகம், பாக்தாத்தின் பைத்துல் ஹிக்மா போன்ற உலகப் புகழ்பெற்ற நூலகங்களை நினைவுகூர்ந்தார். அரசர்களின் செல்வமாக அறிவும் ஞானமும் மதிக்கப்பட்ட காலத்தில் நூலகங்கள் உருவானதையும், அந்த நூலகங்களே பின்னாளில் பல்கலைக்கழகங்களாக பரிணமித்தன என்பதையும் எடுத்துரைத்த அவர், “நூலகமே பல்கலைக்கழகத்தின் இதயம்; நூலகங்களே ஆசிரியர்களின் ஆசிரியர்கள்” எனக் கூறி நூலக சேவையின் மகத்துவத்தை வலியுறுத்தினார்.
இந்த அறிவுப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாகவே தென்கிழக்குப் பல்கலைக்கழக நூலகம் வளர வேண்டும் என்ற தொலைநோக்குடன் றசாக் முஹம்மட் அலி அவர்கள் பணியாற்றினார் என குறிப்பிட்ட நூலகர், “ஒய்ஸ் ஸ்ரீலங்கன் இஸ்லாமிக் ஸ்டடீஸ் கலெக்ஷன்” என்ற சிறப்பு தொகுப்பை உருவாக்கியதில் அவரது பங்களிப்பு மிக முக்கியமானது என நினைவுகூர்ந்தார். இலங்கையில் இஸ்லாமும் முஸ்லிம்களும் தொடர்பான ஆய்வுகளுக்கான மையமாக தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தை உருவாக்க வேண்டும் என்ற கனவு, அவரது செயற்பாடுகளின் வழியே நடைமுறை வடிவம் பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.
றசாக் முஹம்மட் அலி அவர்கள் ஒரு நூலக உத்தியோகத்தராக மட்டுமல்லாது, கலைஞர், வடிவமைப்பாளர், புகைப்படக் கலைஞர், கைத்தொழில் நிபுணர் எனப் பல்வேறு திறன்களை ஒருங்கே கொண்ட “பல்துறைக்கலைஞர்” என நூலகர் வர்ணித்தார். நூலக கண்காட்சிகள், சிறப்பு நிகழ்வுகள், அலங்கார வடிவமைப்புகள், புகைப்படப் பதிவுகள் எனப் பல துறைகளிலும் அவரது கலைத்திறன் வெளிப்பட்டதாகவும், குறைந்த வளங்களைக் கொண்டு அதிகபட்ச பயனை எட்டியவர் என்றும் அவர் பாராட்டினார்.
மேலும், மனிதநேயத்தோடு கூடிய நகைச்சுவை கலந்த அணுகுமுறை, சக ஊழியர்களை உற்சாகப்படுத்தும் தன்மை, மாணவர்களுடன் நெருக்கமான தொடர்பு ஆகியவை றசாக் முஹம்மட் அலி அவர்களின் தனிச்சிறப்புகளாக இருந்தன என நூலகர் குறிப்பிட்டார். விமர்சனமற்ற பண்பு, நல்லிணக்கத்தை விரும்பும் மனப்பான்மை ஆகியவை அவரை அனைவராலும் நேசிக்கப்படும் ஒருவராக மாற்றியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தமது உரையின் நிறைவில், அரச சேவையிலிருந்து ஓய்வு பெறுவது ஒரு கட்டத்தின் முடிவே தவிர, அறிவுப் பயணத்தின் முடிவு அல்ல எனக் குறிப்பிட்ட நூலகர், றசாக் முஹம்மட் அலி அவர்களின் அனுபவமும் அறிவும் எதிர்காலத்திலும் பல்கலைக்கழக சமூகத்திற்கு வழிகாட்டியாக அமையும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
நிகழ்வில் ஏற்புரையாற்றிய றசாக் முஹம்மட் அலி, இந்தப் பல்கலைக்கழகத்தில் நான் முதன்முதலாக கால் எடுத்து வைத்த நாள் 1997 ஆம் ஆண்டு அக்டோபர் 1. 2001 ஆம் ஆண்டு அக்டோபர் 1 அன்று நிரந்தர நியமனம் பெற்றேன். நாளை முதல் (2026.01.31), எனது அரச சேவையிலிருந்து உத்தியோகபூர்வமாக ஓய்வு பெறுகின்றேன். நிரந்தர சேவைக் காலம் 24 ஆண்டுகள் 4 மாதங்கள் என்றாலும், அதற்கு முன் செய்த சேவையையும் சேர்த்தால், சுமார் 28 ஆண்டுகள் 8 மாதங்கள் எனது வாழ்க்கை இந்த நூலகத்துடன் இணைந்திருந்தது.
நான் இந்த நூலகத்துக்கு வரும்போது, நூலக அறிவியல் படித்தவர்களாக அனைவரும் வந்திருக்கவில்லை. ஆனால், இங்கு வந்து, இங்கு பணியாற்றி, இங்கிருந்தே பலர் தங்களைத் தயார்படுத்திக் கொண்டு, துறைசார் தகுதிகளையும் பதவி உயர்வுகளையும் பெற்றார்கள். அதற்குக் காரணமாக இருந்த நூலகர், உதவி நூலகர்கள், மற்றும் ஏனைய ஊழியர்களின் பங்களிப்பு உண்மையிலேயே பாராட்டத்தக்கது.
ஒரு பொதுநூலகத்தையும், பல்கலைக்கழக நூலகத்தையும் ஒப்பிட்டால், பல்கலைக்கழக நூலகம் ஒரு கடலைப் போன்றது. அனைத்து பீடங்களுக்கும், அனைத்து துறைகளுக்கும் உரிய நூல்களையும் தகவல்களையும் ஒரே இடத்தில் சேகரித்து, தேவையான தருணத்தில் மாணவர்களுக்கு வழங்குவது என்பது சாதாரண பணி அல்ல. அந்தச் சவாலான பணியை, இங்குள்ள ஒவ்வொரு ஊழியரும் அர்ப்பணிப்புடன் செய்து வருகிறார்கள். அதனால் தான் நான் சொல்வேன் – பல்கலைக்கழக நூலகத்தில் பணியாற்றும் ஒவ்வொருவரும் ஒரு பேராசிரியரைப் போன்றவர்களே.
இன்று நூலகம் எதிர்கொள்கின்ற முக்கியமான சவால்களில் ஒன்று இடவசதி. புத்தகங்கள், ஆய்விதழ்கள், ஆவணங்கள் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே செல்கின்றன. தற்போதைய கட்டிடம் போதுமானதல்ல. நூலகத்துடன் இணைந்த மேலும் ஒரு ஐந்து மாடிக் கட்டிடம் அவசரமாக தேவையாக உள்ளது. இது கல்வி அமைச்சும் அரசாங்கமும் உடனடியாக கவனிக்க வேண்டிய விஷயமாகும்.
கல்வி சீர்திருத்தம் பற்றியும் நான் ஒரு கருத்தை முன்வைக்க விரும்புகிறேன். கல்வி என்பது பல்கலைக்கழகத்தில் தான் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் தவறு. ஆண்டு ஒன்றிலிருந்தே, ஒரு குழந்தையின் இயல்பான திறமைகளை அடையாளம் கண்டு, அதனை வளர்க்கும் வகையில் கல்வித் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். அப்படிச் செய்தால், எதிர்காலத்தில் அனைத்து துறைகளிலும் நாட்டிற்குள் நிபுணர்களை உருவாக்க முடியும்.
அதேபோல், தென்கிழக்குப் பல்கலைக்கழகம் எதிர்கொள்ளும் வெள்ள அபாயம் ஒரு நீண்டகால பிரச்சினையாக இருந்து வருகிறது. அணைக்கட்டு அமைப்பதன் மூலம் இந்தப் பல்கலைக்கழகத்தையும், சுற்றியுள்ள விவசாய நிலங்களையும் பாதுகாக்க முடியும். இது கல்வியைப் பாதுகாப்பதற்கான ஒரு அடிப்படை நடவடிக்கை. இதிலும் அரசாங்கம் உடனடியாக செயல்பட வேண்டும்.
நூலகம் என்பது புத்தகங்களின் குவியல் அல்ல. உலக அறிவின் திரட்டல். தொழில்நுட்பம் எவ்வளவு வளர்ந்தாலும், புத்தகக் கல்வி தான் உண்மையான, ஆழமான கல்வி. ஆய்வு செய்யும் மாணவனுக்கு அமைதியும், பாதுகாப்பும், ஊக்கமும் தரும் இடமாக நூலகம் இருக்க வேண்டும். அதற்காகவே, 24 மணி நேர சேவை, திறந்த வாசிப்பு வெளிகள் போன்ற நவீன வசதிகள் அவசியம்.
இங்கு பணியாற்றும் காப்பாளர்கள், உதவி ஊழியர்கள் ஆகியோரின் பிரச்சினைகள் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் உள்ளன. ஓய்வூதியம் உள்ளிட்ட நலன்கள் போதுமான அளவில் இல்லை. கல்வி சீர்திருத்தம் பேசப்படும் இந்த காலகட்டத்தில், இவர்கள் தொடர்பான பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டும்.
“அறிவு, உன்னை முழுமையாக அதற்குக் கொடுக்காதவரை, அது உன்னை முழுமையாக ஏற்றுக்கொள்ளாது” என்ற இமாம் கஸாலி அவர்களின் கருத்து இங்கு நினைவுகூரத்தக்கது. அறிவு என்பது அலமாரிகளில் அடுக்கப்பட்ட புத்தகங்கள் அல்ல; அதை தேடி, உழைத்து, அனுபவித்து பெற வேண்டிய ஒன்று.
நான் அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றாலும், இந்த நூலகத்துக்கும், கல்விக்கும், பொதுநலனுக்கும் என்னால் இயன்ற சேவையை இறுதிவரை செய்வேன். விரைவில் ஒரு நூல் வெளியீட்டின் மூலம் மீண்டும் உங்களைச் சந்திப்பேன், இன்ஷா அல்லாஹ்.
இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த நூலகர், நூலக ஊழியர்கள், மற்றும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டு, நான் விடைபெறுகிறேன் என்றார்.
இந்தப் பிரியாவிடை விழா, ஒரு உத்தியோகத்தரின் ஓய்வை மட்டுமல்லாது, அறிவு, கலை, மனித உறவு ஆகியவற்றின் ஒருங்கிணைந்த சேவையை நினைவுகூரும் நிகழ்வாக அமைந்தது.

0 comments :
Post a Comment