வெள்ளிக்கிழமை வரவுசெலவுத் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு முன், முன்வைக்கப்பட்டுள்ள தற்போதைய வரவுசெலவுத் திட்டம் பேரிடருக்குப் பிந்தைய நாட்டின் நிலைமைக்கு ஏற்றதா என்பது தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டும். இந்த இக்கட்டான கட்டத்தில், பாதிக்கப்பட்ட 15 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் குறித்து பார்த்து, மேலும் சில நாட்களை எடுத்து, குறுகிய காலத்தில் புதிய வரவுசெலவுத் திட்டத்தை முன்வைப்பதும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையிலும், பேரிடரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீண்டும் கட்டியெழுப்பும் முகமான வரவுசெலவுத் திட்டத்தை தயாரிப்பதே தற்சமயம் செய்ய வேண்டிய பணியாக அமைந்து காணப்படுகின்றன. மேலும் தாமதிக்காமல், இந்தப் பெரும் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அவசரமாக வரவுசெலவுத் திட்டத்தை தயாரிக்க வேண்டும். மேலும் சில நாட்களை எடுத்து புதிய வரவு செலவுத் திட்டத்தை தயாரிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
டித்வா சூறாவளி புயலால் ஏற்பட்ட பேரழிவு குறித்து தனது கருத்துக்களைத் தெரிவித்து, நேற்று (03) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
🟩 சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை கூட்டுங்கள் - எதிர்க்கட்சியினரான நாம் ஆதரவைத் தருவோம்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை கூட்டுமாறும், அரசாங்கத்தால் இவ்வாறு இந்த மாநாட்டைக் கூட்ட முடியாவிட்டால், அரசாங்கத்தின் சார்பாக எதிர்க்கட்சி இதனைக் கூட்டி, நாட்டிற்குத் தேவையான நிதிகளைத் திரட்டித் தருகிறோம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
🟩 சர்வதேச நாணய நிதியத்துடன் புதிய இணக்கப்பாட்டிற்குச் செல்லுங்கள்.
அவ்வாறே, சர்வதேச நாணய நிதியத்துடன் புதிய இணக்கப்பாட்டை எட்டிக்கொள்வதற்கு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். மக்களை மேலும் பாதிக்கும், மக்களை ஒடுக்கும் விதமான நிபந்தனைகளுடன் தற்போதைய நிலைமைக்கு மத்தியில் தொடர இயலாது என்பதால், நாம் அவசரமாக சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாட வேண்டும். சர்வதேச நாணய நிதியத்துடன் பேச வேண்டியதை அரசாங்கத்தால் பேச முடியாவிட்டால், எதிர்க்கட்சியாக நாம் பேச வேண்டியதைப் பேசுகிறோம். புதிய இணக்கப்பாட்டை எட்டி மக்களுக்கு பக்க பலத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
🟩 அரசியல்மயப்படாத வேலைத்திட்டத்திற்குச் செல்லுங்கள்.
மக்களை வாழ வைக்கவும், மக்களைப் பாதுகாக்கவும், நாட்டை முன்னேற்றவும், பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும், இழந்த விவசாய காணி வளங்களில் திருத்த வேலைகளைச் செய்வதற்குமான புதிய திட்டமொன்றை வகுத்து முன்னெடுக்க வேண்டும். அரசியல்மயப்படாத வேலைத்திட்டமொன்றை வகுத்துச் செயற்படுவதற்கு எதிர்க்கட்சியினரான நாமும் எமது ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் பெற்றுத் தருவோம்.
🟩 அவசரகால சட்டத்தைப் பயன்படுத்தி ஊடகவியலாளர்களை அடக்குமுறைக்குட்படுத்த வேண்டாம்.
அவசரகால சட்டத்தைப் பயன்படுத்தி ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் நடவடிக்கைகளுக்கு எம்மால் இடமளிக்க முடியாது. அவசரகாலச் சட்டம் மக்களை ஆதரிப்பதற்காகவே அன்றி, ஊடகங்களை நசுக்குவதற்காக அல்ல. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் துறைக்குப் பொறுப்பான அமைச்சர்கள் இதுபோன்ற கருத்துக்களை வெளியிடுகின்றனர். இன்று இந்த சட்டத்தைப் உபயோகித்து சமூக ஊடக ஆர்வலர்களை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி வருகின்றனர். இந்த அடக்குமுறையை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
🟩 தேசிய துக்க தினத்தை பிரகடனப்படுத்துங்கள்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள், கோவிட், நாட்டில் ஏற்பட்ட வங்குரோத்து நிலை மற்றும் டித்வா சூறாவளி புயல் என கடந்த 7 ஆண்டுகளுக்குள் நமது நாடு பெரும் துயரங்களைச் சந்தித்துள்ளன. டித்வா சூறாவளிப் புயல் பேரனர்த்தத்தின் விளைவாக 437,507 குடும்பங்கள், 1,558,919 பேர் பாதிக்கப்பட்டு 465 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. அதேபோல் 366 பேர் காணாமல் போயுள்ளதோடு, 783 வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்துபோய், 31417 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துபோயுள்ளன. மேலும், 1,433 இடைத்தங்கல் முகாம்களில் 61,875 குடும்பங்களைச் சேர்ந்த 232,752 பேர் தற்போது இருந்து வருகின்றனர். இந்தப் பேரழிவால் பாதிக்கப்பட்ட அனைவருக்குமாக, தங்கள் உயிர்களை இழந்த அனைவருக்குமாக, தமது சொத்துக்களை தமது வாழ்வாதாரங்களை இழந்து, இடம்பெயர்ந்து, சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ள அனைவருக்குமாக தேசிய துக்க தினத்தை பிரகடனப்படுத்துமாறு இன்று யோசனை முன்வைக்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
🟩 படை வீரர்களுக்கு மரியாதை!
இந்தப் பேரிடரால் பாதிக்கப்பட்ட அனைவரையும் கவனித்துக்கொள்வது தேசியக் கடமையாகும். அது மனிதநேயத்தின் பெயரால் செய்யப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களை மீட்கப் பாடுபட்ட முப்படையினர், பொலிஸார், சிவில் பாதுகாப்பு படையினர், விசேட அதிரடிப் படையினர் உட்பட சகல படைவீரர்களுக்கும் எங்கள் மரியாதையை தெரிவித்துக் கொள்கிறோம். நாட்டில் இப்போது சிப்பாய்கள் இல்லை, இராணுவ வீரர்கள் மட்டுமே காணப்படுகின்றனர். இந்த பேரழிவில் மரணித்த கடற்படை, விமானப்படை அதிகாரிகளுடன், கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலைய உதவி பரிசோதகர் உட்பட மக்களைக் காப்பாற்ற தங்கள் உயிரைத் தியாகம் செய்த அனைவரையும் மரியாதையுடன் நினைவுகூர விரும்புகிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவத்தார்.
🟩 நிவாரணம் வழங்கிய சகலருக்கும் நன்றி!
இந்த பாதிக்கப்பட்ட அனைவரையும் கவனித்துக்கொள்வது ஒரு தேசிய கடமையாகும். அது மனிதநேயத்தின் பெயரால் செய்யப்பட வேண்டும். அனர்த்தத்தில் இருந்த மக்களை மீட்பதற்காகப் பணியாற்றிய முப்படையினர், பொலிஸார், சிவில் பாதுகாப்புப் படையினர், விசேட அதிரடிப் படையினர் உள்ளிட்ட சகல இராணுவ வீரர்களுக்கும் நாம் எமது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம். எமது மரியாதையைச் செலுத்துகிறோம். சவால்கள், சிரமங்கள் மற்றும் பிரச்சினைகளுக்கு மத்தியில், அரச ஊழியர்கள் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். கிராம மட்டம், அடிமட்டம் வரையிலான சகல அரச அதிகாரிகளுக்கும் எங்கள் நன்றியையும் மரியாதையையும் தெரிவித்துக் கொள்கிறோம். நாட்டுக்காக, துன்பப்படும் மக்களுக்காக, இன்னும் தியாகங்களைச் செய்து, நிவாரணங்களை வழங்கிக் கொண்டிருக்கும் மக்களுக்கும், அவர்கள் ஆற்றி வரும் சேவைகளுக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
🟩 அரசியலை ஒருபுறம் ஒதுக்கி வைத்து விட்டு நாட்டுக்காக செயற்படுவோம்.
ஒரு நாடாக நாம் பல சவால்களை எதிர்கொண்டுள்ள இந்நேரத்தில், எதிர்க்கட்சியாக நமது பொறுப்பை நிறைவேற்றி வருகிறோம். இனம், மதம், சாதி, வர்க்கம், கட்சி வேறுபாடின்றி, அரசியலை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு, நாட்டு மக்களுக்கு சிறந்த சேவைகளைச் செய்து வருகிறோம். இன்றளவில், ஜப்பான், கொரியா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா, இத்தாலி மற்றும் ஜேர்மன் ஆகிய நாடுகளின் தூதுர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள், உலக வங்கியின் வதிவிடப் பிரதிநிதிகளைச் சந்தித்து, எங்கள் நாட்டிற்கு சாத்தியமான அனைத்து நிவாரண உதவிகளையும் முடிந்தவரை பூரணமாகப் பெற்றுத் தருமாறு நாங்கள் கேட்டுக் கொண்டோம்.
அவ்வாறே, இவ்வாறு கிடைக்கும் உதவிகளை ஆதரவுகளை வெளிப்படையான, வினைத்திறனான மற்றும் நியாயமானதொரு திட்டத்தின் மூலம், வெளித் தெரியும் விதமான அணுகுமுறையுடன் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவிகள் போய் சேரும் வண்ணம் பெற்றுக் கொடுக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டார்.
🟩 காலாவதியான சுற்றறிக்கைகளை மாற்றி நிவாரணம் வழங்குங்கள்.
இந்நேரத்தில், மக்கள் இழந்த, சேதமடைந்த சொத்துக்கள் முயற்சியாண்மைகளை மீட்டெடுக்க, புனர்நிர்மாணம் செய்ய, சீரமைக்க, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் மக்களுக்கும் அதிகபட்ச நிவாரணங்களை வழங்கி வைக்க வேண்டும். உயிரிழந்த, வாழ்வாதாரங்ஙளை இழந்த, இடம்பெயர்ந்த மக்களுக்கு நிதி ஒதுக்குவதற்கு ஒன்றிணைந்ததொரு கூட்டுத் திட்டம் அவசியமாகும். விவசாயத் துறை, மீன்பிடித் துறை மற்றும் சுகாதாரத் துறைகளில் பிரச்சினைகள் காணப்படுகின்றன. அவை தீர்க்கப்பட்டு சுற்றுலாத் துறை ஊக்குவிக்கப்பட வேண்டும். தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், காலாவதியான சுற்றறிக்கைகளை மாற்றி, மக்களுக்கு உதவ அரச அதிகாரிகளுக்கும் தேவையான சட்டக்கட்டமைப்புச் சட்டகத்தை தயாரிக்குமாறு நாங்கள் அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
🟩 கருப்பு பண மாபியாவுக்கு முடிவு கட்டுங்கள்.
தற்போது 220 இலட்சம் நுகர்வோரைச் சுரண்டி வரும் கறுப்புச் சந்தை மாபியா உருவெடுத்து வருவதால், விலைக் கட்டுப்பாடுகளைஅறிமுகப்படுத்துமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறோம். பிரச்சினைகளில் இருந்து ஒழிந்து ஓடாமல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அரப்பணிப்போடு செயற்படுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டார்.
🟩 கீழ்த்தரமான அரசியலிலிருந்து விலகி, தார்மீக அரசியல் கலாச்சாரத்திற்குள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாம் பக்கபலத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.
இந்தப் பேரழிவின் ஊடாக அரசியலை முன்னெடுக்கக் கூடாது. உயிர்களையும் சொத்துக்களையும் இழந்த மக்களை முன்னிறுத்தி, அரசியல் ரீதியாக பிரபலமாகும் செயற்பாடுகளை முன்னெடுக்கக் கூடாது. ஏற்பட்ட சேதத்தை ஏன் குறைக்க முடியாமல் போனது என்பதற்கான காரணங்களை நாம் ஆராய வேண்டும். பேரிடரை நிர்வகிப்பதற்குப் பதிலாக பேரிடர் விளம்பரப்டுத்தப்படுவதற்கு ஏதுவானது யாது என்பது தொடர்பில் நாம் பார்க்க வேண்டியுள்ளது. நாடு மீண்டும் ஒருமுறை விலைமதிப்பற்ற உயிர்களை இழக்கும் நிலைக்கு வரக் கூடாது. கீழ்த்தரமான அரசியலிலிருந்து விலகி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு தார்மீக அரசியல் கலாச்சாரத்திற்குள் இருந்து கொண்டு பக்கபலத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
🟩 தவறுகளையும், குறைபாடுகளையும் சரிசெய்து கொண்டு நாட்டைக் கட்டியெழுப்புவோம்.
இவ்வளவு ஆபத்தான சூழ்நிலை ஏற்படும் என வளிமண்டலளவியல் திணைக்களம் எச்சரித்தபோது, இது குறித்து பரிசீலித்துப் பார்க்க தவறியது ஏன் என்பது குறித்து ஆராய்ந்து பார்க்க வேண்டும். டிரம்பின் தீர்வை வரிகளை நீக்கி, தொழிலதிபர்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங்கம் தலையிட வேண்டும். தவறுகளையும் குறைபாடுகளையும் சரிசெய்து கொண்டு, நாட்டைக் கட்டியெழுப்ப எமது அதிகபட்ச ஆற்றலை வழங்குவதுதான் இந்நேரத்தில் நமது பொறுப்பாக அமைந்து காணப்பட வேண்டும். இந்த விடயத்தில் எதிர்க்கட்சி தனது கடமைகளை சரியாக நிறைவேற்றும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
🟩 அவசர அனர்த்த நிலையை பிரகடனப்படுத்தாது ஏன்?
வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவிப்புச் செய்யும் போது, அந்த செய்தி பொதுமக்களுக்குத் தெரிவிக்காததற்கான காரணங்கள் தொடர்பில் ஆராய வேண்டும். இடர் முகாமைத்துவச் சட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் முறையாகச் சரிசெய்யப்படாததற்கான காரணங்கள் தொடர்பில் ஆராய வேண்டும். அனர்த்த நிலைமையின் தீவிரம் தெரிந்திருந்தும் ஏன் அவசரகால நிலை அறிவிக்கப்படவில்லை என்பது குறித்தும் ஆராய வேண்டிய அவசியம் காணப்படுகின்றன. டாப்ளர் ரேடார் கட்டமைப்பைத் நிறுவத் தவறியது குறித்தும் நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment