இந்நிகழ்விற்கு சாய்ந்தமருது பொதுநூலகர் ஏ.எல்.எம். முஸ்தாக் தலைமை வகித்தார். பிரதம அதிதியாக தென்கிழக்குப் பல்கலைக்கழக நூலகர் எம்.எம். றிபாவுத்தீன் கலந்து கொண்டு உரையாற்றினார்.
சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர், திறனாய்வாளர் மற்றும் முன்னாள் கோட்டக் கல்விப் பணிப்பாளருமான கலாபூஷணம் ஏ. பீர் முகம்மது மற்றும் முன்னாள் கலாசார அலுவலர் எம்.ஐ.எம். அஷ்ரப் ஆகியோர் “மனித நூலகக் கருத்தாக்கம்” (Human Library Concept) அடிப்படையில் கருத்துக்கள்ளை முன்வைத்தனர்.
தென்கிழக்குப் பல்கலைக்கழக நூலகர் எம்.எம். றிபாவுத்தீன் தனது உரையில், சாய்ந்தமருது என்பது இலங்கை முழுவதும் கல்வி, இலக்கியம் மற்றும் பண்பாட்டில் தனித்துவமான அடையாளம் பெற்ற ஊராகும். இந்த ஊருடன் எனக்கு சிறுவயது முதலே ஒரு நெருங்கிய தொடர்பு உள்ளது. என் பெற்றோர்களின் ஊடாகவும், அந்த ஊரின் இலக்கிய பாரம்பரியத்தினூடாகவும் சாய்ந்தமருது என்னுள் ஒரு நெருக்கத்தை உருவாக்கியுள்ளது.
எனது தந்தையார் ஒரு அரபுத் தமிழ் அறிஞராகவும், பல ஆண்டுகள் மதக் கல்வி துறையில் பணியாற்றியவராகவும் இருந்தார். அவர் வாசித்த அரபுத் தமிழ் தஃப்சீர் நூல் இன்று எங்களது குடும்பத்தின் மதிப்புமிக்க ஒரு ஆவணமாக உள்ளது. 150 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் வெளியான அந்த நூல் எமது கல்வி மரபின் ஆழத்தையும், அரபு-தமிழ் இலக்கியத்தின் செழுமையையும் வெளிப்படுத்துகிறது. இது சாய்ந்தமருதின் இலக்கிய மரபு எவ்வளவு தொன்மையானது என்பதற்கும் ஒரு சான்றாகும்.
இன்றைய நிகழ்வின் முக்கியத்துவம் “மனித நூலகக் கருத்தாக்கம் (Human Library Concept)” என்பதில் நிலைக்கிறது. இது ஒரு புதுமையான சிந்தனை. அச்சுப் புத்தகங்களால் வழங்கப்படும் அறிவை உயிரோட்டமான அனுபவமாக மாற்றும் முயற்சிதான் இந்த மனித நூலகம். ஒரு புத்தகத்தை வாசிப்பது போலவே, இன்று நாங்கள் அந்த புத்தகத்தின் ஆசிரியரை நேரடியாகச் சந்தித்து, அவரிடம் கேள்விகள் கேட்டு, அவரது வாழ்க்கைப் பின்னணியைப் புரிந்துகொள்ள முடிகிறது. இதுவே “ஹியூமன் புக்” எனப்படும் உண்மையான அனுபவம்.
எழுத்தாளர் கலாபூஷணம் ஏ. பீர் முகம்மது அவர்களும், கலாசார அலுவலர் எம்.ஐ.எம். அஷ்ரப் அவர்களும் இன்று அந்த “உயிரோட்டமான புத்தகங்கள்” ஆவார்கள். அவர்கள் தமது அனுபவங்கள், சிந்தனைகள், ஆராய்ச்சிகள் ஆகியவற்றை பகிர்ந்து எமது வாசகர்களுக்கு புதிய உந்துதலை வழங்குவார்கள்.
இன்றைய உலகம்; தொழில்நுட்ப மாற்றத்தின் காரணமாக முழுவதும் மாற்றமடைந்து வருகிறது. புத்தகங்கள் மட்டும் அல்லாமல், டிஜிட்டல் தளங்கள், செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), சாட்ஜிபிடி போன்ற தொழில்நுட்பங்கள் நம் வாழ்வின் அங்கமாகிவிட்டன. ஆனால் இதன் மத்தியில் வாசிப்பின் மதிப்பை நாம் இழக்கக் கூடாது. புத்தக வாசிப்பு மனிதனின் அறிவை, சிந்தனையை, மொழி திறனை, மற்றும் தனிமனித வளர்ச்சியை ஊக்குவிக்கும் மிகச் சிறந்த வழியாகும்.
இளம் தலைமுறையினர் இன்று தொலைபேசி மற்றும் சமூக ஊடகங்களில் நேரத்தை செலவிடுகிறார்கள். ஆனால் புத்தக வாசிப்பின் வழியேதான் உண்மையான அறிவையும் ஆழ்ந்த சிந்தனையையும் அவர்கள் பெற முடியும். எனவே, வாசிப்பு ஒரு பழக்கமாக அல்ல, ஒரு பண்பாக இருக்க வேண்டும்.
நாம் இன்று காணும் பீர் முகம்மது போன்ற எழுத்தாளர்களும், அஷ்ரப் போன்ற கலாச்சாரப் உத்தியோகத்தரும் நம் சமூகத்தின் அறிவுச் செல்வங்களாக உள்ளனர். இவர்களின் படைப்புகள், சிந்தனைகள் மற்றும் உழைப்புகள் அடுத்த தலைமுறைக்கு சென்றடைய நாம் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். என்று தெரிவித்தார்.
நிகழ்வில் உரையாற்றிய எழுத்தாளர் கலாபூஷணம் ஏ. பீர் முகம்மது அவர்கள், வாசிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியபோது,
“வாசிப்பால் வளர்ந்தவன் என்று என்னைச் சொல்வார்கள்; வாசிப்பு ஒரு மனிதனை உயர் இடத்திற்குக் கொண்டு செல்கிறது” எனக் கூறி,
தன் சிறுவயதிலிருந்தே வாசிப்பு பழக்கத்தின் வழியே இலக்கிய உலகில் தன்னை உருவாக்கிய விதத்தை சுவைபடப் பகிர்ந்துகொண்டார்.
தந்தையார் வீட்டிற்கு தினமும் கொண்டு வந்த தினகரன் பத்திரிகையை வாசித்ததிலிருந்தே தமக்குள் வாசிப்பின் விதை விதைக்கப்பட்டது என்றும், பாடசாலை காலத்திலேயே அம்புலிமாமா போன்ற சிறுவர் இதழ்களைத் தொடர்ந்து வாசித்து வந்தது தான் தன்னுடைய சிந்தனைக்கு அடித்தளமாக அமைந்தது என்றும் அவர் நினைவுகூர்ந்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர், இதுவரை பத்து நூல்களை எழுதியிருப்பதாகவும், தன்னுடைய முதல் நூல் ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கான செயல்நூல் எனவும் குறிப்பிட்டார்.
அதன் பின்னர் எழுதிய பல படைப்புகளில், “இளம்பிறை எம்.ஏ. ரஹ்மான் – இருட்டடிப்புகளிலிருந்து வெளிச்சத்திற்கு வந்தவர்” என்ற நூலும், கிழக்கு மாகாணத்தின் சிறந்த சிறுகதைத் தொகுப்பாகப் பரிசு பெற்ற “தைலாப்பெட்டி” என்ற கதைத்தொகுப்பும் குறிப்பிடத்தக்கவை என விளக்கினார்.
மேலும், சமீபத்தில் தாம் எழுதிய “விபுலானந்தரும் முஸ்லிம்களும்” என்ற நூல், மதங்கள் மற்றும் இனங்களுக்கிடையேயான ஒற்றுமையை வலியுறுத்தும் ஒரு முக்கிய ஆக்கமாகும் என்றும், இந்த நூலில் சுவாமி விபுலானந்தர் உடன் கல்வி பயின்ற இருபத்தி ஐந்து முஸ்லிம் அறிஞர்கள் பற்றிய விவரங்களும் பதிவாகியுள்ளன என்றும் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது;
“இந்த நூலை வெளியிடும்போது, முஸ்லிம்களும் தமிழர்களும் ஒற்றுமையாக இணைந்து வாழும் பண்பை வெளிப்படுத்தும் விதமாக,
ஒரு முஸ்லிம் தலைவரும், ஒரு தமிழ் தலைவரும் இணைந்து அதன் வெளியீட்டில் பங்கேற்றனர்.
அந்த நிகழ்வில் நான்கு சமயத்தவர்களும் — பௌத்தர், சைவம், கிறிஸ்தவர், முஸ்லிம் — அனைவரும் கலந்து கொண்டனர்.
இது தான் நம் சமூகத்தின் உண்மையான மத நல்லிணக்கத்தின் சின்னமாகும்” என்று அவர் வலியுறுத்தினார்.
உரையின் இறுதியில், இளம் தலைமுறையினர் வாசிப்பை வாழ்க்கை முறையாகக் கடைப்பிடித்து, தங்களது சொந்த ஆக்கங்களை உருவாக்கி சமூகத்திற்கு பங்களிக்க வேண்டும் என அவர் ஊக்கமளித்தார்.
நிகழ்வில் உரையாற்றிய கலாபூஷணம் ஏ. பீர் முகம்மது அவர்கள், “வாசிப்பால் வளர்ந்தவன் என்று என்னைச் சொல்வார்கள்…” என்று தொடங்கி, வாசிப்பின் மதிப்பையும், தன் எழுத்தாளர் பயணத்தையும் விரிவாகப் பகிர்ந்துகொண்டார். மேலும் அவர் எழுதிய “விபுலானந்தரும் முஸ்லிம்களும்” நூலின் மூலம் இன-மத ஒற்றுமையை வலியுறுத்தினார்.
நிகழ்வில் உரையாற்றிய முன்னாள் கலாசார அலுவலர் எம்.ஐ.எம். அஷ்ரப் அவர்கள், கவிதையின் வளர்ச்சியையும் அதன் மரபு சார்ந்த பண்புகளையும் விரிவாக விளக்கினார்.
அவர் கூறியதாவது —
“கவிதை என்பது மனித மனத்தின் நுண்ணிய உணர்வுகளை வெளிப்படுத்தும் கலை. ஆரம்ப காலங்களில் கவிதைகள் வாய்மொழி வழியாக பரவின. பின்னர் அவை எழுத்து வடிவத்தில் நிலைத்தன. இவ்வாறு உருவானது மரபுக் கவிதையும் நாட்டார் பாடல்களும். இரண்டையும் மாணவர்கள் தெளிவாகப் பிரித்தறிந்துகொள்ள வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.
அவர் மேலும் விளக்குகையில்,
மரபுக் கவிதை (classical poetry) இலக்கணப் பின்புலத்தைக் கொண்டதாகும்; அதில் எதுகை, மோனை, இயைபு போன்ற நுணுக்கங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன.
ஆனால் நாட்டார் பாடல்கள் பொதுமக்களின் வாழ்க்கை அனுபவங்களையும் பண்பாட்டையும் பிரதிபலிப்பவை என்று கூறினார்.
தனது வாழ்க்கை அனுபவத்தையும் பகிர்ந்த அவர்,
“நான் ஒரு மரபு எழுத்தாளர் அல்ல. வாசிப்பின் வழியே தான் எழுத்துலகில் நுழைந்தேன். நூலகத்தின் வாசிப்பு பழக்கம் எனது சிந்தனையை எழுத்தாளனாக மாற்றியது,” என உணர்ச்சியோடு கூறினார்.
அவர் எழுதிய “இன்னும் உயிரோடு” எனும் கவிதைத் தொகுப்பு, கிராமிய வாழ்க்கையின் உணர்வுகளையும், நவீன மாற்றங்களின் தாக்கத்தையும் வெளிப்படுத்துவதாகும் என்றும், அதில் இயற்கை, மனித உறவுகள், சமூக மாற்றங்கள் ஆகியவை நுணுக்கமாகப் பிரதிபலிக்கப்பட்டுள்ளன என்றும் விளக்கினார்.
“கவிதை எழுதுவது வெறும் சொற்கள் இணைப்பல்ல; அது சமூகத்தின் இதயத் துடிப்பை பதிவு செய்வது. இன்றைய மாணவர்கள் தங்கள் வாசிப்பின் வழியே சிந்தனையையும் படைப்பாற்றலையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்,” எனவும் தெரிவித்தார்.
நிகழ்வில் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் வாசிப்பின் அவசியம், இளம் தலைமுறையின் அறிவு வளர்ச்சியில் அதன் பங்கு, மற்றும் டிஜிட்டல் யுகத்தில் புத்தக வாசிப்பின் முக்கியத்துவம் குறித்து விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
இந்நிகழ்வு சாய்ந்தமருது பொதுநூலகத்தின் செயற்பாடுகளில் ஒரு முக்கிய கட்டமாகவும், வாசிப்பு இயக்கத்தை மீளச் சீராக்கும் முயற்சியாகவும் திகழ்ந்திருந்தது. இங்கு வாசகர்கள், மாணவர்கள், நூலக உத்தியோகத்தர்கள் என பலரும் பங்குகொண்டிருந்தனர்.
.jpg)
0 comments :
Post a Comment