நுவரெலியா பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சதாசிவன், மலையக மக்கள் முன்னணியின் முன்னாள் பிரதி செயலாளர் பத்மநாதன், முன்னாள் அமைப்பு செயலாளர் நல்லமுத்து, மத்திய குழு உறுப்பினர் சந்திரமணி உட்பட மலையக மக்கள் முன்னணியின் 15 இற்கு மேற்பட்ட உறுப்பினர்கள், பொதுத்தேர்தலில் தமது ஆதரவை ஐக்கிய ஜனநாயக குரலின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் அனுஷா சந்திரசேகரனுக்கு வழங்கியுள்ளனர். அவரின் வெற்றிக்காக முழு ஆதரவு வழங்கப்படும் எனவும் உறுதிபூண்டுள்ளனர்.
அத்துடன், மலையக மக்கள் முன்னணியின் அலுவலக உத்தியோகத்தர்கள் சிலரும் அனுஷாவுக்கு நேசக்கரம் நீட்டியுள்ளனர்.
இவர்களுடன் இணைந்து நடத்தப்பட்ட ஊடக சந்திப்பின்போது அனுஷா சந்திரசேகரன் கூறியவை வருமாறு,
எமது மலையக மக்களும் மாற்றத்துக்கு தயாராகிவிட்டனர். பழைய முகங்களை அகற்றிவிட்டு, புதியவர்களை நாடாளுமன்றம் அனுப்புவதற்கு உறுதிபூண்டுள்ளனர். இது விடயத்தில் மக்கள் மிகவும் தெளிவாகவே உள்ளனர்.
கொள்கை அரசியலுக்காகவே மலையக மக்கள் முன்னணி எனது தந்தை மற்றும் அவரின் தோழர்கள் மற்றும் ஆரம்பகால செயற்பாட்டாளர்களின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டது. பல தியாகங்களுக்க, சவால்களுக்கு மத்தியில்தான் அக்கட்சி உருவாக்கப்பட்டது. அந்த கட்சி இன்று வியாபார நோக்கிலேயே பயணித்துக்கொண்டிருக்கின்றது. கொள்கை அரசியலைவிடுத்து வியாபார அரசியல் முன்னெடுக்கப்படுகின்றது.
இதனால் கட்சியில் இருந்து பலர் வெளியேறுகின்றனர். முன்னாள் பிரதேச சபை தலைவர், பிரதி தலைவர், உறுப்பினர்கள் மற்றும் கட்சி செயற்பட்டாளர்கள், உத்தியோகத்தர்கள் என பலரும் எனக்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.
ஐந்து வருடங்களுக்கு முன் இருந்த அதேநிலைதான் தோட்டப்பகுதிகளில் இன்று காணப்படுகின்றது. எனவே மலையக மக்களும் இன்று மாற்றத்துக்கு முழுமையாக தயாராகிவிட்டனர். மக்களுக்கு சேவைகளை செய்யாதவர்கள்தான் இன்று என்னை இலக்குவைத்து குறைகளைக்கூறிவருகின்றனர்." - என்றார்.
0 comments :
Post a Comment