முஸ்லிம் அரசியல் கட்சிகள் தம் கட்சிகளின் தீர்மானங்களுக்கேற்ப ஒவ்வொரு ஜனாதிபதி வேட்பாளர்களுடனும் ஒப்பந்தங்களை மேற்கொண்டு தங்கள் ஆதரவுகளை வழங்கி வருகின்ற நிலையில் அவ்வொப்பந்தங்களில் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கான தீர்வு உற்பட ஒட்டுமொத்த கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களுக்குமான அதிகாரத்தீர்வு விடயங்களும் உள்ளடக்கப்பட வேண்டுமென தொழில் வாண்மையாளர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.
அவ்வமைப்பின் தலைவர் யூ.எல்.எம்.என். முபீன் அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் காத்தான்குடியில் இடம்பெற்ற மாநாட்டிலே இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒவ்வொரு வேட்பாளர்களும் அரசியலமைப்பின் 13வது அரசியல் சீர்நிருத்தத்தை முழுமையாகவோ அல்லது பொலிஸ் காணி அதிகாரங்களின்றியோ முழுமையாக அமுல்படுத்தப்படுமென வாக்குறுதிகள் அளித்திருக்கின்ற நிலையில் இந்த 13வது அரசியல் சீர்திருத்தத்தில் முஸ்லிம் மக்களுக்கான அதிகாரப்பகிர்வு.தொடர்பில் எவ்விதமான அதிகாரப்பரவலாக்கமும் காணப்படவில்லை.
தற்போதைய சூழலில் அவ்வரசியலமைப்பு சீர்திருத்தமானது முழுமையாக அமுலில் இல்லாத நிலையிலும் மாவட்ட அரச நிர்வாகத்தின் பாரபட்சமான நடவடிக்கைகள் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் மக்களின் அடிப்படைத்தேவையான காணி உரிமை தொடர்பில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக அண்ணளவாக 28 சதவீதசனத்தொகைப் பரம்பலைக்கொண்ட முஸ்லிம் மக்கள் வெறுமனே 1.4 சதுரக்கிலோமீற்றருக்குள் வாழ்ந்து வருகின்ற நிலையில் 72 சதவீத சனத்தொகையினை கொண்ட ஏனைய இனத்தவர்கள் 98 அளவிலான நிலப்பரப்பினைக்கொண்டுள்ளனர். இது மிகவும் துர்ப்பாக்கியமான நிலையாகும்.
மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் நிலப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் பனம்பலன எல்லை.நிர்ணய ஆணைக்குழுவினால் பரிந்துரை செய்யப்பட்ட கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்துக்கான காணிப்பங்கீட்டுக்கு அமைச்சரவையானது அங்கீகரித்த போதிலும் இன்று வரை அது திட்டமிட்ட வகையில் மாவட்ட செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்படவி்ல்லை.
மேலும் காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவு தொடர்பில் வெளியிடப்படுள்ள காத்தான்குடி பிரதேச சபை, நகர சபை மற்றும் பிரதேச செயலக வர்த்தமாணி அறிவித்தல்களில் அப்பிரதேச எல்கைள் தொடர்பில் மிகத்தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. எனினும் குறித்த பிரதேசத்துக்குரிய எல்லைகளை எவ்வித அடிப்படைகளுமின்றி வேறு பிரதேச செயலகங்கள் நிர்வகித்து வருகின்றன. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் வெளியடப்பட்டுள்ள புள்ளிவிபரத்தரவுகளில் ஆரம்பத்தில் காத்தான்குடி பிரதேசத்துக்குரிய காணிப்பரப்பளவு அதிகமாக காட்டப்பட்டு பின்னர் எவ்வித அடிப்படைகளுமின்றி நியாயமான காரணங்கள் இன்றியும் காணிப்பரப்பளவு திட்டமிட்ட அடிப்படையில் குறைவாகக் காட்டப்படுகின்றது.
அதுபோலவே ஏறாவூர் நகர பிரதேச செயலகத்துக்குற்பட்ட கிராம சேவகர் பிரிவுகளுக்கான அதிகார நிர்வாக நடவடிக்கை, கோரளைப்பற்று மத்தி மற்றும் கோரளைப்பற்று மேற்கு ஆகிய பிரதேச செயலக கிராம சேவகர் பிரிவுகளுக்கான அதிகார நிர்வாக நடவடிக்கை போன்றவற்றிலும் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன.
இவ்வாறான மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கான தீர்வு உற்பட அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்ட முஸ்லிம் மக்களின் பாரிய அடிப்படைப்பிரச்சினைகள் தொடர்பிலான தீர்வுகள் தொடர்பிலான முன்வைப்புகளும் பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களுடனான ஒப்பந்தங்களில் இடம்பெற வேண்டுமென இங்கு வலியுறுத்தப்பட்டது.
மேலும் போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பது நிச்சயமானது, அதனை தமது அமைப்பு மீண்டும் வலியறுத்துவதோடு அந்த தீர்வில் முஸ்லிம் மக்களுக்கான நிர்வாக ரீதியான தீர்வும் வழங்கப்பட வேண்டுமென்றும் இவ் ஊடக சந்திப்பில் வலிறுத்தப்பட்டது.
இவ் ஊடக சந்திப்பில் அமைப்பின் உப தலைவர் அஷஷெய்க். எம். ஜாபிர் (நளீமி) மற்றும் அமைப்பின்.பொருளாளர் எம்.வை. ஆதம் ஆகியோரும் கருத்துரைத்தனர்.
0 comments :
Post a Comment