2026: மறுசீரமைப்பும் மீள்கட்டியெழுப்பலும் தொடங்கும் ஆண்டு – ஜனாதிபதி



மிகப்பெரிய மறுசீரமைப்புச் செயல்முறையையும், மீளக் கட்டியெழுப்பும் பாரிய பணியையும் தோள்மேல் சுமந்த நாடென்ற வகையில் நாம் 2026 ஆம் ஆண்டு புத்தாண்டில் கால் பதிக்கிறோம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், கடந்த 2025 ஆம் ஆண்டு தேசிய அபிலாஷைகளை அடிப்படையாகக் கொண்ட நிலையான அபிவிருத்திக்காக அடித்தளமிடப்பட்ட ஆண்டாக அமைந்தது.

1977 ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகக் குறைந்த வரவு செலவுத்திட்ட பற்றாக்குறையைப் பதிவு செய்தல், 2007 ஆம் ஆண்டுக்குப் பிறகு நாட்டின் கூடுதலான அரச வருவாயை ஈட்டுதல், வரலாற்றில் முதல் முறையாக முதன்மை கணக்கு மிகையை பெற்றமை , பொருட்கள் மற்றும் சேவைகளின் ஏற்றுமதி வருவாயை சுமார் 17 பில்லியன் டொலர்களாக அதிகரித்தமை , எமது நாட்டு வரலாற்றில் அரச வருவாய் இலக்குகளை விஞ்சும் ஒரே ஆண்டாக 2025 ஆம் ஆண்டை மாற்றியமை மற்றும் அண்மைக் காலத்தில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் நாட்டிற்கு வருகை தந்த வருடமாக பதிவானமை போன்றன 2025 ஆம் ஆண்டில் அடையப்பட்ட குறிப்பிடத்தக்க பொருளாதார சாதனைகளாகும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாக இருந்த ஊழல் நிறைந்த அரசியல் முறைமைக்கு பதிலாக பொதுமக்களுக்கு நேர்மையாக சேவை செய்யும் ஒரு சிறந்த அரசியல் கலாச்சாரத்தை நாட்டில் உருவாக்கவும் எதிர்கால சந்ததியினரை போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து விடுவிப்பதற்கான ' முழு நாடுமே ஒன்றாக ' தேசிய செயற்பாட்டைப் போன்ற திட்டங்களை செயல்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டதோடு இவை 2025 ஆம் ஆண்டு நாட்டின் அரசியல் மற்றும் சமூக மாற்றத்தில் ஒரு திருப்புமுனையான ஆண்டாக பதியப்படுகிறது.
அண்மைக் காலங்களில் நாடு எதிர்கொண்ட மிகப்பெரிய இயற்கை பேரழிவின் சவாலை கடந்த ஆண்டு நாங்கள் ஒன்றாக எதிர்கொண்டோம். நமது மக்களிடையே உள்ள மனிதநேயப் பண்பானது எந்த பேரழிவினாலும் பறிக்க முடியாத ஒரு சிறந்த குணம் என்பதை தெளிவாக நிரூபித்ததோடு நாடு முழுவதும் உள்ள மக்கள் பாதிக்கப்பட்ட சகோதர மக்களின் துயரத்தில் கைகோர்த்தார்கள்.
இந்தச் சவாலை எதிர்கொள்வதில் எங்களுக்கு ஆதரவளித்த வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கும், மீளெழுச்சிக்கு நட்புறவின் பலத்தை வழங்கிய உலகெங்கிலும் உள்ள அனைத்து நட்பு நாடுகளுக்கும், அனர்த்த நிலையில் அயராது உழைத்த பொலிஸார் மற்றும் முப்படைகளுக்கும், இந்த நாட்டின் அரச உத்தியோகஸ்தர் களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாம் ஒன்றாக, இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.
உலக வரலாற்றில் வீழ்ச்சியடைந்த ஒவ்வொரு நாட்டையும் கட்டியெழுப்புவதில் அந்த மக்களின் இலட்சியமும் தைரியமும் பக்கபலமாக இருந்தது. நமது அன்பான பிரஜைகளின் அசைக்க முடியாத தைரியத்தின் பலனால், நாம் முன்பு இருந்ததை விட சிறந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்று உறுதியாக நம்புகிறோம்.
புத்தாண்டு வருகை கடந்த ஆண்டின் அனுபவங்களை மீள்பரிசீலனை செய்வதற்கு வாய்ப்பு அளிப்பதோடு, புத்தாண்டு தொடர்பில் சாதகமான மனப்பாங்குகளுடன் மீள திட்டமிடுவதற்கும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்குகிறது.

நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான திட்டத்தில் அசைக்க முடியாத உறுதியுடனும் நம்பிக்கையுடனும் சகோதரத்துவத்துடன் கைகோர்க்க அனைவரையும் நான் அழைப்பு விடுகிறேன். மலர்ந்த 2026 புத்தாண்டு உங்கள் அனைவரினதும் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வெற்றிகரமான புத்தாண்டாக அமைய வாழ்த்துவதாக ஜனாதிபதி தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :